பஞ்சாப் மாதிரி.. ஆடிப்போகும் தமிழ்நாடு! பாஜக போராட்டத்தில் மேலும் ஒரு முன்னாள் ராணுவ வீரர் மிரட்டல்
பாஜக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் மேலும் ஒரு முன்னாள் ராணுவ வீரர் தமிழ்நாட்டு மக்களை மிரட்டும் வகையில் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: பாஜக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் தமிழ்நாட்டில் குண்டு வைப்போம் என்று மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில் மேலும் ஒரு முன்னாள் ராணுவ வீரர் தமிழ்நாட்டை மிரட்டும் வகையில் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனிப்பட்ட பிரச்சனை காரணமாக கிருஷ்ணகிரியில் பிரபு என்ற ராணுவ வீரர் திமுக கவுன்சிலரால் கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டதை தமிழ்நாடு பாஜக தொடர்ந்து கண்டித்து வருகிறது.
நேற்று காலை சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் பாஜக முன்னாள் ராணுவத்தினர் பிரிவை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மிரட்டிய கர்னல் பாண்டியன்
அந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு அரசையும், திமுகவையும் கண்டித்து பாஜக முன்னாள் ராணுவத்தினர் பிரிவை சேர்ந்தவர்கள், பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பலர் பேசினர். அதில் முன்னாள் ராணுவ வீரரும் பாஜக தேசிய செயற்க்குழு உறுப்பினருமான கர்னல் பாண்டியன் குண்டு வைப்போம் என தமிழ்நாடு அரசுக்கு மிரட்டல் விடுத்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராணுவத்தை சீண்டினால்
கர்னல் பாண்டியன் தனது உரையில், "தமிழ்நாடு அரசை நான் ஒரு விசயத்தில் எச்சரிக்கிறேன். இந்திய ராணுவம்தான் உலகத்திலேயே 2 வது பெரிய ராணுவம் . உலகத்திலேயே ஒழுக்கமான ராணுவமும் இந்திய ராணுவம்தான். நமது ராணுவம் ஒழுக்கத்துக்கு பெயர்போனது. அப்படிப்பட்ட ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லது அல்ல.

குண்டு வைக்க தெரியும்
நாங்கள் எந்த விசயத்தை செய்தாலும் ஒழுக்கமாகவும் உத்வேகத்துடனும் செய்து காட்டுபவர்கள். நீங்கள் எங்களுக்கு பரிட்சை வைத்து பார்க்க நினைத்தால் சட்டம் ஒழுங்கு நாட்டில் பாதுகாப்பாக இருக்காது. இங்கே அமர்ந்து இருக்கும் அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களும் குண்டு வைப்பதில் கெட்டிக்காரர்கள். சுடுவதில் கெட்டிக்காரர்கள். சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள்.

சுற்றி வளைத்த செய்தியாளர்கள்
இந்த வேலைகள் எல்லாம் எங்களுக்கு நன்றாகவே தெரியும். இதை எல்லாம் நாங்கள் செய்வதாக இல்லை. எங்களை செய்ய வைத்து விடாதீர்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்." என்று பேசினார். இந்த போராட்டம் முடிந்த பிறகு அங்கிருந்த செய்தியாளர்கள் கர்னல் பாண்டியனை சுற்றிவளைத்து சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

மிரட்டல் தான்
அவரிடம் குண்டு வைப்பது தீவிரவாத செயல் இல்லையா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, "நாங்கள் மிரட்டவில்லை. எச்சரிக்கிறோம். இனிமேல் நீங்கள் செய்தால் நாங்கள் செய்வோம். இது மிரட்டல்தான். இது மிரட்டல்தான். தமிழ்நாடு அரசை எச்சரிக்கிறேன்." என்று ஆவேசமாக தெரிவித்தார்.

வழக்குப்பதிவு
குண்டு வைப்போம் என்று பாஜக போராட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்த கர்னல் பாண்டியன், கடந்த 2015 ஆம் ஆண்டு பாஜக முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநில தலைவராக இருந்தார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.

மேலும் ஒரு சர்ச்சை பேச்சு
இந்த நிலையில் பாஜக போராட்டத்தில் மேலும் ஒரு முன்னாள் ராணுவ வீரரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் பேசும் அவர், "40 வருடத்துக்கு முன் நடந்த ஒரு விசயத்தை சொல்கிறேன். பஞ்சாப் மாநிலத்தில் இதேபோன்று கை வைத்ததற்கு அந்த பஞ்சாப் பட்டாலியன் முழுவதும்போய் அந்த ஊரில் இருக்கும் அனைவரையும் அடித்து நிமிர்த்துவிட்டார்கள். நடக்க வேண்டுமா இங்கே? ஆடிப்போயிடும் தமிழ்நாடு. வேணாம் எங்களை வெறுப்பேத்தாதீங்க.

என்ன நடக்குமோ அது நடக்கும்
நாங்க காண்டானால், என்ன நடக்கும் என்று தெரியாது. நல்லதுக்கு தான் நாங்கள் செய்வோம். ஆனால், எங்களை நீங்கள் துன்புறுத்தினால், நாங்கள் இறங்கிலால் அப்புறம் வேறு மாதிரி ஆகிவிடும். அதனால் தயவு செய்து ராணுவ வீரர்களுடன் விளையாடி பார்க்காதீர்கள். சின்னாப்பின்னமாக போய்விடுவீர்கள். அவ்வளவுதான். இதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை. இதற்கு மேல் என்ன நடக்குமோ அது நடக்கும்." என்றார்.












Click it and Unblock the Notifications