13 கோடிப்பே.. வெறும் நாலு மாசம் தான்.. சென்னை 'குடி'மகன்கள்.. போலீஸ் இப்ப சொன்னதுதான் ஹைலைட்
சென்னை: சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சென்னையில் குடி போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து கடந்த 4 மாதங்களில் மட்டும் ரூ.13 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதால் குடிமகன்கள் சிக்கினால் அவ்வளவுதான்.
சென்னையில் குடிமகன்கள் நள்ளிரவில் குடித்துவிட்டு சாலையை கடப்பது மிக கடினமாகும். போக்குவரத்து போலீசார் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக சோதனை செய்வார்கள். கார்களில், இருசக்கர வாகனங்களில் செல்வோரை தீவிரமாக கண்காணிப்பார்கள்.

குறிப்பாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் குடிமகன்களை தீவிரமாக போலீசார் சோதிக்கிறார்கள். அப்படி மாட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னையில் குடி போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து கடந்த 4 மாதங்களில் மட்டும் ரூ.13 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: " சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும்.
எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது. அபராதத் தொகை ரூ.10,000/ அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை, ஆனால் நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்புகள் வந்தாலும் அபராதம் செலுத்துவதில்லை.

மேலும், 9,526 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே இது போன்ற விதி மீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் (Call centers) மூலம் தகவல் தெரிவித்து, கடந்த 20.05.2023 அன்று அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் 586 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக ரூ.60,36,000 விதி மீறுபவர்களால் செலுத்தப்பட்டன. கடந்த நான்கு மாதங்களில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 12,551 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.12,99,08,600 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.
மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்ய நீதிமன்றங்களில் ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. ஏற்கனவே இது போன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு 371 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications