“மூக்கு வேர்த்திருச்சே..” ஏன் இவ்வளவு பதட்டம்? ஓ.. இதான் காரணமா? - திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி!
திமுக அரசை சமூக வலைத்தளங்களில் விமர்சித்தாலே கைது நடவடிக்கை மேற்கொள்ளும் திமுகவுக்கு, ஜனநாயகத்தைப் பற்றி பேச தகுதி இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
சென்னை : டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில், அம்மாநிலத்தின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்ததற்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்திருந்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தற்போது எதிர்க்கட்சிகளை நோக்கி மிக வேகமாக அராஜகமாக நீண்டு வருகிறது எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், திமுகவுக்கு பதிலடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

மணிஷ் சிசோடியா கைது
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் ஆம் ஆத்மி அரசு, நவம்பர் 21, 2021ஆம் ஆண்டு கொண்டு வந்த புதிய மதுபானக் கொள்கை முறைகேடுகள் காரணமாக, டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, 2021 ஆம் ஆண்டு நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. இதன் அடிப்படையில் 800க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் ஐஏஎஸ் புதிய மதுபானக் கொள்கை குறித்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி நகர மேயர் மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் ஆகியோருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையை மையமாக வைத்து, புதிய மதுபானக் கொள்கையைப் பற்றி விசாரிக்க, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் ஆணையிட்டார்.

அரசுக்கு இழப்பு
லஞ்ச ஒழிப்புத் துறையின் அறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு: மதுபான சில்லறை விற்பனை உரிமம் பெற்றவர்கள், டெல்லி கலால் விதிகள் 2010 ஐ மீறி பல்வேறு வழிகளில் மதுபான விளம்பரம் செய்துள்ளனர். இந்த விதிமீறலுக்கு அபராத நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது. வெளிநாட்டு மதுபானங்களின் விலையை மாற்றியமைத்தும், இறக்குமதி அனுமதி கட்டணத்தை நீக்கியதன் மூலமாக மதுபான உரிமைதாரர்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. புதிய மதுபானக் கொள்கையானது. மதுக் கடைகளின் விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை, அமைச்சரவை ஒப்புதல் பெறாமலும், துணை நிலை ஆளுநர் கருத்தைக் கேட்காமலும் 21-ல் இருந்து மூன்றாகக் குறைத்தது.

இதுதான் நடைமுறை
இந்த நிலையில் தான், துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவை சிபிஐ 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிஷ் சிசோடியா காலை 11 மணிக்கு சிபிஐ தலைமை அலுவலகம் வந்தார். அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மனிஷ் சிசோடியா அளித்த பதில் திருப்திகரமாக இல்லை. விசாரணைக்கு ஒத்துழைக்கவும் இல்லை என்றும். ஆதாரங்களைக் காட்டி கேள்வி எழுப்பப்பட்ட போதும் மழுப்பலான பதில்களை அளிப்பதால், காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என்று அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். இது விசாரணை அமைப்புகளின் பொதுவான நடைமுறையே.

திமுகவுக்கு ஏன் பதட்டம்?
டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் இத்தனை முறைகேடுகள் நடந்திருக்க, மனிஷ் சிசோடியா கைதை, ஜனநாயக விரோதம், சட்ட விரோதம் என்று விமர்சித்திருக்கிறார் திமுக எம்பி டிஆர் பாலு. எப்போதெல்லாம் நம் நாட்டில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதோ, உடனடியாக, திமுகவினருக்கு, அவர்கள் கட்சியின் தலைவர்கள், அமைச்சர்கள், வாரிசுகள் மேல் இருக்கும் ஊழல் வழக்குகளும், அமலாக்கத்துறை வழக்குகளும் ஞாபகத்துக்கு வந்து, மூக்கு வியர்க்கும். மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே.. திமுக அமைச்சர்களும், எம்பிக்களும் அமலாக்கத் துறை விசாரணைக்குப் போய் வந்து கொண்டு இருப்பது பொதுமக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். டிஆர் பாலுவுக்குத் தெரியாமல் இருக்குமா? நாளை அவரது கட்சியிலும் யாராவது கைதாகும் நிலை வந்தால், மற்ற கட்சிகளின் ஆதரவு வேண்டுமே என்று பெயருக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

மக்கள் மறக்கவில்லை
திமுக அரசையோ, முதலமைச்சரையோ சமூக வலைத்தளங்களில் விமர்சித்தாலே கைது நடவடிக்கை மேற்கொள்ளும் திமுகவுக்கு, ஜனநாயகத்தைப் பற்றி எல்லாம் பேசத் தகுதி இருக்கிறதா? ஆட்சிக்கு வந்ததும், முந்தைய அதிமுக அரசின் அமைச்சர்கள் மேல் லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவி விட்டதெல்லாம் மக்கள் மறந்து விடவில்லை. மதுபான சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள், அவர்கள் பலன் பெறும் வகையில், வழங்கப்பட்ட கால அளவை விட கூடுதல் நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. கட்டணம் வசூலிக்காமல், உரிமக் காலத்தை நீட்டித்ததால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி, ஜனவரி 2022 ல் ரூ.144.36 கோடி மதிப்பிலான மது விற்பனை உரிமக் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிபலன்
மனிஷ் சிசோடியா விதிமுறைகளை மீறி, பல தனியார் நிறுவனங்களுக்கு மது விற்பனை உரிமங்களைக் கொடுத்தாகவும், அதன் பிரதிபலனாக, கோவா மற்றும் பஞ்சாப் மாநிலத் தேர்தல் செலவுக்கு, பல நூறு கோடி ரூபாய்கள் அந்தத் தனியார் நிறுவங்களிடம் இருந்து ஆம் ஆத்மி கட்சி பெற்றதாகவும், அரசுக்கு சுமார் 2800 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவித்த லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, சிபிஐ வழக்கு தொடர்ந்து விசாரணையைத் தொடங்கியது. விசாரணையில் கிடைத்த பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில், டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து, அவர் உள்ளிட்ட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. தொழிலதிபர்கள் மற்றும் 2 மதுபான 9 ஆலைகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து 9 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இரண்டு குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

தொடரும்
இந்த குற்றப் பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள் மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகளும் தெலுங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 23ஆம் தேதி டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், விசாரணை அமைப்புகள், சுதந்திரமாகவும், முழு அதிகாரத்துடனும் செயல்பட்டு வருகின்றன. குற்றம் செய்தவர்கள், நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டு, அதற்கான தண்டனை பெறுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது தொடரும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications