Annamalai: விரைவில் புதிய கட்சியை தொடங்கும் அண்ணாமலை.. திடீரென அப்படி பேசியதற்கு என்ன காரணம்?
சென்னை: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை விரைவில் புதியக் கட்சியை தொடங்குவார் என்று விவரம் அறிந்த சில சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். திடீரென அமித்ஷாவுக்கு கொடுத்த வாக்குக்காக இருக்கிறேன் என்று கூறிய அண்ணாமலை, மனசாட்சிக்கு எதிராக பேசிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை பாஜக தலைமை நீக்கியது. இதன்பின் அண்ணாமலை அவ்வப்போது சில கருத்துக்களை பேசி வந்தாலும், அவருக்கான செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததில் அவருக்கு தொடக்கம் முதலே உடன்பாடு இல்லை.

இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் தூய அரசியலை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பாஜகவில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் வேலையை விட்டு வர வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் நல்ல அரசியலை கொடுப்பதற்கான கூட்டணி அமையும் என்ற எண்ணத்தில் தொண்டனாக என் பணிகளை செய்கிறேன்.
யார் இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்ற கருத்தை சொல்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. பிடித்திருந்தால் இருப்பேன்.. பிடிக்கவில்லை என்றால் கிளம்பி விவசாயம் பார்க்க போகிறேன். எங்கள் கைக்காசை செலவு செய்து அரசியலில் இருக்கிறோம். பிடிக்கவில்லை என்றால் அதே வேலையை சமூக இயக்கமாக மாறி பொதுமக்களுக்கு செய்ய போகிறோம். மாற்றத்திற்காக காத்திருக்கிறேன்.
சற்று பொறுத்திருங்கள்.. சரியான நேரத்தில் பேசுகிறேன்.. முதல் தலைமை அரசியல்வாதியாக மாற்றத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறேன்.. சில நேரம் மனசாட்சிக்கு எதிராகவும் பேசுகிறேன். மனசாட்சி ஒன்று சொல்கிறது.. வாய் ஒன்று சொல்கிறது.. அதிமுகவில் நடக்கும் எதற்கும் நான் பொறுப்பல்ல.. எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம் என்று அதிமுக தலைவர்கள் என்னை திட்டுகிறார்கள்.
அமித்ஷாவுக்கு கொடுத்த வாக்குக்காக காத்திருக்கிறேன். திரும்பு பேசுவதற்கு எவ்வளவு நேரமாகிவிடும் என்று தெரிவித்தார். அண்ணாமலையின் இந்த பேச்சு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் ஒபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் அண்ணாமலைக்கு நல்ல நட்பு இருந்து வருகிறது. அதேபோல் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் திடீரென இவர்களை சந்தித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அண்ணாமலை தமிழ்நாட்டிற்கு வந்ததே ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியில் இணைந்து முதல்வர் வேட்பாளராகுவதற்கு தான். ஆனால் ரஜினிகாந்த் கடைசி நேரத்தில் விலகிக் கொண்டதால், அண்ணாமலை பாஜகவில் இணைந்து தலைவராக செயல்பட்டு வந்தார். தற்போது தலைவர் பதவி இல்லாததால், அடுத்தக் கட்ட திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே அண்ணாமலை பெயரில் பல்வேறு மாவட்டங்களில் மன்றம் திறக்கப்பட்டு வருகிறது. அதற்கு தமிழக பாஜக தலைமையிடம் இருந்தோ அல்லது டெல்லி தலைமையிடம் இருந்தோ எந்த எதிர்ப்பும் இல்லை. இதனால் அண்ணாமலை விரைவில் புதியக் கட்சியை தொடங்குவார் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அந்த கட்சியில் ஒபிஎஸ், செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் இணைய வாய்ப்புகள் உள்ளது. இதனை தேர்தலுக்கு முன்பாகவே பாஜக தலைமை செயல்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. அதிமுக தலைவர்கள் அண்ணாமலையை பற்றி பேசுவது குறைந்துவிட்ட போதும், திடீரென அதிமுகவின் தலைவர்களை அண்ணாமலை டார்கெட் செய்தாக கூறுவதும் பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications