அண்ணாமலையின் ரோல் என்ன? 2026 தேர்தலில் அவர் புறக்கணிக்கப்பட்டாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலையின் இடம் தற்போது கட்சிக்குள் என்ன என்ற கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் பியூஷ் கோயல் ஒரு விளக்கத்தை முன்வைத்துள்ளார்.

அண்ணாமலைதான் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளர் என்று சில மாதங்கள் முன்புவரை பாஜக தொண்டர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். அப்படித்தான் அண்ணாமலையும் தன்னை முன்வைத்துக் களமாடி வந்தார். ஊடகங்கள் கூட மற்ற எந்த பாஜக மாநிலத் தலைவருக்கும் தர மறுத்த வெளிச்சத்தை இவருக்கு வாரி வழங்கின.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அண்ணாமலையின் பெயர் எந்தளவுக்கு அடிப்பட்டது என்றால், பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் இவர்தான் என்ற அளவுக்குப் பிம்பம் ஊதி பெரிதாக்கப்பட்டது. அதற்கு ஏற்ற மாதிரி, பிரச்சார களத்திற்கு வந்த அமித்ஷா, 'தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் பிரதமராக வேண்டும்' என்று பேசி வாக்காளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

Annamalai

ஒடிசா அரசியலைத் தமிழர் ஒருவர்தான் ஆட்டிப்படைக்கிறார் எனத் தமிழர் விரோத போக்கைக் கடைப்பிடித்த பாஜக, அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த போது, 'ஒரு தமிழரே பிரதமராக வேண்டும்' என வண்டியை வேறு வழிக்கு மாற்றி ஓட்டியது. தமிழர் ஒருவர் பாரத நாட்டிற்குப் பிரதமராக வேண்டும் என்று பாஜக சொன்னதும் பலரும் அண்ணாமலையை அந்த இடத்தில் பொருத்திப் பார்த்து கற்பனைக் குதிரையை தங்கள் இஷ்டப்படி ஓட்டிப் பார்த்தனர்.

மாநிலத் தலைவராக அண்ணாமலை எப்போது பதவிக்கு நியமிக்கப்பட்டாரோ அப்போது இருந்தே அவர் தலையின் மீது ஒரு கத்தி தொங்கிக் கொண்டுதான் இருந்தது. உட்கட்சிக்குள்ளாகவே மூத்த தலைவர்கள் அவரது வருகையை உளமார ஏற்கவில்லை. உள்ளுக்குள் ஒரு மெளன யுத்தமே நடந்து வந்தது. அது இறுதியில் கே.டி.ராகவன் விவகாரத்தில் பூதாகரமாக வெடித்தது.

யார் வலிமையானவர்?

அண்ணாமலைக்கு முன்னதாக மாநிலத் தலைவராகப் பலர் இருந்துள்ளனர். 1980களில் நாராயண ராவ் இந்தப் பொறுப்பிலிருந்த காலத்தில் இந்தக் கட்சிக்கு அடையாளமே இருந்ததில்லை. பின்னர் கே.என்.லட்சுமணன் மற்றும் டாக்டர் கிருபாநிதி ஆகியோர் இருந்த காலத்தில் ஊடகங்களில் இக்கட்சியின் செயல்பாடுகள் என்ன என்பதைத் தேடித்தான் பார்க்க வேண்டிய நிலை இருந்தது.

ஓரளவுக்கு பாஜக தமிழ்நாட்டில் அறிமுகமானது 1995க்குப் பிறகுதான். தேசிய அளவில் பாஜகவுக்கு அதிகாரம் கிடைத்தது ஒரு முக்கிய காரணம். அத்வானி, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் அதன் முகமாக இருந்தனர். அத்வானியின் ரத யாத்திரைக்குப் பின்னர் இந்தியா முழுக்க அந்தக் கட்சிக்கு ஒரு புதிய முகம் கிடைத்தது.

இதன் தொடர்ச்சியாக இல. கணேசன் மாநிலத் தலைவராக இருந்த காலத்தில் திமுக மற்றும் அதன் தலைவர் கருணாநிதியின் அன்பு வட்டத்திற்குள் இருந்து பாஜகவை வளர்த்தார். சி.பி.ராதாகிருஷ்ணன், அதாவது இன்றைய துணை குடியரசுத் தலைவராக உள்ளவர் மாநிலத் தலைவராக 2004இல் நியமிக்கப்பட்டார். அடுத்து பொ.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் எனப் பலர் மாநில தலைவர் பதவியிலிருந்து செயலாற்றினர்.

அதில் தமிழிசைதான் ஊடகங்களில் பாஜகவை உயிர்ப்புடன் வைத்திருந்தார். எல்.முருகனுக்குப் பின்னர் 'கர்நாடக சிங்கம்' என அடைமொழியுடன் 'ஆடு வளர்க்கும் ஐபிஎஸ்' என எளிய மனிதராக ஊடகங்களில் அடிபட ஆரம்பித்த அண்ணாமலை பாஜக தமிழகத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதுவரை பாஜக இப்படி ஒரு மாநிலத் தலைவரைச் சந்திக்கவில்லை என்ற அளவில் சடுகுடு ஆடினார் அண்ணாமலை.

அவரால் தமிழ்நாட்டில் இளம் தலைமுறையை மிக எளிதாகக் கவர முடிந்தது. படித்த வர்க்கத்தினர் மத்தியில் அண்ணாமலைக்கு ஒரு ஆதரவு பெருகியது. இன்னும் சொல்லப்போனால் பிரதான எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியின் செயல்பாட்டைவிட, அண்ணாமலையே சில காலம் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலை உருவானது. அவர் அதிரடியாகச் செந்தில் பாலாஜியை எதிர்த்து ஆடினார்.

மோதல் வெடித்து, பின் செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்றதற்குப் பின்னால் அண்ணாமலையின் காய் நகர்த்தல் இருந்தது என்றும் பேச்சுகள் ஒலித்தன. ரஃபேல் வாட்ச் விவகாரத்தில் அண்ணாமலையைச் செந்தில் பாலாஜி திக்குமுக்காட வைத்தார். ஆளுநரைச் சந்தித்து திமுக அரசு மீது ஊழல் புகார்களை முன்வைத்தது.

சட்டையைக் கழற்றிக் கொண்டு சாட்டையால் அடித்துக் கொண்டது, திமுக ஆட்சியை அகற்றாமல் செருப்பு அணியமாட்டேன் எனச் சபதம் ஏற்றது, கூட்டணிக் கட்சியான அதிமுக தலைவர்களான ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியைக் கூட பகிரங்கமாக விமர்சித்தது என அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவைத் தினமும் பேசுபொருளாக வைத்திருந்தார்.

ஆனால், அண்ணாமலையின் செயல்பாடு அரசியல் பக்குவமற்றதாக உள்ளதாகப் பலர் குற்றஞ்சாட்டினர். செய்தியாளர்கள் மத்தியில் அண்ணாமலை பல நேரங்களில் வரம்பு மீறித் தாக்குதல் கூட நடத்தினார். அவர் பல இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு ஆவேசமாகப் பேசுகிறார் என்று பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கும் அளவுக்கு அவரது செய்தியாளர் சந்திப்பைப் புறக்கணிக்க அறிக்கைவிடும் அளவுக்கும் சென்றது.

அதிரடி அரசியலுக்குப் பழக்கப்பட்ட அண்ணாமலைக்குத் தேர்தல் களத்தில் வியூகம் அமைத்துச் செயல்படும் அளவுக்குச் சக்தி இல்லாமல் சென்றது. அவர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சியில் தோல்வியைத் தழுவினார். 2024 மக்களவையில் கோயம்புத்தூரில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இரண்டு தொகுதிகளிலும் அவர் திமுக வேட்பாளர்களிடம் தன் வெற்றியைப் பறிகொடுத்தார்.

அண்ணாமலை 'பவர்' என்ன?

அப்படி இருந்தும் அவர் சளைக்காமல் 'என் மண் என் மக்கள்' என்ற பயணத்தைத் தமிழ்நாடு முழுவதும் நடத்தினார். பாஜகவை 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டி சபதம் போட்டு ஊர் ஊராக நடந்தார். இப்படி 2026 தேர்தலை முன்வைத்துக் களமாடிய அண்ணாமலை இந்தத் தேர்தலில் அவர் ஒரு வேட்பாளராகக் கூட நிறுத்தப்படவில்லை.

தானே அந்த வாய்ப்பை வேண்டாம் என நிராகரித்துவிட்டதாக அண்ணாமலை சொல்கிறார். அப்படி எனில் 2026 பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த அவர் செய்த செயல்களுக்கான பலன் என்ன? பாஜகவின் இளம் சக்தியாக அடையாளம் காணப்பட்ட அவர், சட்டசபைக்குள் சென்று தனது அரசியல் அதிகாரத்தை நிரூபித்துக் காட்டி இருக்கவேண்டும் அல்லவா?

5 ஆண்டுகளில் சட்டசபையில் களமாட ஒரு தலைவராகக் கிடைத்த அரிய வாய்ப்பை யாரேனும் தவறவிடுவார்களா? பின் வாங்குவார்களா? அந்தளவுக்குத்தான் தேசிய தலைமை அவருக்கு மதிப்பளித்துள்ளது. அவரை மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டிவிட்டார். கொங்குப் பகுதியில் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதன் மூலம் அவரது செல்வாக்கைச் சரித்துவிட்டார் எடப்பாடி என்றே அரசியல் வியூகர்கள் சொல்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டை செங்கோட்டையனே பேசியுள்ளார்.

ஓரங்கட்டப்பட்டாரா அண்ணாமலை?

இந்த 2026 களத்தில் அண்ணாமலை பின்வாங்கியது பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்கிறார்கள். மத்திய அமைச்சராக உள்ள முருகனை வேட்பாளராக நிறுத்தியதற்குப் பதிலாக அண்ணாமலையை சென்னையில் போட்டியிட வைத்திருக்க வேண்டும் என்று அவரது கட்சியில் உள்ள இளம் தலைமுறையினரே சொல்கிறார்கள்.

அவர் வெறும் பிரச்சார சக்தியாக பாஜகவினரால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது பிழையான முடிவு என்கிறார்கள். அண்ணாமலையின் இடம் தற்போது கட்சிக்குள் என்ன என்ற கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் பியூஷ் கோயல், "இந்தக் கேள்விக்கு எந்தளவுக்கு வெளிப்படையாகப் பதில் கூற முடியுமோ? எங்கள் கட்சியில் உள்ள அழகு என்ன தெரியுமா? எந்த காரியகர்த்தாவாக இருந்தாலும் அவர் அரசியல் அனுபவம் பெறுவதற்கு நிறையக் காலம் கொடுப்போம்.

சில நேரங்களில் அந்த அனுபவம் பெறாமலே இளம் வயதிலே கட்சித் தலைமைக்கு வந்தவர்களும் உண்டு. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒருமுறை சிவாஜி பூங்காவில் நடந்த பேரணியின் போது, "பதவி என்பது வரும் போகும். கட்சியின் காரியகர்த்தா என்பதே பிரதானம். அவர் முன்னாள் பிரதமர். அவருக்குப் பிறகு கட்சியில் பெரிய ரோல் வழங்கப்படவில்லை. எங்கள் தாரக மந்திரம் என்ன தெரியுமா? தேசம் முதலில் முக்கியம்.

கட்சி இரண்டாவது. மூன்றாவதுதான் மற்ற அனைவரும். இந்தக் கொள்கை ஸ்டாலின் குடும்பத்திலும் சோனியா காந்தி குடும்பத்திலும் இல்லை. கட்சியின் முக்கிய பொறுப்புக்கு இந்த இரண்டு கட்சி தொண்டர்களால் வரமுடியாது. ஒரு சாதாரண காரியகர்த்தா வாஜ்பாய் பிரதமராக வந்தார். கட்சியின் குஜராத் ஒருங்கிணைப்பாளராக இருந்த மோடி பிரதமராகியுள்ளார். வேறு கட்சியில் இப்படி ஒரு கட்சியை நீங்கள் காட்டமுடியாது. ஆகவே, கட்சி யாரை எப்போது எங்கே உட்கார வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.

- கடற்கரய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+