கொஞ்சம் என்னன்னு கேளுங்க.. முதல்வர் காதுக்கு போன "மெசேஜ்".. அப்படி எதுவும் இல்லை.. மறுக்கும் தலைகள்
சென்னை: ஆளும் திமுக ஆட்சியில் சில அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஆனால் அரசு தரப்பு வட்டாரங்களோ வேறு விதமான சில விஷயங்களை தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் குறித்த விவாதம் கடந்த சில நாட்களாவே நடந்து வந்தது. ஒரு சில வாரங்களுக்கு முன்பே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்பட்டது.
அதன்படியே சமீபத்தில் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். முக்கியமாக பல்வேறு துறைகளை சேர்ந்த 35 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

விவாதம்
இந்த நிலையில்தான் திமுக ஆட்சியில் சமீப நாட்களாக அதிகாரிகள் சிலரின் ராஜ்ஜியம் அதிகமாக இருக்கிறது என்கிற புலம்பல்கள் அறிவாலயத்தில் ஏகத்துக்கும் எதிரொலிக்கிறதாம். திமுக ஆதரவு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பிலும் இந்த பேச்சுக்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, முதலமைச்சரின் செயலாளர்களில் முதலிடத்தில் இருப்பவரான ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராகவே சீனியர் தலைகள் கச்சைக் கட்டுகிறார்களாம்.

ஆலோசனை
இதனை முதல்வர் ஸ்டாலினிடம் கொண்டு செல்வதற்கான வழிகள் இல்லாததால், அமைச்சர் துரைமுருகனிடம் மற்றம் அமைச்சர்களும், அதிகாரிகளும் புலம்பித்தள்ளியுள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ஸ்டாலினை சந்தித்த துரைமுருகனை, தன்னிடம் சொல்லப்பட்ட புலம்பல்களை ஸ்டாலினிடம் விவரித்திருக்கிறார். இப்படி எல்லாம் பேசிக்கிறாங்க தலைவரே.. கொஞ்சம் என்னன்னு கேளுங்க என்று அன்பாக சொல்லி இருக்கிறார்.

முதல்வர் ஆலோசனை
குறிப்பாக, திமுக ஆட்சி எப்போதுமே மக்களுக்கான ஆட்சியாகத்தான் இருக்கும். அதிகாரிகளின் ஆட்சியாக இருக்காது. அதிமுக ஆட்சியில்தான் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கும். அதனால்தான் இப்போது பலரும் கேட்கிறார்கள். என்னிடம் சொல்லப்பட்டதை உங்களிடம் சொல்லிவிட்டேன் என்று தெரிவித்தாராம் துரைமுருகன். இதை முதல்வர் ஸ்டாலினும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அரசு
ஆனால் தலைமை செயலக தரப்பில் விசாரித்தாலோ.. எல்லா ஆட்சியிலும் சில அதிகாரிகள் மீது புகார் வரத்தான் செய்யும். ஆட்சி மீது வேறு புகார் இல்லை என்றால் இப்படி சொல்வார்கள். மற்றபடி.. எங்காவது ஏதாவது அதிகாரி தவறு செய்துள்ளார்களா? அரசில் நிர்வாகம் சரியில்லை என்று புகார் வந்துள்ளதா? எல்லா துறையும் நன்றாகத்தானே செயல்படுகிறது என்று அரசு தரப்பு சோர்ஸ்களும் மார் தட்டி கொள்கின்றன.
Recommended Video

ப்ரீடம்
அதோடு.. அதிகாரிகளை கட்டி போட்டால் அவர்கள் எப்படி வேலை செய்வார்கள். திறமையான அதிகாரிகளுக்கு ப்ரீ ஹேண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான். யாரும் அதிகார துஷ்பிரயோகம் செய்யவில்லை. செய்தாலும் முதல்வர் விட மாட்டார் என்கிறார்கள் தலைமை செயலக அதிகாரிகள். ஒரு சில அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக சொல்வதெல்லாம் உண்மையில்லை.. எல்லாம் முதல்வரின் கண்காணிப்பில்தான் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!












Click it and Unblock the Notifications