திமுக அரசு மீது பாய்ந்த அர்ஜுன் சம்பத் .. மகாவிஷ்ணுவுக்கு ஆதரவாக அதிரடி முடிவு
சென்னை: இந்து சமயத்துக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு திமுக துணை நிற்கிறது.. இந்த நிலை மாற வேண்டும்... தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பள்ளிகளில் பைபிள் விநியோகம் செய்யப்படுகிறது.. இதை யாரும் கேட்பதில்லை என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மகாவிஷ்ணு என்பவர், ஆன்மீகம் குறித்தும் மறு ஜென்மம் குறித்தும் பாவம் புண்ணியம் குறித்தும் பேசினார். அப்படி மகாவிஷ்ணு பேசும்போது மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் புகார் எழுந்தது. தொடர்பாக ஆசிரியர் சங்கர் என்பவர் மகாவிஷ்ணுவுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை அடுத்து பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து பள்ளிகளில் நடந்த செயல்பாடுகள் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். மேலும் மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் சார்பில் வழக்கம் தொடரப்பட்டது. இதை அடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணுவை சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கு சில ஆன்மீகவாதிகள் மற்றும் மகாவிஷ்ணு ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பாஜகவினரும் மகாவிஷ்ணுவின் கைதை பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் திருவள்ளூர் என்.ஜி.ஓ., நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பூஜை செய்து வணங்கினார்.
அப்போது, அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில்: "இந்து மதத்துக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு ஆளும் திமுக துணை நிற்கிறது. இந்த நிலை உடனடியாக மாறவேண்டும்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பள்ளிகளில் பைபிள் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இதைப் பற்றி எல்லாம் யாரும் கேட்பதில்லை. ஆனால் சென்னையில் அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 'பரம்பொருள் அறக்கட்டளை' என்ற அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு, சமீபத்தில் ஆற்றிய சொற்பொழிவில் திருக்குறள் பேசி அதற்குண்டான பொருள் குறித்து விளக்கி பேசியிருந்தால்..
அதில் அந்த பள்ளியில் கம்யூனிஸ்ட் சிந்தனையுள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியர் வேண்டுமென்றே எந்தவித சகிப்புத்தன்மை இல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இந்த சூழலில் மகாவிஷ்ணுவை தீவிரவாதியை கைது செய்வது போல், சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். மகாவிஷ்ணுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் இந்து மக்கள் கட்சி சார்பில் நாங்கள் அறப்போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உளளது. தமிழகத்தில் பட்டியலின மக்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" இவ்வாறு அர்ஜூன் சம்பத் திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.












Click it and Unblock the Notifications