மத்திய அரசின் VG - G RAM G மசோதாவில் அடுத்த சர்ச்சை.. தமிழ்நாடு, கேரளாவிற்கு மிகப்பெரிய பாதகம்?
சென்னை: மத்திய அரசு கொண்டு வரும் விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) மசோதாவில் இரண்டு சர்ச்சைக்குரிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. முதல் விஷயம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றும் முடிவு. இரண்டாவது விஷயம் நிதி ஒதுக்கீடு சம்பந்தப்பட்டது. பல பரிமாண வறுமைக் குறியீட்டின் படி, ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் மாநில வாரியான வழிகாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களுக்கு மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு குறைந்துவிடும் என்ற அச்சம் நிலவுகிறது.
விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) மசோதாவை மத்திய அரசு கொண்டு வருகிறது. இதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக VG - G RAM G என்று அழைக்கிறார்கள். பொதுவாக மத்திய அரசு நிர்ணயிக்கக்கூடிய புறநிலை அளவுகோல்களின் அடிப்படையில், ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் மாநில வாரியான வழிகாட்டு நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு தீர்மானிக்கும். ஆனால் புதிய சட்ட மசோதாவின் பிரிவு 4(5)ன் படி, பல பரிமாண வறுமைக் குறியீடு ஒருவேளை 'அளவுகோலாக' நிர்ணயிக்கப்பட்டால், அது தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கும். ஏனெனில் தமிழ்நாட்டின் வறுமை விகிதம் 2.20% என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகிறார்.

வி.ஜி. - ஜி. ராம் ஜி (VG - G RAM G) மசோதாவின் பிரிவு 4(5) மற்றும் பல பரிமாண வறுமைக் குறியீடு ஆகியவை தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் ஏன் பாதகமாக அமையும் என்பதை இந்த அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக பார்ப்போம்.
வி.ஜி. - ஜி. ராம் ஜி பிரிவு 4(5)வில் என்ன இருக்கிறது. மத்திய அரசு, ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் மாநில வாரியான நிதி ஒதுக்கீட்டை, அது நிர்ணயிக்கும் புறநிலை அளவுகோல்களின் அடிப்படையில் தீர்மானிப்பது வழக்கம். இதன் அர்த்தம் என்னவென்றால், மாநிலங்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் நிதியை, மத்திய அரசுதான், சில அளவுகோல்களை வைத்துப் பிரித்துக் கொடுத்து வருகிறது. தற்போதைய நிலையில் வறுமை சதவீதம் (எம்ஐபி விகிதம் என ஆங்கித்தில் அழைப்பார்கள்) 2024-ல் கேரளாவின் தீவிர வறுமை விகிதம் 0.48% ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவில் மிகக் குறைந்த வறுமை விகிதம் உள்ள மாநிலமாக இருக்கிறது.
அடுத்ததாக 2024 தரவுகளின்படி, தமிழ்நாட்டின் வறுமை விகிதம் 2.20% என்கிற அளவில் குறைந்துள்ளது. 2024-25 பொருளாதார ஆய்வின்படி, வறுமைக் குறியீடு 1.43% ஆகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. தேசிய சராசரி வறுமை விகிதம் என்பது 11.28% ஆக இருக்கிறது. அதனை ஒப்பிடும் போது, தமிழ்நாடும், கேரளாவும் பெரிய அளவில் வறுமையை குறைத்துள்ளன. அதேநேரம் பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் வறுமை விகிதம் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது
MPI என்றால் என்ன?
வறுமை என்பது வெறும் வருமானத்தை பொறுத்தது மட்டுமல்ல. இது சுகாதாரம், கல்வி, மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகிய மூன்று முக்கியப் பரிமாணங்களில் 12 வெவ்வேறு குறிகாட்டிகளைப் பயன்படுத்தி வறுமையை அளவிடப்படுகிறது. ஒருவர் போதுமான ஊட்டச்சத்து, சுகாதாரம், மின்சாரம், குடிநீர், வீடு போன்ற அடிப்படை வசதிகளில் இருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறார் என்பதைக் கணக்கிடுவது தான் பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI) என்று அழைக்கப்படுகிறது.
குறியீட்டு மதிப்பு என்பது MPI மதிப்பு 0 முதல் 1 வரை இருக்கும். இங்கு வறுமை இல்லை அல்லது மிக குறைவு என்று அர்த்தம். அதே நேரம் மதிப்பு அதிகமாக இருந்தால், அந்த மாநிலத்தில் வறுமை அதிகமாக உள்ளது என்று அர்த்தம் ஆகும்.
தமிழ்நாடு, கேரளாவுக்கு ஏன் பாதகம்?
மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டிற்கான அளவுகோலாக MPI-ஐ மட்டுமே பயன்படுத்த முடிவு செய்தால், தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் பெரும் இழப்பு ஏற்படும். மத்திய அரசு, எந்த மாநிலத்தில் MPI மதிப்பு அதிகமாக இருக்கிறதோ, அதற்கு அதிக நிதி ஒதுக்குவோம் என்ற கொள்கையை ஒரு வேளை பின்பற்றினால், குறைந்த MPI மதிப்புள்ள தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்குக் கிடைக்கும் நிதியின் பங்கு மிகக் கடுமையாகக் குறைந்துவிடும்.
வறுமையை வென்றதற்கு தண்டனை
தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகியவை சுகாதாரம், கல்வி, மற்றும் அடிப்படை உட்கட்டமைப்புத் திட்டங்களில் பல பத்தாண்டுகளாக முதலீடு செய்து, வறுமையைக் கணிசமாகக் குறைத்து, வறுமையை குறைத்து குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. இந்த வெற்றிக்காக, மத்திய அரசின் நிதியை இழக்கும் அபாயம் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் பெரும்பாலும் மக்கள்தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தி, வருமான வரிச் சேகரிப்பு போன்ற பல காரணிகளின் அடிப்படையில் நிதியைப் பெற்று வருகின்றன. MPI-ஐ மட்டும் முக்கிய அளவுகோலாகப் பயன்படுத்தினால், இந்தப் பிற முக்கிய வளர்ச்சி அம்சங்கள் புறக்கணிக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளது.
வறுமை ஒழிப்பு
தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகியவை வறுமை ஒழிப்பு மற்றும் மனித வளர்ச்சியில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதால், அவற்றின் வறுமை விகிதம் மதிப்பு குறைவாக உள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் வறுமை விகிதம் முதன்மைக் காரணியாக வைக்கப்பட்டால், வறுமையில் பின்தங்கிய மாநிலங்களுக்கு நிதி அதிகமாகச் செல்லும், ஆனால் முன்னேறிய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறையும். இது தென் மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
வளர்ந்த மாநிலங்களுக்கு பாதிப்பு
அதேநேரம் இந்தச் சிக்கல் தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் மட்டும் உரியது அல்ல; ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற பல வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் மாநிலங்களுக்கும் இது பாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது. இது வறுமையை வென்ற மாநிலங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு நிதியைக் குறைப்பது, வளர்ச்சிக்கு ஊக்கமளிக்காத ஒரு தவறான அணுகுமுறையாக அமைந்துவிடும் என்ற குற்றச்சாட்டு உள்ளது
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது
அதிக வரி செலுத்தும் மாநிலங்களாக இருந்தும், "வறுமை குறைந்த மாநிலம்" என்ற ஒரே காரணத்திற்காக, மத்திய அரசின் நிதிப் பங்கைப் பெறுவதில் பின்தங்கினால், அது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகப் பார்க்கப்படும் வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய இந்த மாநிலங்கள் இந்தசிக்கலில் இருக்கின்றன. மத்திய அரசு இன்னமும் எப்படி கணக்கீடு இருக்கும் என்று கூறவில்லை. இதுபற்றி மத்திய அரசு விளக்கம் அளித்தால் தான் உண்மை நிலை தெரியவரும்.












Click it and Unblock the Notifications