விஜய்யிடம் என்ஜினே இல்லை.. திமுக – காங்கிரஸ் உடைந்த கண்ணாடி.. அண்ணாமலை குபீர்
சென்னை: தவெக தலைவர் விஜய் நேற்று பாஜக மற்றும் திமுகவை ஓட்டை என்ஜின் டப்பா என்ஜின் என்று விமர்சித்தார். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, விஜய்யிடம் என்ஜினே இல்லை என்றவர் திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி என்றும் கூறியுள்ளார்.
மதுராந்தகத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் மோடி பேசியிருந்தார். அப்போது அவர், கரப்ஷன், மாஃபியா, கிரிமினல் போன்ற விஷயங்களுக்கு ஆதரவு கொடுக்கும் அரசு திமுக. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஊழல் இருக்கிறது என்று குழந்தைகளுக்கும் தெரியும். இங்கு ஒரு குடும்பத்துக்கான ஆட்சி நடக்கிறது. ஜனநாயகம் அற்ற அரசு இது. கலாசாரத்தை வசைப்பாடுகிறது திமுக அரசு.

டபுள் என்ஜின்; ஓட்ட டப்பா என்ஜின்
திமுக-வின் கொடூர ஆட்சியில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம். வரலாறு காணாத வளர்ச்சியை பாஜக அரசு கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி இப்போது பின்னோக்கி செல்கிறது. தமிழ்நாட்டுக்கு இரட்டை என்ஜின் அரசு தேவை என்று மக்கள் விரும்புகின்றனர் என்று மோடி பேசியிருந்தார்.
இதையடுத்து, மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2023 ஆம் ஆண்டு மே மாதம் எரியத் தொடங்கிய மணிப்பூரில் இதுவரை அரசு கணக்கின்படி 260 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்றியத்தையும் மணிப்பூரையும் ஆளும் டபுள் என்ஜின்; ஓட்ட டப்பா என்ஜின் அரசு மக்களைக் காக்க முடியவில்லை என்று வெல்லும் தமிழ் பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார்.
விஜய்க்கு அண்ணாமலை பதில்
இந்நிலையில், தவெகவின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய விஜய், தீயசக்தி திமுகவை வீழ்த்துவதற்கு தூய சக்தியான நம்மால் தான் முடியும். 2026 தேர்தலில் மக்களுக்கு ஒரே ஆப்ஷன் தவெக தான். இந்த டப்பா இன்ஜின், ஓட்டை இன்ஜின், எவ்வளவு இன்ஜின் வந்தாலும், டாப் இன்ஜின் நம்ம தவெக தான் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்று பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, விஜய்யிடம் என்ஜினே இல்லை என்றவர், விஜய்யிடம் வண்டி, பெட்ரோல் டீசல், வண்டியை இயக்க யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
விஜயிடம் என்ஜினே இல்லை
இதுகுறித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களிடம், கட்சியில் இருந்து ஒருவரை சஸ்பெண்ட் செய்ய முடியாமல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் இருக்கிறார். காங்கிரஸ் அடிமைக் கட்சியாக உள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி ஸ்டாலின் என்ன சொன்னாலும் தேசிய ஜனநாயக கூட்டணி கெட் இன் தான். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. விரைவில் இந்த சூழ்நிலை விரைவில் மாறும்.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி களம் காண்கிறது. எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் முதலமைச்சர் வேட்பாளர். விஜய்யை நான் தேவையில்லாமல் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எங்களிடம் டபுள் என்ஜின் இருக்கிறது. விஜய்யிடம் என்ஜினே இல்லை. விஜய்யிடம் வண்டி, பெட்ரோல் டீசல், வண்டியை இயக்க என யாரும் இல்லை. 234 தொகுதிகளில் விஜய்யால் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா.
கைதட்டல், விசிலுக்காக பேசுகிறார்
விஜய் வெளியே வந்து வீதி வீதியாக பிரச்சாரம் செய்து மக்கள் ஏற்று கொண்டால் பார்க்கலாம். தொண்டர்களிடம் கைத்தட்டல், விசில் வாங்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் விஜய் பேசுகிறார். இதுவரை கட்சிகள் செய்யாத என்ன திட்டத்தை கொண்டு வரப் போகிறோம் என்று மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் விஜய் எதுவும் பேசவில்லை. அவரின் பேச்சைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பச்சை பொய் பேசுகிறார்" என்றார்.












Click it and Unblock the Notifications