தமிழ்நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.66 லட்சம்! பொருளாதார வளர்ச்சியில் நாட்டில் 2வது இடம்!
சென்னை: தமிழ்நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1.66 லட்சமாக உயர்ந்துள்ளது என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மேலும், பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் நாட்டில் 2வது இடத்தில் இருப்பதாக கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை கடந்த 2 ஆண்டுகளாக 8% என்ற சராசரி அளவில் வளர்ச்சி அடைந்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார். 2022-2023ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு நிலைத்த விலையில் ரூ.20.71 லட்சம் கோடியாக உள்ளது எனக் கூறியிருக்கிறார்.
நடப்பு விலையில் தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு ரூ.23,64,514 கோடியாக உள்ளது என்றும் இந்திய உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.1% ஆக இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், குறிப்பாக நாட்டின் பிற பகுதிகளை காட்டிலும் தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 36.9% லிருந்து 37.4% ஆக அதிகரித்துள்ளது எனக் கூறியுள்ளார்.
தமிழக நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தங்கம் தென்னரசு நடத்திய முக்கிய செய்தியாளர்கள் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன், பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் மற்றும் மருத்துவர் எழிலன் ஆகியோரும் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications