வர்ணாஸ்ரம எதிர்ப்பு; கீதைக்கு ஆதரவு? பூமி பூஜை உண்டு; பெரியாரும் உண்டு! கே.ராஜன் ஒரு புடி
சென்னை: தீர்மானமே நிறைவேற்றாமல் ஒரு மாநாட்டை விஜய் நடத்தி இருப்பது அவரது அனுபவக் குறைபாட்டையே காட்டுகிறது என்று தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்திருக்கிறார்.
விஜய் கட்சி தொடங்கி இருப்பது தொடர்பாகக் கருத்துச் சொல்பவர்கள் பலரும் 200 கோடி சம்பளத்தைவிட்டுவிட்டு வந்திருக்கிறார் என்றே பேசி வருகிறார்கள். அவரும் மிகப்பெரிய சம்பளத்தைத் தூக்கி எறிந்துவிட்டு தொண்டர்களை நம்பியே வந்திருப்பதாக விக்கிரவாண்டி மாநாட்டில் பேசி இருந்தார்.

அடுத்து தான் நடிக்க வந்த போது விமர்சித்தவர்கள் பின்னால் தன்னை ஏற்றுக் கொண்டார்கள் என்றும் கரப்ஷன் என்பது ஒரு வைரஸ் மாதிரி உள்ளது என்றார். இந்த ஊழல்வாதிகள் எங்கே இருப்பார்கள்? எப்படி இருப்பார்கள் என்பது கண்ணுக்குத் தெரியாது என்றும் அவர்களைக் கண்டுபிடிப்பது கடினம் என்றும் 100% ஊழலை ஒழிக்க முடியுமா? எனத் தெரியவில்லை இருந்தாலும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் பேசி இருந்தார்.
இந்நிலையில் விஜய் மாநாடு பற்றி தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், "ஒரு கட்சி அரசியல் மாநாடு நடத்தினால் அதற்கு என்று சில முறைகள் இருக்கின்றன. முன்னதாக கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். தீர்மானங்கள் போடுவார்கள். அதை கட்சி தொண்டர்களின், நிர்வாகிகளின் ஒப்புதலோடு நிறைவேற்றுவார்கள். இறுதியாக தலைவர் பேசுவார். விஜய் மாநாட்டில் அவர் மட்டுமே பேசினார். தீர்மானமே இல்லை. பேச்சு என்பது காற்றில் போய்விடும். முதல் அரசியல் மாநாட்டில் போடும் தீர்மானம் தான் பொன் ஏட்டில் பொறிக்கப்படும். அதைச் செய்யவே இல்லையே?
காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டுப் பாதுகாப்பு வழங்கியது. அதற்கும் தொண்டர்களுக்கும் . இறுதியாக நன்றியுரை சொல்ல வேண்டும். அதைக்கூடச் சொல்லவில்லை. அதைப் பார்த்தால் ஆடியோ லாஞ்ச் போல இருந்தது. சர்கார் பட கிளைமாஸ் போல விஜய் பேசினார். உடன் நிர்வாகிகளே இல்லை. ஜெயலலிதா எப்படி தன் பக்கத்தில் யாரையும் உட்கார வைக்கமாட்டாரோ அதேபோல இவரும் செய்திருந்தார். அது ஒரு குறையாக தெரிந்தது.
திமுகவை நேரடியாக தாக்கி பேசினார். பாஜக பெயரைக் கூடச் சொல்லமாட்டேன் என்கிறார். அரசியல் என்றால் நேரடியாக விமர்சிக்க வேண்டும். அதிமுக, பாஜகவை விட்டுவிட்டு திமுகவை மட்டும் விமர்சித்தால் மக்கள் சந்தேகப்படுவார்கள். வாரிசு அரசியல் செய்து லஞ்சம் வாங்குகிறார்கள் என்கிறார். வாரிசு அரசியல் என்றால் கோபாலபுரத்தில் உள்ள மக்கள் மட்டுமா ஓட்டுப் போட்டார்கள்?

உதயநிதி தனக்குப் போட்டியாக இருக்கிறார் என்பதற்காகத் தாக்கி பேசுகிறார். அது எப்படிச் சரியாகும்? 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்கிறார். அடுத்து யாரை கூட்டணிக்கு வந்தாலும் சேர்த்துக் கொள்வேன் என்கிறார். முதலில் இவர் கொள்கையை மக்கள் ஏற்றுக் கொண்டு ஓட்டுப்போடவேண்டும். பிறகுதான் மந்திரி சபை அமைப்பது, ஆட்சியில் பங்கு கொடுப்பது பற்றிப் பேச வேண்டும். இவர் கொள்கையில் ஒன்று கூட புதிய விசயம் இல்லை. திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், விசிக சொன்னதைத்தான் இவர் சொல்லி இருக்கிறார்.
5 தலைவர்களைச் சொல்கிறார் விஜய். அஞ்சலை அம்மாள் காந்தியவாதி. அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அதற்காக அவருக்கு கட் அவுட். காமராஜர் சிறந்த ஆட்சி நிர்வாகி. அவர் நாடார் வகுப்பைச் சேர்ந்தவர் உடனே அங்கே கை வைக்கிறார் விஜய். அம்பேத்கரைக் காட்டி பட்டியலின மக்களைக் குறி வைக்கிறார். இதை நான் சொல்லவில்லை. நிறையப் பேர் சொல்லிவிட்டார்கள். விஜய் அம்பேத்கரைக் காட்டி விட்டால், உடனே திருமாவளவனை விட்டுப் போய்விடமாட்டார்கள்.
வர்ணாஸ்ரமத்தை எதிர்பார் விஜய். பகவத்கீதையைக் கொடுத்தால் கையில் வாங்கிக் கொள்வார். பெரியாரை ஏற்பேன் என்பார். மாநாட்டுக்குப் பூமி பூஜை போடுவார். பல கொள்கை கோளாறுகள் உள்ளன. சீமான் அதனால்தான் முதலில் விஜய்யை வரவேற்றார். இப்போது ஒத்துப் போகாது என்கிறார். சீமான் தனியாக நின்று வென்று காட்டியவர். அவர் இதுவரை தனியாகவே நின்று தேர்தல் ஆணையத்தில் கட்சிக்கு அங்கீகாரம் பெற்றுள்ளார்.
அவரைப் போல யாருமே உழைக்கவில்லை. எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிடவே கூடாது. விஜய்யின் பலம் என்ன என்பது இன்னும் 6 மாதத்தில் தெரிந்துவிடும். விஜய் முகத்திற்காகத்தான் இத்தனை லட்சம் பேர் வந்துள்ளனர். ஆகவே, விஜய் அவராகவே இருக்கவேண்டும். அவர் எம்.ஜி.ஆர் ஆக முயற்சிக்க வேண்டாம்" என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications