"இவரால்" திமுகவுக்கு சிக்கலா? குறைகிறதா பவர்? அதிமுகவில் நாளை என்னதான் பேச போறாங்க?
சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் நாளைய தினம் நடக்க உள்ள நிலையில், இதுகுறித்த பல்வேறு யூகங்களும், கணிப்புகளும் இணையத்தில் வட்டமடித்து கொண்டேயிருக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.. ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே, அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாகவும், வருகிற 16ம் தேதி அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைய விஷயங்களை, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசுவதற்காக நிர்வாகிகள் தயாராக இருந்தார்களாம்.. ஆனால், திடீரென கூட்டம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுவிட்டதால், அதிருப்திக்கு ஆளாகிவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நாளை ஆகஸ்ட் 16ம் தேதி, அவசர செயற்குழு ஏன் கூட்டப்படுகிறது? என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்பது குறித்த எதிர்பார்ப்புகளும், ஆர்வமும் எழுந்தபடியே உள்ளன. நாளைய தினம் சில முக்கியமான விஷயங்கள் ஆலோசிக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.
1. பிரிந்து சென்றவர்கள்:
தேர்தல்களில் அடுத்தடுத்த தோல்வியை அதிமுக சந்தித்து வருவதால், கடந்த மாதம் முழுவதுமே நிர்வாகிகளிடம் மாவட்டந்தோறும் ஆலோசனை மேற்கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி.
அப்போது, சசிகலா + தினகரன் + ஓபிஎஸ் என பிரிந்து சென்றவர்களையெல்லாம் மீண்டும் ஒன்றிணைத்தால் மட்டுமே முக்குலத்தோர் வாக்குகளை பெற முடியும், திமுக கூட்டணிக்கு நெருக்கடி தர முடியும் என்று எடப்பாடியிடம் பெரும்பாலானோர் சொன்னார்களாம்.. அதிமுகவை ஒன்றிணைக்க, மூத்த தலைவர்கள் பலர் முயற்சியில் இறங்கிவருவதாகவும் தெரிகிறது. ஆனால், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எந்த ஆதரவான முடிவையும் சொல்லவில்லை.
நாளைய தினம் நடக்க போகும் கூட்டத்தில் இது தொடர்பாக நிச்சயம் பேசப்படும் என்றால், எடப்பாடி சம்மதம் சொல்வாரா? என்பது சந்தேகம்தானாம்.
2. ஓபிஎஸ் வியூகம்
கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்கும் எண்ணம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துவிட்டாலும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தன்னுடைய முயற்சியை கைவிடவில்லை. தன்னுடைய தரப்பிலிருந்து அதிமுகவிலிருக்கும் மாஜி அமைச்சர்கள் ஓஎஸ் மணியன், காமராஜ், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு போன்றவர்களிடம், நாளைய தினம் அவசர செயற்குழு கூட்டத்தில் கட்சி ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்து பேசுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.
ஓபிஎஸ் தரப்பிலிருந்து தனிப்பட்ட முறையில், நமது நிர்வாகிகள் யாராவது பேசினால் பொருட்படுத்த வேண்டாம் என்று ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவிட்டுள்ளாராம். எனவே, நாளைய தினம் ஓபிஎஸ் வியூகம் எடுபடுமா? என தெரியவில்லை.
3. பலவீனமாகும் திமுக கூட்டணி?
கடந்த முறை தேர்தல்களிலேயே, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள் இணைக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டது.. ஆனால், அது முடியாமல் போனது.. இத்தனைக்கும் பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டும்கூட, அதிமுக கூட்டணியில் யாருமே இணையவில்லை.. இதனால், பலமான திமுக கூட்டணியையும் அதிமுகவால் உடைக்க முடியவில்லை.
ஆனால், வரப்போகும் தேர்தலில் திமுக கூட்டணியில் நிறைய நெருக்கடிகள், சிக்கல்கள் ஏற்படலாம் என்று அதிமுக மேலிடம் கருதுகிறதாம். காரணம், மாநில கட்சியாக விசிக அங்கீகாரம் பெற்றுவிட்டதால், நிறைய சீட்களை திமுகவிடம் கேட்க நேரிடும். ஆனால், இதற்கு திமுக நிச்சயம் சம்மதிக்காது..
அதேபோல, தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாததால், அரசு ஊழியர் சங்கங்களும், திமுக மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே, கம்யூனிஸ்ட்கள் வரும்தேர்தலில திமுகவுடன் கூட்டணி வைப்பார்களா? என்பதும் சந்தேகம்தானாம். இந்த அதிருப்திகளை அறுவடை செய்ய அதிமுக இப்போதே கணக்கு போடுகிறதாம்.
திமுக அரசுக்கு எதிராக நாளைய தினம், ஏராளமான கண்டன தீர்மானங்கள் இயற்றப்படலாம்.. இவை எல்லாம் வெறும் அஜென்டாவாக கூட இருக்கலாம்.. ஆனால், வலுவான கூட்டணியை அதிமுக இப்போதே அமைக்க தயாராகி வருதால், திமுக பற்றின பேச்சும் நாளைய தினம் கட்டாயம் எழும் என்றே தெரிகிறது.
4. அதிகாரப் பகிர்வு
"தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர்கள்" என மா.செக்கள் எண்ணிக்கையை கூட்டுவது பற்றி எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ஆசையை நாளைய தினம் வெளிப்படுத்துவார் என தெரிகிறது. ஆனால், இதற்கு சீனியர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், சிவி சண்முகம், செங்கோட்டையன் உள்ளிட்டோர் ஆரம்பத்திலிருந்தே தயக்கம் காட்டி வருகிறார்கள்.. காரணம் தங்களது அதிகாரம் இரண்டாக பிரிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கிறார்களாம். எனினும், சீனியர்களை சமாளித்து, மா.செ. எண்ணிக்கையை எடப்பாடி கூட்டுவாரா? என்ற ஆர்வமும் எகிறி வருகிறது.
5. விதிமுறை அவசியம்
வழக்கமாக, வருஷத்துக்கு 2 முறை செயற்குழுவை கூட்ட வேண்டும் என்பது அதிமுகவின் விதிமுறையாகும்.. இதன்காரணமாகவே, இந்த கூட்டத்தை நாளைய கூட்டப்படுவதாக சொல்கிறார்கள்.. செயற்குழு கூட்டம் என்றால் 2 மாதம் முன்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் "அவசர" செயற்குழு என்ற வார்த்தையை சேர்க்க காரணம், உடனே நடத்திவிட முடியும் என்பதுதான். மற்றபடி இந்த கூட்டத்திற்கு எந்த அவசரமும் கிடையாது என்றும் மாறுபட்ட தகவல்கள் வருகின்றன.
என்னதான் கிளைமேக்ஸ்:
"அதிமுக உடைந்து கிடக்கிறது என்ற பிம்பத்தை பொதுமக்களிடமிருந்து மாற்றாமல், எவ்வளவு நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி எடுத்தாலும் அது பலனை பெற்று தராது" என்று ஓபிஎஸ் தரப்பு உள்ளிட்ட அதிமுக நலம்விரும்பிகள் விடாமல் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், நாளைய தினம் அதிமுக அவசர கூட்டத்தில் என்னதான் நடக்க போகிறது? என்னதான் பேசப்போகிறார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications