Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாஜ்மஹால் ஸ்டைலில் ரஹ்மானின் தாயார் கல்லறை! அசந்துபோன நண்பர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவரது தாயாருக்கு தாஜ்மஹால் தோற்றத்தில் கல்லறை அமைத்துள்ளது தெரியவந்துள்ளது.

மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது வருகை இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்தது. தமிழ்நாட்டில் தொடங்கிய அவரது இசைப் பயணம், 'ஸ்லம்டாக் மில்லினியர்' மூலம் உலக அரங்கிற்குச் சென்றது. இரண்டு ஆஸ்கர் விருதுகளை அவர் பெற்றார்.

AR Rahman built a mausoleum for his mother in the shape of the Taj Mahal

இந்தளவுக்கு அவர் வாழ்க்கையில் சாதிக்க, அவரது தாயார் பக்கபலமாக இருந்தார். மகனின் ஆசைக்கு அவர்தான் உயிர் கொடுத்தார். ஆகவே, ரஹ்மான் தனது தாயாரை எங்கும் விட்டுக்கொடுத்ததில்லை.

ஏ.ஆ.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் கடந்த 2022, டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி மறைந்தார். ரஹ்மான் தனது 9வது வயதில் அவரது தந்தை ஆர்.கே. சேகரை இழந்தார். அன்று முதல் ரஹ்மானின் வாழ்க்கையில் அனைத்தும் அவரது அம்மாதான்.

'அப்பா மறைந்த பிறகு அம்மாதான் என்னை இசைத்துறையில் தொடரச் சொன்னார். எனக்கு எலெக்ட்ரானிக் அல்லது கணினித் துறையில் ஆர்வம் இருந்தது. ஆனால், குடும்பத்தைக் கவனிப்பதற்காக இசை துறைக்குப் போ. உனக்கும் இசை தெரியும். அதில் சாதனை படைப்பாய்' என்று ஊக்கம் அளித்தார் எனப் பேட்டிகளில் கூறி இருக்கிறார்.

AR Rahman built a mausoleum for his mother in the shape of the Taj Mahal

தாயார் மறைவை ஒட்டி அவர் எழுதி இருந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. அதில் ரஹ்மான், 'தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்பது நபி மொழி.

என்னைப் பொறுத்தவரை இது மிகவும் உண்மை. ஏனெனில் என் தாயார் உறுதியாக இருந்து என்னை இசைத்துறையில் ஈடுபடச் செய்திருக்காவிட்டால், இந்த வாழ்க்கையில் எல்லா இன்பங்களையும் அன்பையும் இழந்திருப்பேன்.

இந்தப் புகழும் பணமும் எங்களை வளர்க்க எனது தாயார் சிந்திய கண்ணீரையும் பட்ட அவமானங்களையும் ஈடு செய்யாது' என்று உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருந்தார்.

ரஹ்மானின் தாயார் மறைவுக்குப் பிறகு அவரைப் பற்றி ஊடக உலகம் மறந்து போனது. அவரை எங்கே அடக்கம் செய்தார்கள்? அவரது நினைவிடம் எப்படி உள்ளது என்பது பற்றிய எந்தச் செய்தியும் ஊடகங்களுக்குத் தெரியாது.

இந்நிலையில் அவரது தாயாரின் நினைவிடத்திற்கு எழுத்தாளர் ஒருவரை ஏ.ஆர்.ரஹ்மான் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அங்குள்ள நினைவிடத்தைக் கிட்டத்தட்ட தாஜ்மஹாலைப் போலக் கட்டி இருக்கிறார். ரஹ்மானின் தாயார் நினைவிடம் எங்கே உள்ளது? அதைப் பார்த்த அனுபவம் என்ன? இதைப் பார்த்துத் திரும்பிய எழுத்தாளர் நாகூர் ரூபி என்ன சொல்கிறார்? ஏன் இவரை ரஹ்மானே அழைத்தார்? அனைத்திற்கும் பதில் தருகிறார் நாகூர் ரூமி.

AR Rahman built a mausoleum for his mother in the shape of the Taj Mahal

"சில மாதங்களுக்கு முன்பு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் துபாயிலிருந்து எனக்கு அலைபேசி அழைப்பு கொடுத்தார்.

என் வீடியோ ஒன்றைப் பார்த்ததாகவும், அது அவருக்குப் பிடித்திருந்ததால் என்னையும் பார்க்க விரும்புவதாகவும், இன்ஷா அல்லாஹ் சென்னை வந்ததும் தெரிவிப்பதாகவும் சொன்னார்.

ஆனால் அவர் சொல்லி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது! அவர் அவ்வளவு பிசி! இடையில் அவர் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தபோது மறக்காமல் எனக்கு மூன்று ஸ்பெஷல் முன்வரிசை டிக்கட்டுகளை - ஒரு டிக்கட் 30,000 ரூபாயாம் - அனுப்பினார். நானும் போய் வந்தேன். அங்கேயும் அவரைத்தனியாகப் பார்த்து பேசமுடியவில்லை.

நேற்று திடீரென்று அவரது மேனேஜர் ஒருவர் என்னை அழைத்தார். இன்று காலை (27.01.24) கார் அனுப்புவதாகவும் ஏ ஆர் வீட்டுக்கு அவர் அழைத்திருப்பதாகவும் சொன்னார். காலை நான்கு மணிக்கு கார் வருமென்று சொன்னார்! அதாவது நான் படுப்பதற்குக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு முன்பு!

AR Rahman built a mausoleum for his mother in the shape of the Taj Mahal

வேறுவழியின்றி மூன்று மணிக்கே குளித்துவிட்டுத் தயாரானேன்! மிகச்சரியாகக் காலை நான்கு மணிக்குக் கார் வேளச்சேரிக்கு (என் மகள் வீட்டுக்கு) வந்துவிட்டது! அதில் ஏறிப்போனேன். அவர் வீட்டுக்கு.

வீட்டில் யாருமே இல்லை! நிசப்தம். ஒரு இடத்தில் என்னை உட்கார வைத்துவிட்டு, 'சார் வருவார்' என்று சொல்லிவிட்டு வந்தவர் போய்விட்டார்! கொஞ்ச நேரம் ஃபோனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வேறு என்ன செய்ய?

ஒரு ஐந்து மணி வாக்கில் ரஹ்மான் வந்தார். வந்தவுடன் சலாம் சொன்னார். பின் தொழப்போகலாமா என்றார். நானும் அவரும் இன்னொரு கேரளாக்காரரும் மாடிக்குச் சென்றோம்.

அங்கே தொழுகைக்காகவே ஓரிடம் ஒதுக்கப் பட்டிருந்தது. அழகான விரிப்பு, ஆந்திராவில் உள்ள ஏதோ தர்காவின் படம், ஒரு முஸ்லிம் ஞானியின் வரைபடம் எல்லாம் இருந்தன.

AR Rahman built a mausoleum for his mother in the shape of the Taj Mahal

என்னை இமாமத் செய்கிறீர்களா என்று கேட்டார். நான் எப்போதுமே அதைச்செய்வதில்லை. எனவே பணிவாக மறுத்துவிட்டேன். அவரே இமாமத் செய்தார். நானும் அந்த கேரளா நண்பரும் அவர் இமாமத் செய்யத் தொழுதோம்.

பின்னர் கீழே வந்தோம். அப்போது அங்கே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வந்தனர். அவர்தான் புகழ்பெற்ற தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் என்று எனக்குத் தெரியவில்லை! பின் நாங்கள் எல்லோரும் ஒரு வேனில் ஏறிக்கொண்டோம். வேன் ரெட்ஹில்ஸுக்கு அருகிலிருந்த ஒரு இடத்துக்குச் சென்றது. அங்கேதான் ரஹ்மானின் அன்பு அன்னையின் அடக்க ஸ்தலமிருந்தது.

ஆனால் ஏதோ தாஜ்மஹாலுக்கு வந்துவிட்ட மாதிரி இருந்தது. (நான் இன்னும் தாஜ் மஹாலைப் பார்க்கவில்லை)! அவ்வளவு அழகாக அந்த இடம் இருந்தது. வெகு நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

அங்கே சில படங்கள் அவரோடு எடுத்துக்கொண்டோம். அவர் அம்மாவின் அடக்க ஸ்தலத்தை மிகவும் 'ரிச்' ஆக வைத்திருந்தார். அடக்க ஸ்தலத்தின்மீது போர்த்தப்பட்டிருந்த போர்வையின் அழகு கண்ணைக்கவர்ந்தது. அதற்கு நேர் எதிரே அம்மாவின் வரைபடம் ஒன்றும் இருந்தது.

யாரோ ஒருவர் குர்'ஆன் ஓதிக்கொண்டே இருந்தார். ஒரு யந்திரத்தில்! திருமறை ஓதப்படும் சப்தம் கேட்டுக்கொண்டே இருக்க ஏற்பாடு. டீ, டிஃபன் எல்லாம் கொடுக்கப்பட்டது. என்னைப்பற்றி உயர்வாக ராஜீவ் மேனனிடம் ரஹ்மான் சொன்னார்! என் வீடியோக்கள் பலவற்றை ரஹ்மான் பார்த்திருக்கிறார். அவர் பேச்சில் அது தெரிந்தது.

சாப்பிடப்போகும்போது ரஹ்மானின் மேனேஜர் 'நீங்க ரஃபி சார்தானே?' என்றார்.

'ஆமாம். நீங்க?' என்றேன்.

'சார், நான் ஆம்பூரில்தான் படித்தேன். நீங்க என் ப்ரொஃபசர் சார்' என்றார்!

இரட்டிப்பு சந்தோஷம். என் மாணவர் என்னை அடையாளம் கண்டு கௌரவப் படுத்துகிறார். அவர் ரஹ்மானிடம் மேனேஜராக இருக்கிறார்! அல்ஹம்துலில்லாஹ்.

யுகபாரதி என் நெருங்கிய நீண்டநாள் நண்பர் என்று ரஹ்மானிடம் சொன்னேன்.

அவர் பிரமாதமாகப் பாடல்கள் எழுதுவதாகச் சொன்னார். எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.

ஒருநாள் சாப்பிட வீட்டுக்கு வாங்க என்று அழைத்துள்ளேன். வருவதாகவும் சொல்லியுள்ளார். ஆனால் அது எப்போது என்பதை காலம்தான் முடிவு செய்யவேண்டும்!

ராஜீவ் மேனனைப்பற்றி அவர் கூட இருந்தபோது தெரியவில்லை. கடைசியில்தான் சகோதரர் கவிஞர் மஹ்ஷூக் ரஹ்மான் (ஜோதா அக்பர் படத்தில் வரும் க்வாஜா மேரி க்வாஜாவுக்கான தமிழ்ப்பாடலை எழுதியவர்) சொன்னார். அவரும் வந்து இணைந்துகொண்டார். சில ஃபோட்டோக்களை அவர்தான் எனக்காக எடுத்துக்கொடுத்தார்.

திரும்பி வரும் வழியில் கோயம்பேட்டில் இறங்கிக்கொண்டேன். என் மூத்த மகளைப் பார்ப்பதற்காக. இன்ஷா அல்லாஹ் சந்திப்போம் என்று சொல்லி விடைபெற்றார்.

இறைவன் அவரை மேலும் மேலும் உயர்த்திக்கொண்டே போவான். ஏனெனில் கொஞ்சம்கூடப் பெருமை இல்லாத, மிக எளிமையான மனிதராக அவர் இருக்கிறார். வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன்" என்கிறார் நாகூர் ரூபி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+