பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்தவர் வாசன்.. குடும்ப அரசியலை எதிர்க்கும் பாஜக தலைவர் வாயார புகழாரம்
சென்னை: பாஜக தலைவர்கள் பலரும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை குடும்ப அரசியல் செய்வதாக விமர்சிப்பது ஒருபுறம் இருக்க, "பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஜிகே வாசன்" எனக் கூறி அவரை வானளாவப் புகழ்ந்து, கூட்டணிக்கு வரவேற்றுள்ளார் அண்ணாமலை.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமாகா தலைவர் ஜிகே வாசன், "மக்களவை தேர்தலை பாஜக உடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் எதிர்கொள்ளும். பிரதமர் மோடி நாளை பங்கேற்கும் பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறேன். வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அளித்து பாஜக கூட்டணியில் இடம்பெறுகிறோம்." எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை பிரஸ் மீட்: இதைத்தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்னாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமாகா தலைவர் ஜிகே வாசன் உடன் இருந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைவதாக ஜிகே வாசன் அறிவித்த நிலையில், வாசனை புகழ்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார் அண்ணாமலை.
புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை: அண்ணாமலை பேசுகையில், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு என தனிப்பெருமை ஒன்று உள்ளது. பிரதமர் மோடியை விட்டு ஜிகே வாசன் எங்கேயும் சென்றதில்லை. பெரிய மாற்றத்துக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டு இருக்கிறது. வாசன் அய்யாவின் ஆலோசனையின் பேரில் அடுத்த 100 நாட்கள் தமிழ்நாட்டில் தேர்தல் களத்தைப் பார்ப்பீர்கள். எங்களை வழிநடத்தக் கூடிய நபராக ஜி.கே.வாசன் இருக்கப் போகிறார்.
பிரதமர் மோடி பெரிதும் மதிக்கக்கூடிய தலைவர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் இருக்கக்கூடிய தலைவர் வாசன். பொய் சொல்லத் தெரியாத தலைவர் ஜிகே வாசன். தனது தந்தை என்னவெல்லாம் கனவு கண்டாரோ அதையெல்லாம் தமிழ்நாட்டில் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடியோடு கை கோர்த்துச் செயல்படுகிறார்.
பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர்: ஜிகே வாசன் பொய் சொல்லத் தெரியாத நேர்மையான மனிதர். மூப்பனார் ஐயா கனவு கண்ட தமிழகத்தை உருவாக்குவதற்கான பெரிய இணைப்புப் பாலத்திற்கு ஜிகே வாசன் அடிக்கல் நாட்டியுள்ளார். பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஜிகே வாசன்." என வானளாவப் புகழ்ந்து பேசினார் அண்ணாமலை.
வாரிசு அரசியல் விமர்சனங்கள்: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர். செல்லும் இடங்களில் எல்லாம், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் வாரிசு அரசியலை விமர்சிப்பதே பாஜக தலைவர்களின் வழக்கமாக உள்ளது.
அண்மையில் சென்னை வந்த ஜேபி நட்டா கூட, DMK-வில் இருக்கும் D என்பதே Dynasty Politics (வாரிசு அரசியல்) எனப் பேசினார். பிரதமர் மோடி, தான் செல்லும் இடங்களில் எல்லாம், திமுகவில் குடும்ப அரசியல் நிலவுவதாக விமர்சிக்கிறார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், திமுக வாரிசு அரசியல் செய்வதாக பல இடங்களில் விமர்சித்துள்ளார்.
வாரிசு அரசியலின் எதிரி பாஜக என பாஜக தலைவர்கள் பேசி வரும் நிலையில், மறைந்த அரசியல் தலைவரான ஜிகே மூப்பனாரின் வாரிசான ஜிகே வாசனை தங்கள் கூட்டணியில் இணைத்துக்கொண்டு, ஜிகே வாசனை வெகுவாகப் புகழ்ந்து அண்ணாமலை பேசியிருப்பது விமர்சனங்களைக் கிளப்பி விட்டுள்ளது.












Click it and Unblock the Notifications