ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ரவுடி சீசிங் ராஜாவின் கூட்டாளியை தூக்கிய தாம்பரம் போலீஸ்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய நண்பரான சஜித் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சஜித்தை தாம்பரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது சஜித்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறாரகள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 7 ஆம் தேதி பட்டப்பகலில் வீட்டருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில், புதிய வீடு கட்டும் பணிகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த போது, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தமிழகத்தையே உலுக்கியது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 பேர் கைது: ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிகரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி, திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், நூர் விஜய், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்போ செந்தில், சீசிங் ராஜா: இதில் முக்கிய நபராக கருதப்பட்ட திருவேங்கடம் என்ற ரௌடி, போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர் செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முக்கிய நபர்கள் பலரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்தில் மற்றும், ரவுடி சீசிங் ராஜா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சமீபத்திய புகைப்படம்: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக பிரபல ரவுடி சம்போ செந்தில் மீது போலீசார் சந்தேகப்படுகின்றனர். சம்போ செந்தில், வெளிநாடு தப்பிச் சென்று உள்ளதாக கூறப்படும் நிலையில், சென்னை போலீசார் மத்திய அரசு உதவியை நாடி, இண்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பி அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவரது சமீபத்திய புகைப்படமும் வெளியாகியுள்ளது.
சஜித் கைது: அதேபோல ரவுடி சீசிங் ராஜாவும் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார். சீசிங் ராஜாவை போலீசார் தேடி வரும் நிலையில், அவரது நெருங்கிய நண்பரான சஜித் கைது செய்யப்பட்டுள்ளார். சஜித் மீது 4 கொலை வழக்குகள், 5 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. கடந்த சில வருடங்களாக சஜித் தலைமறைவாக இருந்த நிலையில் தாம்பரம் காவல்துறை கைது செய்துள்ளது. சஜித்திடம் தாம்பரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications