அங்கே என்ன நடக்குது? வேலையை காட்டுதா பாஜக? பாமகவுக்கு இதெல்லாம் தேவையா? குமுறும் குரல்.. குஷி திமுக
சென்னை: தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன.. குறிப்பாக பாஜக கூட்டணியில் எந்த அளவுக்கு பிரச்சாரங்கள் அனலை கிளப்பிவிட்டு வருகிறதோ, அதே அளவுக்கு சலசலப்பையும் கிளப்பி விட்டு வருகிறது. என்ன காரணம்?
தனித்து கூட்டணி வைத்து போட்டியிடுவது என்று இந்த முறை சற்று அதிகமாகவே ரிஸ்க் எடுத்துள்ளது தமிழக பாஜக.. தேர்தல் என்றாலே, சாதி ஓட்டுக்களே பிரதானம் என்பதை அறிந்து வைத்திருப்பதால், பாஜகவின் கூட்டணியும், சாதியை மையப்படுத்தி இருப்பதாகவே கூறப்படுகிறது.

முக்குலத்தோர்: வன்னியர் வாக்குகளுக்கு பாமக, தேவேந்திர குல வேளாளர் வாக்குகளுக்கு தமமுக, முதலியார் வாக்குகளுக்கு புதிய நீதிக்கட்சி, யாதவர் வாக்குகளுக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், முக்குலதோர் வாக்குகளுக்கு டிடிவி தினகரன், ஓபிஎஸ், உடையார் வாக்குகளுக்கு இந்திய ஜனநாயக கட்சி என நாலாபக்கமும் கணக்கு போட்டே, கூட்டணி வலையை விரித்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கணிக்கிறார்கள்.
சுருக்கமாக சொல்லப்போனால், மூத்த தலைவர் ஜிகே வாசன் தவிர மற்ற அத்தனை கட்சிகளும் ஜாதிக்கட்சிகளாகவே கூட்டணியில் இடம்பெற்றிருப்பது பலரையும் கவனிக்க செய்து வருகிறது..
சாதி ஓட்டுக்கள்: அதுமட்டுமல்ல, பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததை அந்தந்த கட்சிகளிலுள்ள நிர்வாகிகள் பலரே விரும்பவில்லை என்றும் தகவல்கள் வலம்வருகின்றன. அதற்கேற்றவாறு தொகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளும், இந்த தகவல்கள் உண்மைதானோ? என்று நினைக்கும் அளவுக்கு பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கின்றன.
உதாரணமாக, விருதுநகரை எடுத்துக் கொண்டால், ராதிகாவை பாஜக வேட்பாளராக அறிவித்ததே, பாஜகவிலேயே பலருக்கு உடன்பாடில்லையாம்.. இதே விருதுநகரில், இதே பாஜகவில், இதே ராதிகாவை எதிர்த்து பாஜகவை சேர்ந்த வேதா என்பவர் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்திருந்ததே இதற்கு சாட்சியாகும்.
ராதிகா சரத்குமார்: வேட்பு மனுவுடன் எப்போது வேதா களத்தில் இறங்கினாரோ, அப்போதே பாஜக கூட்டணியில் பூசல் ஆரம்பமாகிவிட்டதாக சலசலப்புகள் கிளம்பின. போதாக்குறைக்கு, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை எனக்கு மகன் போல என்றெல்லாம் டச்சிங் பிரச்சாரத்தை ராதிகா முன்னெடுத்ததை பாஜகவிலேயே விரும்பவில்லையாம்.
அடுத்தடுத்த நாட்களில் ராதிகாவை ஆதரிக்க பாஜக நிர்வாகிகளும் பிரச்சாரத்துக்கு வராமல் இருந்துள்ளனர்.. இதனால் பிரச்சாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் கூட்டமும் சேராமல், கூட்டணியின் ஒத்துழைப்பும் இல்லாமல், ஒருங்கிணைப்பும் இல்லாமல், நிகழ்ச்சியை கேன்சல் செய்துவிட்டு கடுப்பாகி ராதிகா சென்றுவிட்டதாக, நேற்றைய தினம் மீடியாக்களில் செய்திகள் வெளியாகின.
வினோஜ் செல்வம்: இதோ அதுபோலவே சென்னையிலும் ஒரு சலசலப்பு நடந்துள்ளது.. மத்திய சென்னையில் பாஜக சார்பில் வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார்.. அவர் கூட்டணி கட்சியினரை மதிக்கவில்லை என்றும், பிரச்சாரத்திற்கு யாரையும் முறையாக அழைப்பதில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.
புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், கே.பி.பார்க், மோதிலால் நேரு தெரு போன்ற இடங்களில் வினோஜ் பி.செல்வம் திறந்த ஜீப்பில் வாக்கு வாக்கு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டார்.. வழியெங்கும் பாஜக கொடிதான் இருந்ததாம்.. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அமமுக கொடி இருந்திருக்கிறது.. பாமகவினரின் கட்சிக்கொடி ஒரு இடத்திலும் இல்லையாம்.. பாமகவின் முக்கிய நிர்வாகிகள் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளவில்லையாம்.
பாஜக வேட்பாளர்: இதற்கு காரணம், வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகும்கூட, இதுவரை கூட்டணி கட்சியை சேர்ந்த தங்களை, பாஜக வேட்பாளர் அழைத்து பேசவில்லையாம்.. ஒரு மரியாதைக்குக்கூட வட்ட செயலாளர் யார்? பகுதி செயலாளர் யார்? என்றெல்லாம் கூட தெரிந்துகொள்ள விரும்பவில்லையாம். கடைசி நேரத்தில் பிரச்சாரம் இருப்பதாக, கடமைக்காக தகவல் சொல்கிறார்களாம்..
தேர்தல் பணிமனை திறப்பு, வாக்கு சேகரிப்பு இப்படி எல்லாவற்றிலுமே கூட்டணி கட்சிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக கூட்டணி கட்சியினரை மரியாதை குறைவாக பாஜக நடத்துவதாகவும் பொருமல்கள் கூட்டணியிலிருந்து வெடிக்க துவங்கி உள்ளன.
மாற்று கட்சி: ஏற்கனவே, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததை பாமக கட்சியில் உள்ள தொண்டர்கள் விரும்பவில்லை என்பதால்தான், அக்கட்சியில் இருந்து விலகியவர்கள் மாற்றுக் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.
அதுவும் இல்லாமல், சாதிவாரி கணக்கெடுப்பை அன்று பாமக வலியுறுத்தியபோது, அதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட நிலையில், பாஜக இன்னமும் அமைதி காத்து வருகிறது. இதுவரை பாஜகவின் நிலைப்பாடு என்னவென்றே தெரியவில்லை. அப்படியிருக்கும்போது, தேர்தல் வேலைகளில் முழுமனதுடன் எப்படி வேலை செய்ய முடியும்? என்றெல்லாம் குமுறல்கள் வெடித்துள்ளன.
பரபரப்பு: இப்படிப்பட்ட சூழலில், பாஜவினர் கூட்டணி கட்சியினரை சரியாக மதிப்பதில்லை, உரிய மரியாதை அளிப்பதில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் சோஷியல் மீடியாவில் கிளம்பி வருவது கூடுதல் பரபரப்பை தந்து வருகிறது. இதெல்லாம் உண்மையா? பொய்யா? தெரியவில்லை.












Click it and Unblock the Notifications