எடப்பாடி vs அண்ணாமலை.. ஓயாத பஞ்சாயத்து.. பின்னணியில் இப்படி ஓரு ட்விஸ்ட்?
சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் இருக்கிறார்களா ..இல்லையா என்பது தெரியவில்லை. அதிமுக பாஜக கூட்டணியில் இருப்பதாக அதிமுக தலைவர்கள் சொல்கிறார்கள். அதை மாநில பாஜக தலைமையோ பாஜக கூட்டணியில் அதிமுக இருப்பதை இப்போதைக்கு முடிவு செய்ய முடியாது என்று கூறுகிறது. அதிமுகவை கழட்டிவிட்டு, 2014 பாணியில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கொள்ள வேண்டும் என்பது மாநில பாஜகவின் திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் பாஜக மாநில தலைமையின் இந்த திட்டத்திற்கு பாஜகவிலேயே எதிர்ப்பும் காணப்படுகிறது. இந்த முடிவு திமுகவிற்கே பலனை தரும் என்று போர்க்கொடி உயர்த்துகிறார்கள். இந்த முடிவினை ஆதரிப்பவர்களோ, பாஜக வளருவதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பமாக இருக்கும் என்றும் அதற்கு 2014 பாணியில் செயல்பட்டால் தான் அதிமுகவை விட பலமாக தமிழகத்தில் வர முடியும் என்றும் கூறுகிறார்கள்.
ஆனால் பாஜக டெல்லி மேலிடமோ என்ன முடிவு எடுக்க போகிறது என்பது தெரியவில்லை. அவர்களை பொறுத்தவரை இன்னும் 9 மாதங்கள் முழுமையாக இருப்பதால் இப்போதைக்கு எந்த முடிவினையும் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்கிறார்கள்.

பிரச்சனை
சரி என்னதான் பிரச்சனை, அதிமுக பாஜக இடையே நிலவும் மோதல் தான் என்ன? எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கு இடையே இப்போது நடப்பது என்ன என்பதை பார்ப்போம். அதிமுக பாஜக இடையே கூட்டணி இருக்கிறதா இல்லை என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே குழப்பம் இருக்கிறது. அண்ணாமலையை பொறுத்தவரைக்கும் இப்போதைக்கு கூட்டணியில் அதிமுக இருக்கிறது.. ஆனால்.. என்று இழுக்கிறார்.

எடப்பாடிபழனிசாமி பளீர்
இன்னொரு பக்கம் பார்த்தால் டெல்லி தேசிய தலைமையே அதிமுக எங்கள் கூட்டணியில் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்களே என்று எடப்பாடி பழனிசாமி அழுத்தமாக கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "பாஜக தேசிய கட்சி, அந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பதை அந்த கட்சியின் தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள். மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல. அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக டெல்லியில் உள்ள தலைவர்களே கூறியுள்ளனர்" என்று அண்ணாமலைக்கு பதில் அளிக்கும் அழுத்தமாக கூறினார்.

மதிப்பு கொடுப்பாங்க
எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அண்ணாமலை "டெல்லி தலைமையாக இருந்தாலும் யாராக இருந்தாலும் பாஜக என்பது தொண்டர்களின் கட்சி. மற்ற கட்சி போல ஒரு தலைவர் வந்து 50 வருஷம் 60 வருஷம், 70 வருஷம் என்று இருப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. பாஜகவை பொறுத்தவரை ஆட்சி மன்றக்குழுதான் முடிவு செய்கிறது. ஆட்சிமன்றக் குழுவில் எங்கள் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொண்டர்களுக்கு மதிப்பு கொடுத்து கருத்து கேட்டுவிட்டுத்தான் கூட்டணி குறித்து முடிவு செய்வார்கள்.

சுமை என்று சொன்னவர்கள்
இந்தக் கட்சியில் ஒன்மேன் ஷோ கிடையாது. இது தொண்டர்களால் ஆன கட்சி. ஆட்சி மன்றக் குழு எடுக்கும் முடிவுக்கு எல்லா தொண்டர்களும் கட்டுப்படுவார்கள். அதே நேரத்தில் பாஜக பார்லிமெண்ட் போர்டில் இருக்கும் தலைவர்கள் எடுக்கும் முடிவு இந்தக் கட்சியை வலுப்படுத்தக் கூடியதாகத்தான் இருக்கும். எங்களை சுமை என்று சொன்னவர்கள் கூட்டணி தேவை என தினசரி சொல்வது வினோதமாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை மாநில தலைவர் என்ற முறையில் எதுவாக இருந்தாலும் பாஜக வலிமை பெற வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். கூட்டணி வேண்டாம், கூட்டணி வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு இல்லை. அதற்கு பார்லிமெண்ட் போர்டு உள்ளது. தலைவர்கள் இருக்கிறார்கள். எந்த முடிவாக இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் " என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

வாக்குகள் எப்படி
இதனிடையே மாநில பாஜக தமிழகத்தில் அதிமுகவை விட்டுவிட்டு தனி அணி அமைக்க விரும்புவதாக கூறப்படுகிறது. அண்ணாலையின் தீவிர ஆதரவாளர்கள் கூறும் போது, 2014 தேர்தலில் பாஜக தலைமையில் அமைந்த அணி 19.5% சதவீதம் வாக்குகள் பெற்று 2 தொகுதிகளில் வென்றது. அப்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தார். அப்போதே பாஜக கூட்டணி இப்படியான வாக்குகளை பெற்று இருந்தது.

9 மாதங்கள் உள்ளது
ஆனால் இப்போது ஜெயலலிதா இல்லை, எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என பிரிந்து உள்ளனர். இப்போது அதிமுக பலவீனமான சூழலை பயன்படுத்தி பாஜக தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும். இதன் மூலம் பாஜக தமிழகத்தில் வலிமையாக முடியும் என்றும் கூறுகிறார்கள். ஒருவேளை பாஜக டெல்லி மேலிடம் இந்த முடிவினை எடுத்தால் அது திமுகவிற்கே பெரிய பலமாக முடியும் என்று பாஜகவில் எதிர்ப்பும் இருக்கிறது. என்ன நடக்க போகிறது என்பது இன்னும் 9 மாதங்களில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications