2 பேரின் காதில் கிசுகிசுத்த வைத்தி.. “ஓபிஎஸ், ஸ்டாலின் ரகசிய மீட்டிங் நடந்ததா?” அப்படியே கேட்டுச்சே!
சென்னை : ஸ்டாலினும், ஓபிஎஸ்ஸும் அரை மணி நேரம் ரகசியமாக சந்தித்துப் பேசினர் என எடப்பாடி பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், அதற்கு ஓபிஎஸ் தரப்பினர் பதிலடி கொடுத்துள்ளனர்.
ஓபிஎஸ்ஸை பீ டீமாக வைத்து அதிமுக வீழ்த்த முதல்வர் ஸ்டாலின் முயற்சிப்பதாக ஆவேசமாக குற்றம்சாட்டினார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
சட்டசபை இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு, ஈபிஎஸ் கோரிக்கையை ஏற்காத நிலையில், அதனை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின்போது இதனை தெரிவித்தார் ஈபிஎஸ்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை தான் திமுக அரசு பாதுகாப்பதாக குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது ஓபிஎஸ் டீம். ஓபிஎஸ் வீட்டில் நேற்று இரவு நடந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

சட்டசபை சம்பவம்
சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம் எல் ஏக்கள் கையெழுத்திட்டு சபாநாயகருக்கு கடிதம் வழங்கினர். ஆனால், சபாநாயகரோ எதிர்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அதிகாரப்பூர்வ பதவி. சட்டமன்றத்தில் ஒருவருடைய இருக்கையை மாற்றுங்கள் என சபாநாயகரை யாரும் வற்புறுத்த முடியாது எனத் தெரிவித்து ஈபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தார். ஓபிஎஸ்ஸின் இருக்கையை மாற்றவில்லை.

30 நிமிடங்கள்.. ரகசிய சந்திப்பு
சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளைக் கண்டித்து நேற்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ், "ஓபிஎஸ்ஸை பி டீமாக வைத்து அதிமுகவை கட்டுப்படுத்த முக.ஸ்டாலின் முயற்சிக்கிறார். சட்டப்பேரவை முடிந்த பின்னர் ஸ்டாலினும், ஓபிஎஸ்ஸும் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினர். இந்த முயற்சிகள் எல்லாம் பச்சையாக தெரிகிறது. அரசியல் ரீதியாக ஒரு சபாநாயகர் செயல்படுவது இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது." என கடுமையாக விமர்சித்தார்.

ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை
இந்நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம்,மானோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர், அய்யப்பன் உள்ளிட்டோர் நேற்று (அக்டோபர் 19) இரவு ஆலோசனை நடத்தினர். அப்போது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பற்றியும், சட்டமன்ற விவகாரம் தொடர்பாகவும், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக்குப் பின்னர் வைத்திலிங்கம்,மானோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர், அய்யப்பன் ஆகிய நால்வரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ஓபிஎஸ் சொன்ன விஷயம்
அப்போது பேசிய ஜேசிடி பிரபாகர், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், ஓ.பன்னீர்செல்வம் அளித்த வாக்குமூலங்கள் முழுமையாக வெளியாகவில்லை எனக் கூறினார். மேலும், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வோம் என அப்போதைய அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் ஓபிஎஸ் தெரிவித்ததாகவும், அப்பல்லோ தலைவரே ஓபிஎஸ்ஸை அழைத்து அதற்கு அவசியமில்லை எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.

காதில் கிசுகிசுத்த வைத்திலிங்கம்
செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்துவிட்டது என ஜேசிடி பிரபாகரும், மனோஜ் பாண்டியனும் எழுந்த நிலையில், அவர்களை அருகே அழைத்து காதுக்குள் ஒரு விஷயத்தைச் சொன்னார் வைத்திலிங்கம். "கோடநாடு பற்றி பேசாம போறீங்க.." என அவர் மெதுவாக கிசுகிசுக்க, அதுபற்றி செய்தியாளர்கள் கேட்கவில்லையே எதுவும் என ஜேசிடி பிரபாகர் பதில் அளித்தார். பிறகு கோடநாடு, திமுக மேட்டர் பற்றி பேசுங்க என மனோஜ் பாண்டியனிடம் அழுத்திக் கூறினார் வைத்திலிங்கம்.

திமுக அரசு யாருக்கு பாதுகாப்பு?
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் பாண்டியன், "அதிமுகவை உடைப்பதற்காக ஓபிஎஸ் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார் என்பது முற்றிலும் பொய். காரணம், திமுகவோடு யார் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். டெண்டர் வழக்கு விசாரணை வரவில்லை என்றால் அதற்குக் காரணம் என்ன? கோடநாடு சம்பவம் குறித்து எந்த ஒரு விசாரணையும் வெளியிடப்படவில்லை. தூத்துக்குடி விசாரணை அறிக்கையின்படி நடத்தப்படும் விசாரணையின் பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? திமுக அரசு யாருக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்." எனத் தெரிவித்தார்.

எடப்பாடிக்கு சவால்
தொடர்ந்து பேசிய வைத்திலிங்கம், "ஓபிஎஸ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அரை மணிநேரம் பேசினார் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். நீங்கள் அந்த குற்றச்சாட்டை நிரூபிக்க தயாரா? அப்படி நிரூபித்தால் நாங்கள் அதிமுக கட்சியில் இருந்து விலகுகிறோம். அப்படி நிரூபிக்க தவறினால் நீங்கள் அரசியலை விட்டு விலக தயாரா எடப்பாடியாரே? இதை நாங்கள் பகிரங்கமாக கேட்கிறோம்.

தேவையற்ற போராட்டம்
இன்று காலை நடந்த அதிமுக போராட்டம் என்பது தேவையற்றது. மக்கள் நலனுக்காக எத்தனையோ திட்டங்களைக் கொண்டு வந்தார் ஜெயலலிதா. தாலிக்கு தங்கம், விலையில்லா லேப்டாப் போன்ற திட்டங்களை செயல்படுத்தக் கோரி போராட்டம் நடத்துவதை தவிர்த்து தேவையற்ற போராட்டங்களையும் தேவையற்ற வெளிநடப்பை செய்கிறவர்கள் இந்த கட்சிக்கும் இந்த மக்களுக்கும் தேவையான ஒன்றை செய்யவில்லை" என விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications