Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாட்டியாஞ்சலி நடைபெறவிடாமல் தடுத்தது யார்? TN Fact Check குழுவுக்கு அண்ணாமலை பதில்.. வெடித்த சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்துவிட்டு, தற்போது தமது இந்து மத விரோதப் போக்கு பொதுமக்களுக்குத் தெரிய வந்ததும், இதற்கு சம்பந்தமே இல்லாத தொல்லியல் துறையின் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளப்பார்க்கிறது திமுக அரசு என காட்டமாக விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி நிகழ்வு இந்த ஆண்டு சிவராத்திரி அன்று நடைபெறாத நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. நாட்டியாஞ்சலி நிகழ்வுக்கு திமுக அரசு அனுமதி மறுத்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்ட, தமிழக அரசின் உண்மை சரிபார்க்கும் குழுவோ, நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்தது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறைதான் என பதில் அளித்தது. இந்நிலையில், மீண்டும் தமிழக அரசை விமர்சித்துள்ளார் அண்ணாமலை.

Annamalai reply to tn fact check committee about thanjavur natyanjali

அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு: முன்னதாக அண்ணாமலை வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழா சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. உலகெங்கும் உள்ள நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று, தஞ்சைப் பெருவுடையாருக்கும், மாமன்னர் ராஜராஜ சோழனுக்கும் தங்கள் நடனத் திறனால் மரியாதை செய்வது மரபு. இந்த ஆண்டு, சிவராத்திரி அன்று நடைபெற இருந்த நாட்டியாஞ்சலி விழாவுக்கு, இந்து மத விரோத திமுக அரசு அனுமதி மறுத்ததால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஆலய நடைமுறைகளிலும், இந்து மத நம்பிக்கையிலும் தொடர்ந்து தலையிட்டு வரும் திமுக, தற்போது ஒரு படி மேலாக, தஞ்சை பெருவுடையார் கோவில் நிகழ்வுகளிலும் தலையிட்டு, மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு ஆண்டாண்டு காலமாக நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவுக்கும் அனுமதி மறுத்திருப்பது, திமுகவின் இந்து மத வெறுப்பைக் காட்டுவதோடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் பெருமைக்குரிய அடையாளமான தஞ்சாவூர் பெரிய கோவிலையும் அவமானப்படுத்தும் நோக்கத்தையும் காட்டியிருக்கிறது.

உடனடியாக, தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவை, ஒவ்வொரு ஆண்டையும் போல, ஆலய வளாகத்திலேயே நடைபெற அனுமதிக்க வேண்டும் என்றும், திமுகவின் இந்து மத விரோதப் போக்கை, உலகெங்கும் இருந்து, தஞ்சாவூர் வந்து, பெருவுடையார் கோவில் வளாகத்தில் தங்கள் நடனத் திறன் மூலம் மரியாதை செலுத்த வந்திருக்கும் நடனக் கலைஞர்களிடத்தும், பக்தர்களிடத்தும், தங்கள் அராஜகப் போக்கினைக் காட்ட முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கிறேன்." என்று தெரிவித்திருந்தார்.

தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்: சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற இருந்த நாட்டியாஞ்சலி விழாவுக்கு, திமுக அரசு அனுமதி மறுத்ததால், விழா ரத்து செய்யப்பட்டிருக்கிறது என அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். அண்ணாமலை தெரிவித்திருப்பது உண்மை அல்ல என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்தது.

நாட்டியாஞ்சலி விழாவை தமிழ்நாடு அரசு ரத்து செய்யவில்லை. நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்தது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறைதான். தஞ்சை பெருவுடையார் கோவிலில் சிவராத்திரி அன்று நிகழ்ச்சிகள் நடத்த, இந்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளது.

அண்ணாமலை சொன்னது உண்மை அல்ல: ஆகையால்தான், 20 ஆண்டுகளாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி இந்த ஆண்டு நடைபெறவில்லை. எனவே, அண்ணாமலை கூறிய தகவல் உண்மையல்ல!" என்று உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் கொடுத்துள்ளது. நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ரத்து தொடர்பாக இந்திய தொல்லியல் துறை அனுப்பிய கடிதத்தையும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு வெளியிட்டது.

மீண்டும் அண்ணாமலை பதில்: இதைத்தொடர்ந்து மீண்டும் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. அதில், "தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற காரணம் கூறி, இருபது ஆண்டுகளாக ஆலய வளாகத்தில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்துவிட்டு, தற்போது தனது இந்து மத விரோதப் போக்கு பொதுமக்களுக்குத் தெரிய வந்ததும், இதற்கு சம்பந்தமே இல்லாத தொல்லியல் துறையின் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது திமுக அரசு.

ஆலய வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழா நடத்துவதற்கு அனுமதி மறுத்துவிட்டு, கடந்த பல ஆண்டுகளாக இல்லாத வகையில் அவசரகதியில், தொல்லியல் துறைக்கு ஒரு கடிதம் எழுதி, அதற்குக் கிடைத்த பதில் கடிதத்தைக் காரணம் காட்டி, பழியை, தொல்லியல் துறையின் மீது போட்டிருப்பது, திமுக அரசின் வெட்கக்கேடான செயல்.

வெட்கக்கேடு: நாட்டியாஞ்சலி விழாவுக்கு, தொல்லியல் துறையின் அனுமதி பெறுவது தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறையின் கீழ் வரும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம்தானே தவிர, தனியார் நிறுவனங்கள் நேரடியாகத் தொல்லியல் துறையிடம் அனுமதி கோருவது இல்லை. தமிழகம் முழுவதும் ஆலயங்களில், தனியார் நிறுவனங்கள், அறநிலையத் துறையின் உபயதாரராகவே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், உபயதாரர்கள் நடத்தும் நிகழ்ச்சிதானே தவிர, தனியார் நிகழ்ச்சி அல்ல. இதனை மறைத்து, புதிய கதை கூறியிருக்கிறது திமுகவின் உண்மை (?) கண்டறியும் குழு.

மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் வரும் தென்மண்டல கலாச்சார மையம், பிப்ரவரி 14, 2024 தேதியிட்ட கடிதத்தில், நாட்டியாஞ்சலி விழா நடத்துவது, திமுக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் பொறுப்பு என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதோடு, நாட்டியாஞ்சலி விழா நடைபெறவிருக்கும் நாட்களில், தங்கள் சார்பில் எந்த நிகழ்ச்சிகளும் ஆலயத்தில் நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

ஆனால், திமுக அரசு, 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி விழாவைத் தடைசெய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, தனது இந்து மத விரோதச் செயல்பாடுகளுக்குத் துணையாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறது.

திமுகவின் உண்மையான நோக்கம்: உலகெங்கும் உள்ள நாட்டியக் கலைஞர்கள், தங்கள் கலைத்திறனால் பெருவுடையாருக்கும், ராஜராஜசோழனுக்கும் மரியாதை செலுத்தும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, ஆலய வழிபாடு தொடர்பான நிகழ்ச்சி இல்லை என்று கூறுகிறதா திமுக அரசு? 2010 ஆம் ஆண்டு முதல், கடந்த 13 ஆண்டுகளாக, நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றபோது, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதவில்லை என்பதில் இருந்தே தெரிகிறது திமுகவின் உண்மையான நோக்கம்.

இருபதாண்டு காலமாக ஆலய வளாகத்தில் நடைபெற்று வந்த நாட்டியாஞ்சலி விழாவினைத் தடை செய்தது முழுக்க முழுக்க திமுக அரசின் இந்து மத விரோதப் போக்கே தவிர, வேறொன்றுமில்லை. திமுக அரசின் செய்தி தொடர்பு நிறுவனமாக பணிபுரியும் ஒரு கும்பல் தொடர்ச்சியாக தவறான செய்திகளை பரப்புவதை மட்டுமே முழு நேரமாக வைத்துள்ளனர். இதை திமுக சமூக ஊடகவியலாளர்கள் முழு நேர பணியாக செய்யும் போது இந்த பொய்களை பரப்பும் குழுவின் அவசியம் என்ன என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது." என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+