நீலகிரியை "தூக்க" போவது இவரா? அதைவிடுங்க.. கமலாலயமே கம்முனு இருக்காமே.. இதுதான் காரணமா? ஒரே நிசப்தம்
சென்னை: தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், தமிழக பாஜக என்ன செய்ய போகிறது? யாருடன் கூட்டணி வைக்க போகிறது? என்பது இதுவரை உறுதியாகவில்லை. அதேசமயம், மற்ற தொகுதிகளைவிட, நீலகிரி தொகுதியில் மட்டும் தமிழக கட்சிகளின் கவனம் கூடுதலாக குவிந்து வருகிறது. என்ன காரணம்?
கொங்குவில் ஒரு கால், தென்மண்டலத்தில் இன்னொரு கால், என ஒரே நேரத்தில் காலூன்ற காய் நகர்த்தி வருகிறது தமிழக பாஜக.. ஆனால், கூட்டணி மட்டும் இன்னும் முடிவாகவில்லை.. மேலிட தலைவர்கள், 5 மாநில தேர்தல் பிஸியில் இருப்பதால், அநேகமாக டிசம்பர் மாதம்தான், தமிழகம் பக்கம் கவனத்தை திருப்புவார்கள் என்று தெரிகிறது.

சலசலப்புகள்: ஆனால், அதற்குள் தமிழக பாஜகவில் ஏகப்பட்ட சலசலப்புகள் நிலவி கொண்டிருக்கின்றன.. அமர்பிரசாத் கைது நடவடிக்கைக்கு பிறகு, சற்று அடக்கி வாசிக்கிறதாம் தமிழக பாஜக.. முன்புபோல திமுகவுக்கு எதிரான போராட்டங்கள் எதுவும் தீவிரப்படுத்தப்படவில்லை.. கொடிக்கம்பம் விவகாரத்தில், சீனியர்கள் யாரும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் சில நாட்களுக்கு முன்பு கசிந்தன..
அதேபோல, திமுகவை அதிக அளவு டேமேஜ் செய்யாமல், மாநில தலைவர் அண்ணாமலையும், தன்னுடைய நடைபயணத்தில் அமைதியாக ஈடுபட்டு வருகிறார். குஷ்பு "சேரி" பேச்சும் சலசலப்பை தந்து வருகிறது.. கூட்டணி விஷயமும் இழுபறியில் உள்ளது.
அதைவிட முக்கியமாக, அதிமுகவை எதிர்ப்பதா? வேண்டாமா? என்ற குழப்பமும் பாஜக நிர்வாகிகளிடம் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.
இதனால், கட்சியே தற்போது ஒருவித நிசப்தத்தில் இருப்பதுபோல தெரிகிறதாம்.. எனினும், இந்த திடீர் அமைதிக்கு நடுவிலும், பாஜகவின் களப்பணிகள் மும்முரமாகி இருக்கின்றன.. தொகுதிகளில், பாஜக நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்து வருகிறார்கள்.
பாஜக கவனம்: இதில், நீலகிரியை பொறுத்தவரை, சற்று அதிக கவனத்தை பாஜக செலுத்தி வருகிறது.. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே செல்வாக்கு பெற்ற தொகுதிதான் நீலகிரி.. இந்த ஜாம்பவான் கட்சிகளுக்கு இடையே நுழைந்து, தனக்கென ஒரு வாக்கு வங்கியை பாஜக பெற்றிருப்பதை மறுக்க முடியாது... அதிமுகவுடன் கூட்டணியிலிருந்தபோதே, தமிழகத்தில், 10 எம்பி தொகுதிகளை தேர்வு செய்து, களமிறங்க முடிவு செய்திருந்தது தமிழக பாஜக.. இதில், நீலகிரியும் ஒன்று.
ஆனால், கூட்டணியில் இருந்து பாஜக கழட்டிவிடப்பட்ட நிலையில், தேர்தல் வியூகம் இப்போது தலைகீழாக மாற துவங்கியிருக்கிறது. மத்திய இணையமைச்சர் முருகன் இந்த முறை நீலகிரியில் களமிறக்கப்படுகிறார். இதற்கான வேலைகளை, கடந்த ஒரு வருடமாகவே முருகன் கவனித்து வருகிறார்.. நீலகிரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் எல்.முருகன் அடிக்கடி பங்கெடுத்து வருவது அதை உறுதிப்படுத்தும்விதமாகவே அமைந்தும் வருகிறது.
நீலகிரி தொகுதி: அதுமட்டுமல்ல, பாஜக இந்த அளவுக்கு நீலகிரியை விடாமல் பிடித்து கொண்டிருக்க காரணம், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஊட்டி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் போஜராஜன் சுமார் 5,300 ஓட்டு வித்தியாசத்தில்தான், காங்கிரஸ் வேட்பாளர் கணேஷிடம் தோற்றுப்போனார். அதனால், மலைவாழ் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு இருப்பதாக அளவுக்கு அதிகமாகவே நம்புகிறாராம் எல்.முருகன்.
இன்னொரு காரணமும் சொல்கிறார்கள்.. எல்.முருகன். நீலகிரி தொகுதியின் சிட்டிங் எம்பி-யான ஆ.ராசாவின், இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்துக்களால், நீலகிரி தொகுதி முழுவதும் பாஜக போராட்டங்களை முன்னெடுத்தன. இந்து அமைப்புகள் திட்டமிட்டு நடத்திய இந்தப் போராட்டத்திற்கு நீலகிரியில் பெரும்பாலான இடங்களில் பொதுமக்களின் ஆதரவு ஓரளவு கிடைக்கவே செய்தது.. இதுவும் எல்.முருகனுக்கு புது தெம்பை ஏற்படுத்தவும்தான்., நீலகிரி மலைக்கே, வலையை விரித்துள்ளார் முருகன் என்கிறார்கள்..
ஆ ராசா போட்டி: இதில், திமுகவை பொறுத்தவரை, கடந்த, 2019-ல் திமுக கூட்டணியில் அருந்ததியர் சமூக வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் அதிக அளவு எண்ணிக்கையில் அருந்ததியர் சமூகத்தினர் போட்டியிட வாய்ப்புள்ள ஒரே தொகுதி நீலகிரி மட்டும்தான்.. அதனால்தான், ஆ.ராசா தொடர்ந்து இங்கு போட்டியிட்டு வருகிறார்.. எனினும், 7 தனி தொகுதிகளில் ஒன்றில் கூட, அருந்ததியர் வேட்பாளரை நிறுத்தாத நிலையில், இந்த விஷயத்தில்தான் திமுக கவனம் செலுத்த துவங்கி உள்ளது.
எல்.முருகன் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு போட்டியாக அருந்ததியர் சமூக வேட்பாளரை நிறுத்த திமுக யோசித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.. இதுகுறித்தும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரியவில்லை.
எடப்பாடி பழனிசாமி: அதேபோல, அதிமுக பெருத்த குழப்பத்தில் உள்ளதாம்.. இந்த முறை சற்று கூடுதலாகவே நீலகிரியை குறி வைத்திருக்கிறதாம்.. தொகுதியை கைப்பற்றி வேண்டும் என்ற முனைப்பிலும் ஈடுபட்டு வருவதால், அதற்கான வேட்பாளர்களை தேடி வருவதாக தகவல்கள் கிடைக்கின்றன.
அதிமுகவை பொறுத்தவரை, நீலகிரி மாவட்டத்தில் இருந்து தான் பெரும்பாலும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை போட்டி சற்று கடுமையாக இருக்கும் என்கிறார்கள்.
அதிமுக குழப்பம்: காரணம், நீலகிரி தொகுதியில் குன்னுார், கூடலூர் தொகுதியில் திமுக பெருத்த வாக்கு சதவீதத்தை வைத்திருக்கிறது. ஊட்டி தொகுதியில் பாஜகவின் ஓட்டுக்களே பிரதானமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். எனினும், அவிநாசி, மேட்டுப்பாளையத்தில் அதிமுக அதிமுக ஓட்டுக்களை தக்க வைத்துள்ளதால், இந்த பகுதி ஓட்டுக்கள் கைகொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
எனினும், ஆ.ராசா, மற்றும் எல்.முருகனுக்கு நிகராக, வலுவான வேட்பாளரை களமிறக்க வேண்டும் வேண்டும் என்ற நெருக்கடி அதிமுக மேலிடத்துக்கு ஏற்பட்டுள்ளதாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications