23 + 5.. ராசா.. உதயநிதி.. கனிமொழி.. சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.. அடேங்கப்பா இது "மெகா" பார்முலா!
சென்னை: திமுகவில் உட்கட்சி ரீதியான நிர்வாகத்தில் முக்கியமான மாற்றம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்து இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுகவில் உட்கட்சி தேர்தல் முடிந்த நிலையில் எல்லா பிரிவுகளுக்கும் செயலாளர்கள், துணை செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதேபோல் மாவட்ட செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் நியமனங்களும் சுமுகமாக முடிந்துள்ளன.
சமீபத்தில் திமுகவில் மாவட்ட செயலாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் லோக்சபா தேர்தல், பூத் வாரியாக திமுகவை வலுப்படுத்துவது, தேர்தல் பணிகளை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.

ஆலோசனை
திமுகவில் துணை அமைப்புகளாக இளைஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, மருத்துவர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி உள்பட 23 அணிகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் திமுக சமீபத்தில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இளைஞரணியில் மட்டும் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட அளவிலான நிர்வாகிகளை நியமனம் செய்ய உள்ளார். இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட அளவில் வாங்கி உள்ளார். உதயநிதி ஸ்டாலின் நேரடியாக இதற்காக நேர்முக தேர்வுகளை நடத்த உள்ளார். விரைவில் இந்த பணிகள் நடக்கும். அதன்பின் அங்கும் நிர்வாகிகள் நியமனம் நடக்கும்.

நியமனம்
இந்த 23 அணிகளையும் நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் கண்காணிக்கவும், அந்த அணிகளிலுள்ள பிரச்சனைகளை கவனிக்கவும் கட்சியில் உள்ள 5 துணைப் பொதுச்செயலாளர்களையும் பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறார் ஸ்டாலின். அந்த 5 பேருக்கும் 23 அணிகளும் பிரித்து தரப்பட்டுள்ளது. அந்த வகையில், அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் விவசாய அணி, தொழில்நுட்ப அணி உள்பட 5 அணிகள் தரப்பட்டு உள்ளன. அமைச்சர் பொன்முடியிடம் பொறியாளர் அணி, வர்த்தகர் அணி உள்பட 4 அணிகள் தரப்பட்டு உள்ளன.

அணிகள் பிரிப்பு
முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவிடம் இளைஞர் அணி, மாணவர் அணி, சட்டத்துறை அணி உள்ளிட்ட 5 அணிகள் தரப்பட்டு உள்ளன. உதயநிதி இருக்கும் இளைஞர் அணியை ராசா கண்காணிப்பார். முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜிடம் தொண்டரணி, மீனவர் அணி உள்ளிட்ட 4 அணிகள் தரப்பட்டு உள்ளன. கனிமொழி எம்.பி.யிடம் மகளிர் அணி, இலக்கிய அணி உள்ளிட்ட 5 அணிகளும் என பிரித்து, அதற்கான அறிவிப்பை சமீபத்தில் அறிவித்தார் துரைமுருகன். இனி, இந்த அணிகள் தொடர்பான பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதனை அந்த அணிகளை கவனிக்கும் துணைப்பொதுச் செயலாளர் தான் கவனிப்பார்.

ஸ்டாலின்
அவர்கள் அதனை சரிசெய்வார்கள். சரி செய்தபிறகு முடிவினை ஸ்டாலினிடம் தெரிவிப்பர். துணைப் பொதுச்செயலாளர்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் மட்டுமே தலைவர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுமாம். தமிழக அரசின் ஆட்சி நிர்வாகத்தில் எப்படி துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறதோ அதேபோல கட்சி நிர்வாகத்திலும் கொண்டு வந்துள்ளார் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள் திமுகவினர். அதாவது, தமிழக அரசில் 30-க்கும் மேற்பட்ட முக்கிய துறைகள் இருக்கின்றன. முதல்வர் ஸ்டாலினுக்கு உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் என 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செக்ரட்டரிகளாக இருக்கின்றனர்.

அரசின் துறைகள்
அரசின் முக்கிய துறைகள் குறித்த அனைத்து செயல்பாடுகளையும் நேரடியாக கவனிக்க முதல்வரால் முடியாது. அதனால், அவரது செயலாளர்களுக்கு அரசின் துறைகள் பிரித்து தரப்படும். அந்தந்த துறைகளின் செயல்பாடுகளை அதற்கு பொறுப்பான தனது செயலாளரிடம் விவாதிப்பார் முதல்வர் ஸ்டாலின். தேவையான நடவடிக்கை எடுக்கவும் அவர்களிடம் தான் வலியுறுத்துவார். அப்படி அரசு நிர்வாகத்தில் இருக்கும் நடைமுறையைத்தான் தற்போது திமுகவிலும் புகுத்தியுள்ளார் தலைவர் ஸ்டாலின் என்று விவரிக்கிறார்கள் திமுகவினர். கட்சியில் ஒழுங்கு, சரியான நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications