"நான் மட்டும் தனியா".. எப்படிங்க இப்படி சொல்லலாம்.. எடப்பாடி பழனிசாமி பேச்சால்.. அப்செட்டான அதிமுக?
சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சொன்ன கருத்து ஒன்றை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.

அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இன்றோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
எடப்பாடிக்கு சிக்கல்: இப்படிப்பட்ட நிலையில்தான் லோக்சபா தேர்தல் தோல்வி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சொன்ன கருத்து ஒன்றை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசி எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவும் ஒ பன்னீர்செல்வமும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றதால்தான் அதிமுக ஒரு சதவிகிதம் கூடுதலாக வாக்கு வாங்கியுள்ளது.
அதெல்லாம் முடிந்து போனது. அதைப்பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. வேண்டும் என்றே திட்டமிட்டு எதிரிகளுடன் சேர்ந்து ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.1 சதவிகிதம் அதிகமாகியுள்ளது. அவர்கள் எல்லாம் பிரிந்து போனதால்தான் ஒரு சதவிகிதம் கூடுதலாக வந்துள்ளது. லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்தது.
சட்டமன்ற தேர்தலுக்கும், மக்களவத் தேர்தலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சட்டமன்ற தேர்தல் வந்தால் மக்கள் எங்களுக்கு சாதகமாக வாக்களிப்பார்கள். திமுக – அதிமுக இரண்டு கட்சிகளுமே மாறி மாறி வெற்றி தோல்வியைக் கண்டு வருகின்றன. ஆட்சி அதிகார பலம், பண பணத்தை வைத்து பல கட்சிகள் பிரசாரம் செய்தன. அதிமுக சார்பில் நான் மட்டுமே பிரசாரம் செய்தேன். தேமுதிக சார்பில் பிரேமலதா பிரசாரம் செய்தார்.
பாஜகவுடன் கூட்டணி இருந்திருந்தால் வென்றிருப்போம் என்று, நடந்து முடிந்ததைப் பற்றி பேசக் கூடாது. தேர்தலுக்கு முன்பு அண்ணாமலை பல கனவுகளை கண்டிருப்பார். அண்ணாமலையின் கனவு பலிக்கவில்லை என்பதால் இப்படி பேசுகிறார். பாஜக உடன் இனி கூட்டணி இல்லை.
எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். அதிமுக மீண்டும் வலுப்பெறும். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது. தேசிய கட்சிகள் வெற்றி பெரும் வரை நம்மை பயன்படுத்திக் கொள்கின்றனர். பின்னர் கண்டுகொள்வதில்லை, என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
விரும்பவில்லை: இந்த நிலையில்தான் அதிமுகவில் சிலர் எடப்பாடியின் இந்த பேச்சை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
எடப்பாடிதான்.. தன்னை அதிமுகவின் முகமாக முன்னிறுத்துகிறார். தனக்கு போட்டியாக இருந்தவர்களை வெளியே அனுப்பியது அவர்தான். அப்படி இருக்க.. இப்போது தான் மட்டும் தனியாக பிரச்சாரம் செய்தேன்.. அதிமுக சார்பில் நான் மட்டுமே பிரசாரம் செய்தேன். தேமுதிக சார்பில் பிரேமலதா பிரசாரம் செய்தார் என்று சொல்வது ஏன்?
ஜெயலலிதா இப்படி தனியாகவே பிரச்சாரம் செய்வார். அவர் அதிமுகவை வெற்றிபெற வைக்கவில்லையா? ஓ பி எஸ் போன்று கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களை வெளியே அனுப்பிய பின் எப்படி வெற்றி கிடைக்கும் என்று கட்சிக்கு உள்ளேயே நிர்வாகிகள் பேச தொடங்கி உள்ளனராம்.
அதிமுக தோல்விக்கு என்ன காரணம்: 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது. அதிமுகவின் தோல்விக்கு பின் வரும் காரணங்கள் உள்ளன.
1. அதிமுக கட்சி பல விதமாக பிரிந்தது. ஓபிஎஸ் தரப்பு, டிடிவி தரப்பு தென் மண்டலங்களில் , டெல்டாவில் வாக்குகளை பிரிக்கின்றனர். இவர்களை இணைக்க வேண்டும்.
2. அதிமுகவில் வேட்பாளர் தேர்வு சொதப்பல். பல தொகுதிகளில் உள்ளூர் ஆட்களுக்கே தெரியாதவர்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். சில இடங்களில் வெளியூர் ஆட்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். கல்லை கூட ஜெயிக்க வைக்க எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதா இல்லையே.
3, அதிமுகவில் நிர்வாகிகளே பெரிதாக வேலை செய்யவில்லை. பெரிதாக தேர்தலுக்காக களமிறங்கி பணிகளை செய்யவில்லை.
4. பொதுவாக நாடாளுமன்ற தேர்தல் மத்தியில் ஆட்சியை தேர்வு செய்வது. அப்படி இருக்க பிரதமர் வேட்பாளர் இல்லாமல் அதிமுக என்ன சொல்லி வாக்கு கேட்கும்.
5. பெரிய கூட்டணியை அமைக்காமல் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது.
6. எடப்பாடியின் பிரச்சாரம் பெரிதாக எடுபடவில்லை. அவரின் பிரச்சாரம் பெரிதாக கொங்கில் கூட மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.
7. கட்சியில் தேர்தல் செலவிற்கான பணம் கூட சரியாக செலவாகவில்லை. நிர்வாகிகள் மூலம் பணம் பெரிய அளவில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications