சிபிஐயில் வழக்குப்பதிவு செய்வேன்! ஆர்.எஸ்.பாரதி என்ன அவங்க அப்பாவே வந்தாலும் சந்திக்க ரெடி: அண்ணாமலை
சென்னை : "பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம். ஆர்.எஸ்.பாரதி மட்டுமல்ல, அவர் தந்தையே வந்தாலும் சந்திக்கத் தயார். யாரும், எங்கும் தப்பிச் செல்ல முடியாது" என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுகவினரின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார். திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள் என பலரது சொத்து விவரங்கள் எனக் குறிப்பிட்டு 1.34 லட்சம் கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதாக DMK Files முதல் பாகம் என்று ஒரு வீடியோவை வெளியிட்டார் அண்ணாமலை.

திமுக சவால் : இதையடுத்து, திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அண்ணாமலை எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் தெரிவிக்கவில்லை. அண்ணாமலை யார் யார் மீது குற்றம் சாட்டியுள்ளாரோ, அவர்கள் அண்ணாமலை மீது வழக்கு தொடருவார்கள் என்றார்.
மேலும், இனிமேல், பாஜகவுக்காக சுற்றுப்பயணம் செய்வதைவிட, நீதிமன்றங்களுக்கு அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்வதுதான் அதிகமாக இருக்கும். திமுகவுக்கு சொந்தமாக ரூ.3,418 கோடி மதிப்பில் பள்ளிகள் உள்ளதாகவும் ரூ.34,184.71 கோடியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவற்றுக்கான ஆதாரங்களை 15 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என சவால் விடுத்தார்.

பூச்சாண்டி வேலை: இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "DMK Files சொத்து பட்டியல் வெளியிட்டு 24 மணி நேரம் முடிந்த நிலையில், இதுவரை யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. இன்னும் பல ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிட தயாராக இருக்கின்றோம். ஊழல் செய்த யாரும் தப்ப முடியாது.
வழக்கு தொடுக்கிறேன் என திமுகவினர் என்னிடம் பூச்சாண்டி வேலை எல்லாம் காட்ட வேண்டாம். அடுத்த வார இறுதிக்குள் டெல்லி சென்று திமுகவினரின் ஊழல் பட்டியல் தொடர்பாக சிபிஐயில் முறையாக வழக்குப்பதிவு செய்ய உள்ளேன். இதை அப்படியே விடப்போவது இல்லை. என்னுடைய போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தப்பிக்க முடியாது : ஆர்.எஸ்.பாரதி, கோர்ட் கோர்ட்டாக அண்ணாமலை சுற்றுப்பயணம் செல்வார் எனச் சொன்னதாக கேள்விப்பட்டேன். அப்படி சென்றும் கூட கட்சியை வளர்க்கலாம். நீதிமன்றத்தில் இன்னும் அதிகப்படியான ஆதாரங்களை கொடுக்க இருக்கிறோம். ஆர்.எஸ்.பாரதி மட்டுமல்ல, அவர் தந்தையே வந்தாலும் சந்திக்கத் தயார். யாரும், எங்கும் தப்பிச் செல்ல முடியாது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications