இந்த ஆட்சி எப்போ வேணா கவிழலாம்.. ரெடியா இருங்க! திமுக மா.செ கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
சென்னை: இந்த ஆட்சி எப்போ வேணா கவிழலாம். ரெடியா இருங்க.. 2029 நாடாளுமன்ற தேர்தல் வரும் போது சட்டமன்றத்திற்கு தேர்தல் வர வாய்ப்பு இருக்கு.. திட்டமிடுவோம்.. தீவிரமாக உழைப்போம் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் கூறிய மு.க ஸ்டாலின், இதுவரை டீக்கடையில் பேசிய அரசியலை சமூக வலைத்தளங்களில் பேச வேண்டும் எனவும் தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றது.108 இடங்களில் வென்றது. இதில் திருச்சி கிழக்கில் விஜய் ராஜினாமா செய்துள்ளார். இதனால், 107 இடங்களில் வென்றுள்ள தவெக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் இணைந்து ஆட்சியை அமைத்த்துள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை தவெக நிரூபித்தது.

எந்த நேரத்திலும் ஆட்சி கவிழலாம்
திமுக 59 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம் என்று பேசியுள்ளார். மு.க ஸ்டாலின் பேசியதாவது:-
"ஒரு தேர்தலில் தோற்றாலும் மறு தேர்தலில் வென்று காட்டியிருக்கிறோம். நம்பிக்கையோடு பணியாற்றுங்க.. இந்த தேர்தலை நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம்.. நாம பல வெற்றிகளுக்கு சொந்தக்காரங்க.. வெற்றியை நோக்கி பயணிப்போம்' இந்த ஆட்சி எப்போ வேணா கவிழலாம். ரெடியா இருங்க.. 2029 நாடாளுமன்ற தேர்தல் வரும் போது சட்டமன்றத்திற்கு தேர்தல் வர வாய்ப்பு இருக்கு.. திட்டமிடுவோம்.. தீவிரமாக உழைப்போம்" என்று பேசியுள்ளார்.
எந்திரிக்கவே முடியாத தோல்வி அல்ல
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க திமுக கூட்டணி கட்சிகளே ஆதரவு அளித்து இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்து கூறி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தேர்தல் முடிவுகளில் தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காமல் இருந்த நிலையில், ஸ்டாலின் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் திமுக எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என்றும் ஆறு மாதங்களுக்க் தவெக ஆட்சியை கவனிப்போம் எனக் கூறியிருந்தார்.
வியாழக்கிழமை நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் மேலும் கூறியதாவது:- இந்த தேர்தலில் நடந்து இருப்பது புது விதமான கவர்ச்சி. மாயாஜால சுனாமி. தமிழ்நாட்டு மக்களை இதில் இருந்து, எப்படி மீட்டெடுக்க போகிறோம்.. அதை பற்றி யோசிங்க.. இது ஒரு தேர்தல் சுழல் தானே தவிர நாமெல்லம் எந்திரிக்கவே முடியாத தோல்வி அல்ல.
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சிக்கு மெஜாரிட்டி இல்லை என்றாலும் நம்ம கூட்டணி கட்சிகளை வைத்தும் அதிமுகவை உடைத்தும் பெரும்பான்மையை நிரூபிச்சிட்டாங்க. தோல்வியை நினைச்சு யாரும் வருத்தப்பட வேண்டாம். இந்த தோல்வி தற்காலிகம்தான். மீண்டும் வருவோம்.. வெற்றி பெறுவோம்' என்றார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிய விஜய்
சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காததால், ஆளுநர் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவகெ 106 (சபாநாயகர் தவிர), காங்கிரஸ் 05, கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2, விசிக 2 மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 என மொத்தம் 119 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்தது.
அதிமுகவில் சிவி சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் 25 பேர் ஆதரவாக வாக்களித்ததனர். இதனால் தவெகவின் பலம் 144 ஆக உயர்ந்தது. எதிர்ப்பு வாக்குகள் 22 ம், நடுநிலை 5 வாக்குகளும் கிடைத்தன. பெரும்பான்மைக்கு 118 தேவை என்ற நிலையில் தவெக அரசுக்கு கூடுதல் பெரும்பான்மை கிடைத்துள்ளது.














Click it and Unblock the Notifications