முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு!
சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாஜகவுக்குள் புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசலும் கலகமும் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன. அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்க தீவிரமாக உள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கும் அறிவிப்பை நாளை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) வெளியிடப் போவதாக அவரே தெரிவித்துள்ளதாக முன்னணி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி பயணம் - முறிந்த சமரசப் பேச்சுவார்த்தை
சட்டமன்றத் தேர்தலில் பாஜக அடைந்த தோல்விக்குப் பிறகு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் குறித்துப் பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்தன. இந்தச் சூழலில், அண்ணாமலை திடீரென டெல்லிக்குச் சென்று பாஜக தேசியத் தலைவர்களைச் சந்தித்தார்.
பாஜகவின் தேசியத் தலைமைக்கும் அண்ணாமலைக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், ஆனால் அண்ணாமலை முன்வைத்த சில நிபந்தனைகளையும், தற்போதைய சூழலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளையும் பாஜகவின் மூத்த தலைவர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பாஜகவில் நீடிப்பதைக் காட்டிலும் தனி வழியில் செல்வதே சிறந்தது என்ற முடிவுக்கு அண்ணாமலை வந்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலையின் அதிரடி பதில்
டெல்லி புறப்படுவதற்கு முன்பாக அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் எழுப்பிய "புதிய கட்சி தொடங்கப் போகிறீர்களா?" என்ற கேள்விக்கு, "இரண்டு நாட்களில் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்" என அண்ணாமலை சூசகமாகப் பதிலளித்தது இந்தச் செய்தியை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
புதிய கட்சி
அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து அவரது ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது சில முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணாமலை உடனடியாகப் புதிய கட்சியை அறிவிப்பதற்குப் பதிலாக, முதற்கட்டமாகத் தனது "We The Leaders" என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் ஒரு வலுவான அரசியல் இயக்கத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
அடிமட்ட அளவிலான தொண்டர்கள், மாற்றுச் சிந்தனையுடைய இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களை இந்த இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைக்கப் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. இந்த இயக்கம் வலுவடைந்த பின்னர், அது முறையான அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பிற மாநில கட்சிகளுக்கு மாற்றாகத் தனது புதிய அமைப்பை நிலைநிறுத்த அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.
தமிழக அரசியலில் ஏற்படப்போகும் தாக்கம்
அண்ணாமலை தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி நாளை தனது அரசியல் பயணம் குறித்த அதிரடி அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் உற்றுநோக்குகின்றன.
சென்னையில் வெள்ளிக்கிழமை ஊடக சந்திப்பை நடத்தி எனது நிலைப்பாடு குறித்து விரிவாக விளக்க உள்ளேன். முதற்கட்டமாக ஓர் இயக்கத்தைத் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். ஒன்றரை ஆண்டுகள் அந்த இயக்கத்தை நடத்தி, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அரசியல் பயிற்சியை அளித்துவிட்டு, அதன் பின்னர் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க முடிவு செய்துள்ளேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
சூடுபிடிக்கும் களம்
அண்ணாமலை பாஜகவுக்கு 'குட்பை' சொல்லிவிட்டுத் தனிக்கட்சி தொடங்கினால், தமிழக பாஜகவின் வாக்கு வங்கியிலும், அதன் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் பெரிய பிளவு ஏற்படும். அதே நேரத்தில், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகப் புதியதொரு இளம் தலைமையை எதிர்பார்க்கும் வாக்குகளைக் கவர அண்ணாமலைக்கும் விஜய்க்கும் இடையே கடுமையான போட்டி நிலவக்கூடும் என்பதால், தமிழக அரசியல் களம் வரும் நாட்களில் மேலும் சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications