பொது விடுமுறை.. ஏப்.19 கோயம்பேடு மார்கெட்டுக்கு லீவு! முன்கூட்டியே காய்கறிகளை வாங்கி வெச்சுக்கோங்க!
சென்னை: தமிழகம் முழுவதும் ஏப்.19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அன்றைய தினம் கோயம்பேடு மார்கெட் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல்: கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே, இன்றுடன் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பிரசாரங்கள் நிறைவடைகின்றன. மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

எந்தெந்த மாநிலங்கள்: அருணாச்சல பிரதேசம் (2 லோக்சபா தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகலா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), தமிழ்நாடு (39), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகம்: தமிழகம் + புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு திமுக vs அதிமுக vs நாதக vs பாஜக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுகவை பொருத்தவரை, 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது. இதுதவிர, நாமக்கல்லில் உதயசூரியன் சின்னத்தில் கொமதேக போட்டியிடுகிறது. மற்ற கட்சிகள் தங்கள் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன.
கட்சிகளும், கூட்ணியும்: அதிமுவை பொறுத்த அளவில் தேமுதிக, புதிய தமிழகம் கட்சி, எஸ்டிபிஐ ஆகியவற்றின் கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவை பொறுத்த அளவில், ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பாமக, தமாக, அமமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இது தவிர நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிடுகிறது.
பிரசாரம்: எனவே தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இரண்டு நாட்களில் தேர்தல் நடைபெறும் நிலையில் இன்றுடன் பிரசாரம் முடிவடைகிறது. அதேபோல தேர்தல் நாளன்று அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனை ஏற்று, ஏப்.19 அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
ஏப். 19 பொதுவிடுமுறை: வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறப்பு ஏற்பாடுகள்: விடுமுறை தொடர்பாக தொடர்பாக புகார் அளிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்கி அதற்கான எண்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் தலைமை செயலாளர் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து அனைத்து நிறுவனங்களும் விடுமுறையை அறிவித்துள்ளன. அதேபோல, சென்னையிலிருந்து மக்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில், சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
காய்கறி சந்தை: சென்னையை பொறுத்த வரை, ஏப்.19ம் தேதியன்று, கோயம்பேடு சந்தை இயங்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளில் காய்கறி மார்கெட் ஏப்.19ம் தேதியன்று இயங்காது என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, முன்கூட்டியே மக்கள் காய்கறிகளை வாங்கி குவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications