ஸ்பாட்டில் டென்ஷன் ஆன செந்தில்குமார்.. திமுகவில் வெடித்த பூமிபூஜை..ஸ்டாலினிடம் கிசுகிசுக்கும் 2 பேர்
தர்மபுரி எம்பி செந்தில்குமார் பற்றி முதல்வரிடம் புகார் சொல்லப்போவதாக தெரிகிறது
சென்னை: தர்மபுரி எம்பி செந்தில்குமாருக்கு எதிராக செய்தி ஒன்று திமுகவில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?
தர்மபுரி எம்பியாக இருக்கிறார் திமுக செந்தில்குமார்... இவர் எம்பி.ஆனதிலிருந்தே அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர்.
கடந்த 2 நாட்களாகவே இவர் மீது மேலும் ஒரு சர்ச்சை வெடித்தது.. இது தொடர்பாக சோஷியல் மீடியாவிலும் விவாதங்கள் கிளம்பி உள்ளன.

ஆலாபுரம்
தர்மபுரி மாவட்டம் ஆலாபுரத்தில் இருக்கும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியை புணரமைக்கும் திட்டத்திற்காக 1கோடியே 38 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது... இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இதற்கான துவக்க நிகழ்ச்சி கடந்த 16-ந்தேதி நடந்தது... பொதுப்பணித்துறை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறையின் செயற்பொறியாளர் குமார் செய்திருந்தார். நிகழ்ச்சிக்கு செந்தில்குமார் எம்பி அழைக்கப்பட்டிருந்தார்.. அவரும் ஸ்பாட்டுக்கு வந்திருந்தார்.

புரோகிதர்
பொதுப்பணித்துறை அதிகாரிகள், நிகழ்ச்சியை துவக்கும் முன்பாக, பூமி பூஜை போடுவதற்காக புரோகிதரும் வந்திருந்தார்... புரோகிதரிடம் நிகழ்ச்சியை துவக்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். உடனே, "அரசு நிகழ்ச்சியில் இந்து முறைப்படி பூஜை நடத்தக்கூடாது... நிறுத்துங்கள்" என்று செந்தில்குமார் கூறியுள்ளார்.. அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள், "அரசு நிகழ்ச்சிகள் ஆன்மீகம் வழியில் நடப்பதுண்டு. பல நிகழ்ச்சிகள் அப்படி நடந்திருக்கிறது.. இப்போதைய ஆட்சியிலும் கூட நடந்திருக்கிறது" என்று விளக்கம் தந்துள்ளார்.

புனஸ்காரங்கள்
அதற்கு செந்தில்குமார், "அப்படி பூஜை நடத்த விதிமுறைகள் உள்ளதா? இருந்தால் காட்டுங்கள்" என்று கேட்டார்.. இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அதிகாரிகள் திணறியுள்ளனர்.. மேலும், எம்பியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, பூஜை புனஸ்காரங்களை நிறுத்திவிட்டனர்... பூஜை பொருட்களையும் திரும்ப எடுத்து போகப்பட்டுவிட்டது. எந்தவித பூஜையும் செய்யாமல், புனரமைப்பு பணிகளை செந்தில்குமார் துவங்கி வைத்துவிட்டு போனார்.. இந்த சம்பவம்தான், பொதுமக்களிடமும், அரசு தரப்பிலும் காட்டுத்தீ போல் பரவியது... அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது...

எவ வேலு
இதனிடையே, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் கவனத்துக்கு செந்தில்குமாரின் நடவடிக்கைகளை துறையின் அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்... இதை கேட்ட எவ வேலு, "முதல்வரின் கவனத்துக்கு இதை கொண்டு செல்கிறேன்" என்று சொல்லி அதிகாரிகளை சமாதானப்படுத்தினாராம்.. அதேபோல, இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் இந்த விவகாரம் சொல்லப்பட்டுள்ளது. அவரும், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, செந்தில்குமாரின் நடவடிக்கைகளை சொல்வதாக சொன்னாராம்.. இப்படி 2 அமைச்சர்களும் முதல்வரிடம் புகார் கூற போவதாக கூறப்படுகிறது.

விமர்சனங்கள்
ஏற்கனவே இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்ற மனநிலை மக்களிடம் இருக்கும் நிலையில் அதில் மேலும் எண்ணெய்யை ஊற்றுவது போலிருக்கிறது செந்தில்குமாரின் செயல்கள் என்ற விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.. திமுக அமைச்சர்கள் அதிலும் சீனியர்கள், எதையாவது உளறி கொட்டி வருவதும், எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இப்போது செந்தில்குமார் மீதான அதிருப்தியும் பெருகி உள்ளது, திமுக அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

பூஜைகள்
ஆனால், மற்றொரு தரப்பில் செந்தில்குமாரின் பேச்சு சரியே என்றும் ஆதரவு கருத்துக்கள் எழுந்துள்ளன.. அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கும்படி செந்தில்குமார் சொன்னதில் என்ன தவறு? மதத்தை வைத்து அரசியல் பண்ணுபவர்களுக்கு, செந்தில்குமார் பேசுவது பிடிக்காது.. செந்தில்குமார் சரியான மக்கள் பிரதிநிதி... இப்படி பூஜை செய்வதற்கு, மக்களின் வரிப்பணம் செலவு செய்ய வேண்டுமா? மதச்சாற்பற்ற இந்த நாட்டில் இப்படி தைரியமாக நியாயத்தை பேசக்கூடியவர்களை மிகவும் குறைவு?

நியாயமான பேச்சு
அப்படியே பூஜை செய்தாலும் என்ன பயன்? ஒன்று எல்லாருடைய மதத்தையும் வைத்து பூஜை செய்ய வேண்டும், இல்லாவிட்டால் எந்த மத பூஜையும் தேவையில்லை... அரசாங்கம் பொதுவானதாக இருக்க வேண்டும். அப்போது தான் பிரிவினை இருக்காது.. அந்த வகையில் செந்தில்குமார் நியாயமாகவே சொல்லி உள்ளார்" என்கிறார்கள்.. இப்படி 2 தரப்பிலும், விவாதங்கள் கிளம்பி உள்ள நிலையில், திமுக மேலிடம் இது தொடர்பாக என்ன செய்ய போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளன.












Click it and Unblock the Notifications