சுக்கு சுக்கா போச்சே.. "தரையெல்லாம்" எடப்பாடி பழனிசாமி "முகம்".. பாலையில் சுரந்த தண்ணீர்.. அட பன்னீர்
சென்னை: அடுத்தடுத்த வெற்றிகளை எடப்பாடி பழனிசாமி சந்தித்துவரும் நிலையில், அடுத்தடுத்து துவண்டு போயுள்ள ஓபிஎஸ்ஸுக்கு ஒரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.. பாலைவனத்தில் சுரக்கும் ஊற்றுபோல, இந்த சம்பவம் ஓபிஎஸ் அணியை குளிரவைத்து கொண்டிருக்கிறது.. அத்துடன் பெருத்த நம்பிக்கையையும் ஊட்டிக்கொண்டிருக்கிறது..!!
எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வேகம் எடுத்து வருகிறது.. மாற்று கட்சியில் இருந்து நிர்வாகிகளை தன்பக்கம் இழுத்து வருகிறார்.. அதிலும் அமமுக நிர்வாகிகளுக்கு வலையை விரிக்கவும், அதில் ஏகப்பட்ட பேர் ஒவ்வொருவராக விழுந்து கொண்டிருக்கிறார்கள்.

இதைப்பார்த்து டிடிவி தினகரனே அதிர்ந்து போய், அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால், ஓபிஎஸ் தரப்பில் இருந்து இதுவரை யாரையுமே எடப்பாடி பழனிசாமியால் தன்பக்கம் இழுக்க முடியவில்லை.
அவ்வளவு ஏன்? நாம் தமிழர் கட்சி நிர்வாகியைகூட ஈரோடு கிழக்கில் அசால்ட்டாக தன்பக்கம் வளைக்க முடிந்த எடப்பாடியால், ஓபிஎஸ் தரப்பில் இருந்து கடந்த ஒரு வருட காலமாகவே நிர்வாகிகளை அதிமுகவுக்குள் கொண்டு முடியவில்லை.
அசால்ட் செயல்: மூத்த தலைவர் வைத்திலிங்கம் முதல் தேனி நிர்வாகிகள் வரை தூண்டில் விரிக்கப்பட்டும், ஒருத்தரும் சிக்காமலேயே இருந்தனர்.. காரணம், நீதிமன்ற உத்தரவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு தற்சமயம் சாதகமாக வந்தாலும், ஓபிஎஸ்ஸின் அரசியல் ஒருநாள் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கைதான் காரணமாக இருந்தது.. இந்நிலையில்தான், ஓபிஎஸ் திருச்சியில் மாநாட்டை கூட்டினார்.. இந்த மாநாடு மூலம், தன்னுடைய பலத்தை நிரூபிக்க பெரிய அளவில் முயற்சி செய்தார்.. ஆனால், இந்த மாநாடும் ஓபிஎஸ்ஸுக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றே தெரிகிறது..
அணி தாவல்: இப்படிப்பட்ட சூழலில்தான், எடப்பாடி அணியில் இருந்து சிலர் ஓபிஎஸ் அணிக்கு தாவியுள்ளது, ஆச்சரியத்தை கிளப்பிவிட்டு வருகிறது. சென்னை அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் பகுதியில், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் 200 பேர் அதிமுகவில் இருந்து விலகி ஓபிஎஸ் அணியில் தற்போது இணைந்துள்ளனர்.. அவர்களுக்கு அதிமுக துண்டை அணிவித்து, ஓபிஎஸ் படம் கொண்ட அட்டையை கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். அப்போது அதிமுகவின் உறுப்பினர் படிவத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் போட்டோக்களை அவர்கள் கிழித்தெறிந்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
அந்த பகுதி முழுக்க எடப்பாடி பழனிசாமியின் போட்டோக்கள் கிழிந்த நிலையில் கிடந்தன.. மேலும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஓபிஎஸ் என்று சொல்லி முழக்கங்களையும் எழுப்பினர்.. திருச்சி மாநாட்டுக்குப் பிறகு பலர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக தெரிவித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டின் மூலம் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கை மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநாட்டை பொறுத்தவரை, ஓபிஎஸ் நினைத்ததை சாதித்தாரா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.. காரணம், சில நாட்களுக்கு முன்பு மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், ஒரு டிவி சேனலுக்கு பேட்டி தந்திருந்தார். அந்த பேட்டியில் ஷ்யாம் பேசும்போது, "திருச்சி மாநாட்டில் "நயவஞ்சகர்" என்று எடப்பாடியை ஓபிஎஸ் சொல்கிறாரே தவிர, எந்த வகையில் என்று ஓபிஎஸ் அதை தெளிவுபடுத்தவில்லை.. ஓபிஎஸ் மாநாடு பறைசாற்றுவது எதை? என்பதும் கேள்வியாக உள்ளது..
மாநாடு தீர்மானங்கள்: ஒரு மாநாடு என்றால், அதன் பிரகடனம் ரொம்ப முக்கியம்.. அப்படியானால் இந்த திருச்சி மாநாடு எதை நோக்கி செல்கிறது? எதை நோக்கி செலுத்தப்போகிறது? ஆச்சரியங்களை கிளப்பும் தீர்மானங்கள் ஒன்றுகூட இயற்றப்படவில்லையே? எடப்பாடி பழனிசாமிக்கு இந்த திருச்சி மாநாடு எந்தவிதத்தில் பதிலடியாக இருக்க போகிறது? என்ற கேள்விகளை அந்த பேட்டியில் அடுக்கியிருந்தார் ஷ்யாம்.
அதேசமயம், ஓபிஎஸ் இந்த திருச்சி மாநாட்டை நடத்தியது, அவரது மாபெரும் வெற்றியாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.. காரணம், இந்த மாநாட்டை தடுத்து நிறுத்த, எடப்பாடி பழனிசாமி தரப்பில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன.. அவைகளை முறியடித்து இந்த மாநாட்டை நடத்தினார் ஓபிஎஸ்..
அதுமட்டுமல்ல, போதுமான அளவுக்கு கீழ்மட்டத்தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே, இப்படியான மாநாட்டை கூட்ட முடியும்.. அதுவும் குறுகிய காலகட்டத்தில், திட்டமிட்டபடி மாநாட்டை நடத்தி காட்டியுள்ளார் ஓபிஎஸ்.. அந்தவகையில், இனி அடுத்தடுத்த மாநாடுகளை, பொதுக்கூட்டங்களை கூட்டுவதற்கு அடித்தளமிட்டிருக்கிறது இந்த மாநாடு.
பண்ருட்டியார்: நீதிமன்ற உத்தரவுகள் எப்படி இருந்தாலும், மூத்த தலைவர் பண்ருட்டியார் தொடர்ந்து சொல்லி கொண்டிருப்பதை போல, மக்கள் மன்றமும், தொண்டர்கள் பலமும் எங்களுக்கு இருக்கிறது என்பதைதான் ஓபிஎஸ் மாநாடு நிரூபித்திருப்பதாகவும் தெரிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நேரடியாக மக்களையும் சந்திக்கவும் தொடங்கிவிட்டார் ஓபிஎஸ்.. தஞ்சை உள்ளிட்ட தென்மாவட்ட தொண்டர்களை தமிழகத்தின் மத்திய பகுதியில் வரவழைத்து, தன் பலத்தையும் ஓரளவு நிரூபித்துக்காட்டி உள்ளார்.. இந்த பிளஸ் பாயிண்ட்களைதான் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உள்ளவர்கள் உற்றுநோக்குகிறார்களாம்..
ஒன் மேன் ஆர்மி: இதன்காரணமாகவே, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து, ஓபிஎஸ் பக்கம் மெல்ல வர தொடங்கியிருக்கிறார்கள் என்கிறார்கள்.. "ஒன் மேன் ஆர்மி"யை விரும்பாத பலரும், இனி அடுத்தடுத்து அணிதாவி ஓபிஎஸ் பக்கம் வரக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.. டாப் கியரில் எடப்பாடி பழனிசாமி இப்போது சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென ஓபிஎஸ்ஸுக்கு தெம்பும் நம்பிக்கையும் கிடைத்ததுபோல, இந்த அணி தாவல் இன்று நடந்துள்ளதாக தெரிகிறது.. அடுத்து என்னதான் நடக்க போகிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்!!












Click it and Unblock the Notifications