தப்பிப்பாரா தங்கம் தென்னரசு.. ரூ.76 லட்சம் சொத்துக்குவிப்பு வழக்கு! உயர்நீதிமன்றம் இன்று வாதம்
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பு வாதங்கள் தொடங்க உள்ளன.
தமிழ்நாடு நிதித்துறை அமைச்சராக இருப்பவர் தங்கம் தென்னரசு. கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவையிலும் தங்கம் தென்னரசு இடம் பெற்றிருந்தார். அப்போது இவர் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி முதல் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூ.76 லட்சத்து 40 ஆயிரத்து 443 மதிப்பில் சொத்துக்களை குவித்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என தங்கம் தென்னரசு தரப்பு மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி ஆகியோரை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்ற தங்கம் தென்னரசு உள்ளிட்டோரை விடுவித்த உத்தரவை மறுஆய்வு செய்ய தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இது தொடர்பாக தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி பதில் அளிக்க உத்தரவிடபட்டு உள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்பு கடந்த நவம்பர் 9 ஆம் தேதி இந்த விசாரணைக்கு வந்தபோது மேல்முறையீடு தொடர்பான விபரங்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இதுபோன்ற வழக்குகளை விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் வழக்கு தொடர்பாக வாதங்களை மேற்கொள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பிற்கு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த நிலையில் இன்று சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தங்கம் தென்னரசு தரப்பு வாதங்கள் தொடங்க உள்ளன.












Click it and Unblock the Notifications