கும்மிடிப்பூண்டியில் அதிகாலை 2 மணிக்கு அதிரடி என்ட்ரி.. பறந்த ரிப்போர்ட்.. சிக்கலில் அரசு அதிகாரிகள்
சென்னை: பொதுவாக ஆயுத பூஜை தொடங்கி தீபாவளி நெருங்கும் வரை அனைத்து சோதனைச் சாவடிகள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், வருவாய் துறை அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்துவார்கள். அந்த வகையில் தான் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே போக்குவரத்து துறை சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அதிகாலை முதல் விடிய விடிய நடந்த சோதனையில் கத்தை கத்தையாக பணம் சிக்கியது.
தீபாவளி நெருங்கும் நிலையில், மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்வார்கள். அதேபோல் பல்வேறு அரசு அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை செய்வார்கள். அப்படி சோதனை செய்யும் போது, கணக்கில் வராத பணம் இருந்தால், அங்குள்ள அதிகாரிகள் அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அப்படி விளக்கம் அளிக்க முடியவில்லை என்றால், அதனை லஞ்சப்பணமாக கருதி விசாரணையை தீவிரப்படுத்தி வழக்கு பதிவு செய்வார்கள். அப்படிப்பட்ட சோனை தற்போது தமிழ்நாடு முழுவதும் தொடங்கி உள்ளது.

எளாவூரில் சோதனை சாவடி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி இருக்கிறது. அந்த சோதனை சாவடியில் போக்குவரத்து துறை போலீஸ், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, வேளாண்மைத்துறை. வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அதிகாரிகள் ஒரே இடத்தில் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். கடத்தல் நடைபெறுவதை தடுக்கவும், சட்டவிரோத செயல்களை நடைபெறுவதை தடுக்கவும் இந்த சோதனை நடைபெறும்..
சரக்கு வாகனங்களை சோதிப்பார்கள்
அதேபோல் போக்குவரத்து துறை சார்பில், சோதனைச்சாவடியை கடந்து தமிழகத்திற்குள் நுழையும் சரக்கு வாகனங்களின் எடை மற்றும் ஆவணங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த சோதனைச்சாவடிகளில் விதிமுறைகளை மீறி வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தது.
டிஎஸ்பி சோதனை
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலினி, விஜயலட்சுமி மற்றும் மாவட்ட ஆய்வுக் குழு துணைத் தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் நேற்று அதிகாலை 2 மணிக்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள். விடிய விடிய நடந்த சோதனை, பிற்பகல் 12 மணி வரை நடந்தது.
5 லட்சம் பணம் சிக்கியது
போக்குவரத்து துறை அலுவலகம், ஆவண காப்பாக அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 44 ஆயிரத்து 500 சிக்கியது. பணியில் இருந்த போக்குவரத்து சோதனைச் சாவடி அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications