எந்த பதவியையும் கேட்டு பெறவில்லை.. பாஜக மாநில தலைவர் ரேஸில் இருக்கிறீர்களா? தமிழிசை அளித்த பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவின் கட்சி விதிகளின்படி ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மாநில தலைவர் தேர்வு செய்யப்படுவர். அதேபோல் ஒரு நபருக்கு 2 முறை மட்டுமே தலைவர் பதவி வழங்க முடியும். அதற்கேற்ப மாநில தலைவர்கள் மற்றும் கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்ய பாஜக தலைமை தரப்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஏற்கனவே 2 கட்ட மாவட்டத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ஜன.31ல் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் கிஷன் ரெட்டி இருவரும் சென்னை வரவுள்ளனர். இதனால் பாஜகவின் அடுத்த மாநிலத் தலைவருக்கான நியமனம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு பாஜக மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றார்.

Annamalai BJP

இதனைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு அந்த பொறுப்பு அளிக்கப்பட்டது. தற்போது சுமார் 4 ஆண்டுகளாக அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையின் கீழ் பாஜக சந்தித்த தேர்தல்களில் பெரியளவில் வெற்றிகள் கிடைக்கவில்லை. இதனிடையே தமிழ்நாட்டில் இன்னும் 14 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.

இதனால் கடந்த முறையை போல் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக விருப்பம் காட்டுவதாக சொல்லப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் இணைய வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளது. இந்த நிலையில் அதிமுகவுடன் சுமூகமாக செல்லக் கூடிய தலைவரை பாஜக நியமிக்கும் என்று கூறப்படுகிறது.

பாஜக மாநில தலைவருக்கான ரேஸில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் இருக்கின்றனர். இந்த நிலையில் மாநில தலைவருக்கான ரேஸில் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு தமிழிசை செளந்தரராஜன் பதில் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவை பொறுத்தவரை கிளைத் தலைவர் முதல் மண்டலத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் மாநில தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார். தற்போதைய தமிழக பாஜகவின் மாநில தலைவர் சிறப்பாக செயலாற்றி கொண்டிருக்கிறார். கட்சியின் அடிப்படையில் அதற்கான விதிமுறைகள் இருக்கிறது. அதில் யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அவர்களை கட்சி தேர்ந்தெடுக்கும். என்னை பொறுத்தவரை கட்சியில் தொண்டராக மட்டுமே பணியாற்றி கொண்டிருக்கிறேன்.

என்றைக்கும் அப்படிதான் பணியாற்றுவேன். எந்த ஆசையிலும் ஆளுநர் பொறுப்பை விட்டு வரவில்லை. பதவி ஆசையில் வரவில்லை. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எளிய தொண்டராகவே வந்திருக்கிறேன். நான் தலைவர் பதவிக்கு ஆசைப்படுகிறேன், நான் அதற்காக பணியாற்றுகிறேன் என்று சொல்வதில் துளியளவும் உண்மை கிடையாது.

அந்தமான் பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பதால், அதற்காக தான் டெல்லிக்கு சென்றேன். அதுகுறித்து தேசிய பாஜக தலைவர் என்னிடம் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டில் எந்த பதவியையும் கேட்கும் பழக்கம் கிடையாது. 1999 முதல் பாஜகவுக்காக செயல்பட்டு வருகிறேன். எந்த பதவியும் நான் கேட்டு பெற்றதில்லை. என் பணியை பார்த்து அளிக்கப்பட்டது தான் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் அண்ணாமலை இடையில் மோதல் போக்கு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+