“மார்ச் 5 ஆம் தேதி வரை தான் டைம்” - தேர்தல் நேரத்தில் கெடு விதித்த அண்ணாமலை!
திண்டுக்கல்: பழனியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்து நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மார்ச் 5ஆம் தேதிக்கு முன்பாக பழனியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கெடு விதித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பழனியை பிரித்து பழனியை தலைமையிடமாக கொண்டு பழனி மாவட்டம் அறிவிக்கப்படும் என கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் தற்போது வரை பழனியை தனி மாவட்டமாக அறிவிக்கவில்லை.

இதையடுத்து பழனியை தனி மாவட்டமாக அறிவிப்பதாக வாக்குறுதி அளித்து நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் பழனி பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினரும், பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவருமான கனகராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்த போராட்டத்திற்குப் பிறகு வருகிற 30 நாட்களுக்குள் பழனியை மாவட்டமாக திமுக அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லையென்றால் சட்டமன்ற தேர்தலில் நிற்க திமுகவிற்கு தகுதி இல்லை. பழனியும், பழனி வாழ் மக்களும் வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் தமிழகத்தின் 39வது மாவட்டமாக பழனியை அறிவிக்க வேண்டும்.
மார்ச் 5 ஆம் தேதிக்கு முன்பாக பழனியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து பழனியை மாவட்டமாக அறிவிக்கப்படும். பழனி நகரம் கோவில் நகரமாக இல்லை.. குப்பை நகரமாக மாற்றி உள்ளது. 50 ஆயிரம் பேரில் இருந்து 3லட்சம் பேர் வசிக்கும் தூய்மையான நகரத்தில் இந்தியாவிலேயே பழனி 585வது இடத்தில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களும் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்களே தவிர நன்மை செய்வது பற்றி எதுவுமில்லை.
தமிழகத்தின் நம்பர் ஒன் மாவட்டம் ஒன்பது கோவை தான். சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது. திண்டுக்கல் 35 ஆயிரம் கோடி ரூபாய் உற்பத்தி திறன். கருணாநிதி பிறந்த இடம், சட்டமன்ற உறுப்பினராக இருந்த இடம் என்று பார்த்து மாவட்டம் பிரிக்கப்படுகிறதே தவிர, மாவட்டத்தின் வருவாய், உற்பத்தி திறன் பார்த்து மாவட்டம் பிரிப்பதில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனக்கு தேவையான இலாகா கொடுக்கவில்லை எனக் கூறி சென்னையில் விடுதியில் அறை எடுத்து தங்கி தனக்கு வேறு இலாகா கேட்டு மிரட்டினார்.
கொள்ளை அடிப்பதற்காகவே திமுகவில் அமைச்சர்கள் இலாகாக்கள் கேட்கிறார்களே தவிர மக்கள் நலன் கருதி திமுக அமைச்சர்கள் இலாகாக்கள் கேட்பதில்லை. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக பழனியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதே நிலைப்பாடு. பொதுமக்கள் துணையோடு அதற்கு போராடி வெற்றி பெறவேண்டும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் கையெழுத்து போட்டு ஆளுநருக்கு அனுப்பும் வகையில் கையெழுத்து இயக்கம் துவங்கவேண்டும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கும்பாபிஷேகத்திற்கும் கோவில் புனரமைப்பிற்கும் ஆண்டிற்கு 50 கோடி ருபாய் ஒதுக்குவதாக வாக்குறுதி அளித்த திமுக இதுவரை 4 ஆண்டுகளில் 82 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி உள்ளது. யாரோ ஒரு பக்தர் கொடுத்த பணத்தில் நடத்தப்படும் கும்பாபிஷேகத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல்லி போல் கோபுரம் அருகே ஒட்டிக்கொண்டு இருப்பார்.
திருப்பதி கோவிலில் நடைபெறும் பணிகள் வருமானம் வெளிப்படைத்தன்மையுடன் உள்ளது. ஆனால் பழனி கோவில் குறித்து எதுவுமே வெளிப்படையாக கிடையாது. உண்டியல் வருவாய் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இரண்டு கோடி ரூபாய் எனக் கூறுவதை தவிர வேறு ஒன்றும் இல்லை. பழனியை பொறுத்தவரை கோவில் என்ற அடையாளத்தை தாண்டி பொருளாதாரத்தில் முன்னேறுவது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவை வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
பழனி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் என்று யாராவது வந்தால் பொதுமக்கள் அவர்களை விடக்கூடாது. தமிழக முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு தேர்வாணையம் செய்த குளறுபடியால் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். நீட் தேர்வை நிறுத்துவதாக கூறிவிட்டு டிஎன்பிஸ்சி தேர்வை நிறுத்தி வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அமைச்சர் கே.என் நேரு 888 கோடி ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு பணி வழங்கியுள்ளதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டியுள்ளது. அதிகாரிகள் இடமாற்றத்தில் ஊழல், டெண்டர் அடிப்படையில் பணி கொடுப்பதில் ஊழல் என ஒரு துறையிலேயே இவ்வளவு ஊழல்” எனக் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications