“கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதியை கூட முதல்வர் ஸ்டாலின் படிக்கல போல.. வருத்தம்ப்பா” : அண்ணாமலை
சென்னை: கருணாநிதி எழுதிய சுயசரிதையான 'நெஞ்சுக்கு நீதி'யைக் கூட முதல்வர் ஸ்டாலின் படித்ததில்லை என்பது வருத்தமாக உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆளுநர் ஆஎன் ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தார். இது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில், தமிழக சட்டசபையின் 3ஆவது நாள் அமர்வு இன்று காலை தொடங்கியது. இன்றைய தினம் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தனித் தீர்மானத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை ஆதரித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். இந்த நிலையில் முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்பா எழுதியதை கூட முதல்வர் ஸ்டாலின் படிக்கவில்லை: இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ சமூக வலைதள பதிவில், "ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து திமுக அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. சுதந்திர இந்தியாவில் முதல் 4 தேர்தல்கள் மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே சமயத்தில் தான் நடந்தது என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் மறந்து இருக்கலாம்.
ஆனால், அவரது தந்தையும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி அவர்கள் எழுதிய சுயசரிதையை கூட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் படித்ததில்லை என்பது உள்ளபடியே வருத்தம்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தலை பற்றி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்தது பற்றியும் குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.

"ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களை சந்திக்கும் நிலையால் ஆட்சி இயந்திரம் சரிவர செயல்படாதிருக்கலாம். எடுத்த கொள்கை முடிவுகளை ஆட்சி இயந்திரம் வாயிலாக நிறைவேற்ற முடியாத தேக்க நிலை ஏற்படவும், பொதுமக்களுக்கு சங்கடங்களை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று கருதுகிறேன்." நெஞ்சுக்கு நீதி - இரண்டாம் பாகம் பக்கம் 273 ல் கருணாநிதி தான் பத்திரிகையாளர்கள் மற்றும் திமுகவினரிடம் பேசியதை பற்றி எழுதியுள்ளார் என அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் பின்னணி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மக்களவைக்கும் மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறை. அப்படி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டால் வாக்காளர்கள் ஒரே நேரத்தில் எம்.பி தேர்தலுக்கும் எம்எல்ஏ தேர்தலுக்கும் என 2 வாக்குகளை செலுத்த வேண்டும். இரு தேர்தல்களை ஒன்றாக நடத்தினால் தேர்தல் செலவு குறையும் என்பது மத்திய அரசு எடுத்துரைக்கும் விஷயம்.
சுதந்திரத்திற்குப் பிறகு நம் நாட்டில், கடந்த 1967 ஆம் ஆண்டு வரை லோக்சபாவிற்கும் சட்டசபைகளுக்கும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு 1968, 1969ஆம் ஆண்டுகளில் சில மாநிலங்களில் ஆட்சி கலைக்கப்பட்டது. அதனால், அங்கு தனியாக தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டசபைக்கும் மக்களவைக்கும் தேர்தல்கள் தனித்தனியே நடத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் தான், மீண்டும் ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றது முதல் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில்தான் இன்று தமிழக சட்டசபையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications