குலுங்கியது சென்னை.. சின்ன சலசலப்பு கூட இல்லை.. அமைதியாக நடந்து முடிந்த திமுக பேரணி!
திமுக பேரணி அமைதியாக நடந்து முடிந்தது
சென்னை: எத்தனை பாதுகாப்பு, எவ்வளவு கெடுபிடி, என்னென்ன விதிமுறைகள் இருந்தால் என்ன.. எங்கள் நோக்கம், குடியுரிமை சட்டத்தை மிக தீவிரமாக எதிர்ப்பதுதான் என்பதை திமுக இன்று சென்னை பேரணியில் நிரூபித்துள்ளது!
நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் வலுவடைந்த நிலையில், தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. அந்த வகையில், திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இது சம்பந்தமாக முக ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.. இதையொட்டி எதிர்ப்பு பேரணியும் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான அனுமதி கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் மனு தரப்பட்டது. ஆனால் போலீஸ் அனுமதி தரவே இல்லை.

அமைதிப் பேரணி
இதன்பிறகு பேரணிக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட, கோர்ட்டு பேரணிக்கு தடை விதிக்க மறுத்தது.. ஆனால் தடையை மீறி பேரணி நடந்தால், அதில் வன்முறை ஏற்பட்டால் அதற்கு தலைவர்களே பொறுப்பு என்றும் நீதிபதிகள் சொல்லிவிட, இன்று காலை பேரணி திட்டமிட்டபடி நடக்க ஆரம்பித்தது.

சாரை சாரையாக
விடிகாலையில் இருந்தே தாளமுத்து நடராசன் மாளிகை அருகே திமுக தொண்டர்கள் குவிய தொடங்கினார்கள். தொடர்ந்து கூட்டணி கட்சி தொண்டர்கள் என சாரை சாரையாக வர தொடங்கினர்.. அழைப்பு விடுக்கப்பட்ட 98 அமைப்புகளுடன் பிற அமைப்புகளும் ஒன்று கலந்தன.

போலீஸ் கண்காணிப்பு
மக்கள் கூட்டம் சேர சேர, ஏதாவது ஒரு வகையில் சின்ன பூசலாவது ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருந்தது.. ஆனால், எங்கு பார்த்தாலும் போலீசாரின் கண்காணிப்புகள் இருந்து கொண்டே இருந்தது.. திமுக தலைவர் ஸ்டாலின் வந்தவுடனேயே பேரணி ஆரம்பித்துவிட்டது.

தொடர் அட்வைஸ்
பேரணி துவங்குவதற்கு முன்பேயே பேரணியில் பங்கேற்பவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ் பாரதி எம்பி., சைதை எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அவ்வப்போது தொண்டர்களுக்கு அட்வைஸ் தந்துகொண்டே இருந்தனர்.. பேரணியில் முழு கவனம் செலுத்தி கண்காணித்து கொண்டே இருந்தனர்.

பதட்டமே இல்லை
அதேபோல, குடியுரிமை சட்ட நகலையோ, கொடும்பாவிகளையோ யாரும் எரிக்கக்கூடாது என்று எடுத்த எடுப்பிலேயே கண்டிப்பான உத்தரவு போட்டுவிடவும், தொண்டர்களும் அதற்கு செவிசாய்த்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு வழியெல்லாம் இருந்தன.. துப்பாக்கி போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தது. கலவரம் ஏதாவது ஏற்பட்டால் தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனங்கள் ஒரு பக்கம் நின்றிருந்தன.. அசம்பாவித நிகழ்வு ஏற்பட்டுவிடாமல் தடுக்க தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.

மிக பலத்த பாதுகாப்பு
கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் என அவர்களது தீவிரம் இந்த பேரணியில் அதிகமாகவே தென்பட்டது. ஆங்காங்கே ட்ரோன்கள் மூலம் பேரணி வீடியோ பதிவாகி கொண்டிருந்தது.. ராஜரத்தினம் ஸ்டேடிய மேடையில் ஏறி தலைவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், மத்திய அரசுக்கு எதிராக கோஷம் மட்டுமே எழுப்பி தங்கள் எதிர்ப்பை மிக அமைதியான முறையில் பதிவு செய்தனர்.

கண்ணியம் காத்த கட்டுப்பாடு
அத்துடன் ஐகோர்ட்டின் உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மதித்து இந்த பேரணி நடந்தது... எந்த அத்துமீறலும் இல்லை.. சிறு பூசலும் இல்லை.. மிக மிக அமைதியாக சென்னையில் பேரணி நடத்தி முடித்துள்ளது திமுகவின் பக்குவ முதிர்ச்சி கலந்த திறமை என்றுதான் சொல்ல வேண்டும்!












Click it and Unblock the Notifications