தமிழ்நாடு வந்திறங்கியதும் விஜய்யை விமர்சித்த அண்ணாமலை.. என்ன சொல்லியிருக்காருனு பாருங்க
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியல் படிப்புக்காக கடந்த மூன்று மாதங்கள் லண்டன் சென்றிருந்தார். படிப்பு முடிந்து அவர் இன்று தமிழ்நாடு திரும்பியுள்ளார். சென்னை வந்த அண்ணாமலை விஜய் அரசியல் என்ட்ரி தொடங்கி புயல் எச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "மூன்று மாதம் வெளிநாட்டில் சென்று படிப்பதற்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது. கட்சியும் பெரிய மனது வைத்து அனுமதி வழங்கினர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் கீழ் தான் இந்த மூன்று மாதம் படித்தேன். என் அரசியலை இன்னும் மேம்படுத்துவதற்கு இது உதவியது. இந்த மூன்று மாத காலத்தில் நிறைய அரசியல் மாற்றம் நடந்துள்ளது.

நடிகர் விஜய் தன் உச்சத்தை விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். அவரின் வருகையை நான் வரவேற்கிறேன். விஜய் திராவிட கட்சிகள் பேசும் சித்தாந்தத்தை தான் பேசுகிறார். புதிதாக எதுவும் இல்லை. விஜய்யின் கொள்கை கிட்டத்தட்ட திராவிட கட்சிகளின் கொள்கைகளை ஒத்துப்போகிறது. இதனால் யாருக்கு பாதிப்பு என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பிடித்த நடிகராகவும், இந்தியளவில் அதிகளவு வசூல் குவிக்கும் நடிகராகவும் விஜய் இருக்கிறார். படிப்படியாக 25 ஆண்டுகாலம் தன்னை வளர்த்துள்ளார். ஆனால் அரசியல் களம் வேறு. அக்டோபர் 28 ஆம் தேதிக்கு பிறகு விஜய் எத்தனை முறை வெளியில் வந்தார்.
அரசியலில் 365 நாட்களும் ஆக்டிவாக இருக்க வேண்டும். வெற்றி, தோல்வி வந்து வந்து செல்லும். இதற்கு தன்னை விஜய் எப்படி தயார் செய்து கொள்ளப் போகிறார் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். எங்களுக்கு யார் மீதும் பயமில்லை. தற்போது திராவிடக் கட்சிகள் மூன்றாக பிரிந்துள்ளன. பாஜகவின் தேசிய வாக்குகள் அதிகரித்துள்ளன.
விஜய்யை கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் கேள்வி கேட்போம். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். திமுக எப்போதும் ஒரு குடும்பத்தைச் சார்ந்துள்ளது. புதிய சிந்தனைகளுக்கு அங்கு இடமில்லை. உதயநிதி நன்றாக செயல்பட்டால் பாராட்டுவோம். தவறாக செயல்பட்டால் விமர்சிப்போம்.
இந்தியாவில் கோடிக்கணக்கான பேர் பாஜகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். கிளை தலைவர் தொடங்கி மாநில தலைவர் வரை எல்லோரும் ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒரு நிரபராதியை கொண்டாடுவதை போல நம் முதல்வர் செந்தில் பாலாஜியை கொண்டாடுகிறார்.
ஜாமீனில் வெளிவந்தவரை காந்தி போல கொண்டாடுவது தமிழகத்துக்கு புதிது கிடையாது. எல்லாவற்றையும் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். வருகின்ற காலத்தில் பதிலடி கொடுப்பார்கள். சீமான் பாதையும், எங்கள் பாதையும் வேறு. 2026 தமிழ்நாட்டுக்கு முக்கிய தேர்தலாக இருக்கும். பல்வேறு கட்சிகள் இருப்பதால் அது புதிய களமாக இருக்கும்.
பாஜகவில் கடந்த மூன்று மாதங்களாக அமைப்பு ரீதியாக பலப்படுத்தும் பணியில் இருந்தோம். பாஜக தமிழகத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து தற்போது எட்டு மடங்கு வளர்ந்திருக்கிறது. ஒரு கோடி உறுப்பினர்கள் பெரிய இலக்கை நிர்ணயித்தோம். கிட்டத்தட்ட நாங்கள் மனதில் நினைத்ததை நெருங்கிவிட்டோம். பணிகள் முழுமையாக முடிந்ததும் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம்.
புயல் பாதையில் சென்னை தொடர்ந்து பாதிக்கிறது. காலநிலை மாற்றம் காரணமாக உருவாகும் புயல் பெரும்பாலும் சென்னை, டெல்டா வழியே செல்கிறது. நம் தட்பவெப்ப நிலை அதிகரித்துள்ளது. முதலமைச்சர் உடனடியாக உயர்மட்ட அறிவியல் குழுவை அமைத்து ஆய்வு செய்து பிரச்னைக்கு தீர்வு கொடுக்க வேண்டும். " என்றார்.












Click it and Unblock the Notifications