"ஸ்டாலின் குடும்பத்துக்கு பலன் கொடுக்கும் விண்வெளி தொழில் கொள்கை”.. உடனே பாய்ந்து வந்த அண்ணாமலை
சென்னை: தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த கொள்கையே முதல்வர் ஸ்டாலின் குடும்பம் பலன் அடைவதற்காக உருவாக்கப்பட்டது என விமர்சித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று மாலை தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இந்த கேபினட் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி தொழில் கொள்கை 2025க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி தொழில் கொள்கை
அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளித் துறையில் ரூ. 10,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பது முக்கிய இலக்கு. குறைந்தபட்சம் 10,000 நபர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், விண்வெளித் துறைக்கு திறமை வாய்ந்த, தகுதியான நபர்களை உருவாக்குவது இந்த விண்வெளி தொழில் கொள்கையின் முக்கிய அம்சம்.
விண்வெளித் துறையில் பெரும்பாலும் நமது கவனம் உற்பத்தி சார்ந்து இருக்கும். ஆனால், இந்த முறை சேவையிலும் நமது கவனத்தை செலுத்த வேண்டும் என்பதற்காக அமைச்சரவையில் முதலமைச்சரின் அறிவிப்பின் பேரில் இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பு விண்வெளித் துறையில் இந்தியா மற்றும் உலக அளவில் இருக்கும் போட்டியில் தமிழ்நாட்டின் பாய்ச்சலுக்கு உத்வேகத்தை கொடுக்கக் கூடிய வகையில் இந்த கொள்கை உள்ளது.
உலக அளவில் எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு போட்டியாக தமிழ்நாட்டில், சென்னையில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எனவே இதுபோன்ற நிறுவனங்களை ஊக்குவிக்க இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினருக்கு விண்வெளி துறை சார்ந்த நிறுவனங்களை உருவாக்கக்கூடிய வகையில் இந்த அறிவிப்பு மாபெரும் அறிவிப்பாக விளங்கும் எனத் தெரிவித்தார்.
அண்ணாமலை விமர்சனம்
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கை 2025க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இந்தத் தொழில்துறை கொள்கையை கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை என்று அழைப்பதே பொருத்தம் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
The Tamil Nadu Space Industrial Policy released yesterday was expected ever since TN CM Thiru @mkstalin’s son-in-law floated a space-tech startup. Thiru Sabareesan, the shadow CM of TN, is the designated partner of Vaanam Space LLP, incorporated on 22.07.2024.
— K.Annamalai (@annamalai_k) April 18, 2025
With this firm… pic.twitter.com/4OyZQYZP5T
அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு விண்வெளி தொழில்துறை கொள்கை எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தின் நிழல் முதல்வர் சபரீசன், 22.07.2024 அன்று முதல் வானம் ஸ்பேஸ் எல்எல்பியின் நியமிக்கப்பட்ட பங்குதாரராக உள்ளார்.
கோபாலபுரம் குடும்பத்தின் தொழில் கொள்கை
இந்த நிறுவனம் 20% மூலதன மானியத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தத் தொழில்துறை கொள்கையை கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை என்று அழைப்பது தான் பொருத்தமானதாக இருக்கும்.
தமிழ்நாடு போதிய முதலீடுகள் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளது, 2025 ஆம் நிதியாண்டில் புதிய முதலீடுகளுக்காக போராடி வருகிறது. இதோ ஒரு சர்வாதிகார அரசு அவரது குடும்பத்திற்கு பயனளிக்கும் வகையில் ஒரு தொழில்துறை கொள்கையை வெளியிடுகிறது. அவமானம்!" என காட்டமாக விமர்சித்துள்ளார்.
வானம்
வானம் என்கிற தனியார் விண்வெளி மையத்தை முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தம்பி ஹரிஹரன் மற்றும் சமீர் பாரத் ராம் ஆகியோர் சேர்ந்து தொடங்கி உள்ளனர். சபரீசன் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஆலோசகராகவும் உள்ளதாக கூறப்படுகிறது. விண்வெளி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக எடுத்துச் செல்லும் இந்தியாவின் முதல் நிறுவனமாக வானம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications