"எடப்பாடிய புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்!" திடீரென சுற்றிவளைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்! ஸ்டன் ஆன உதயநிதி
ஓபிஎஸை நேரில் சந்தித்துவிட்டுத் திரும்பிய உதயநிதியை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் தாயார் கடந்த மாதம் காலமானார். இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உதயநிதியிடம் பரபர கோரிக்கை ஒன்றை வைத்தனர்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியாருக்கு வயது மூப்பு காரணமாகக் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு இருந்து வந்தது.
இந்தச் சூழலில் கடந்த மாதம் 25ஆம் தேதி பழனியம்மாள் நாச்சியார் காலமானார். அவருக்கு வயது 95. அவரது மறைவுக்கு அப்போதே பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

முதல்வர் ஆறுதல்
திமுகவில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் அன்றைய தினமே ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்தச் சூழலில் முதல்வர் ஸ்டாலின் ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். பசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார். சென்னையில் இன்று அதிகாலை முதலே நல்ல மழை பெய்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ் வீட்டிற்குச் சென்றார்.

உதயநிதி கார் முற்றுகை
அப்போது அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் உடன் சென்றனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளோம். முதல்வரும் அமைச்சர் சேகர்பாபுவும் நானும் ஓபிஎஸை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தோம்" என்றார். செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு அமைச்சர் உதயநிதி அங்கிருந்து கிளம்ப காரில் ஏறினார். அப்போது அங்கிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உதயநிதியின் காரை முற்றுகையிட்டனர்.

எடப்பாடியைக் கைது செய்க
அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உதயநிதியைப் பார்த்து, "சுமத்ராவில் ஏற்பட்ட மிகப் பெரிய சுனாமி.. எடப்பாடி பழனிசாமியைக் கைது செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். கோடநாடு வழக்கை விசாரிப்போம் என்று தேர்தல் வாக்குறுதியாகவே கொடுத்திருந்தீர்கள். எனவே, அந்த வழக்கை விசாரிக்க வேண்டும் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும். எடப்பாடியை புடிச்சு உள்ளே தூக்கி போடுங்க சார்" என்றனர். இதைக் கேட்டதும் அமைச்சர் உதயநிதி ஒரு நிமிடம் ஸ்டன் ஆகிவிட்டார்.

உதயநிதி ஷாக்
முதலில் ஏதோ கோரிக்கை தரவே வருகிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி நினைத்தார். இருப்பினும், அவர்கள் திடீரென எடப்பாடியைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சொன்னதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் பேச்சுக்கு எந்தவொரு பதிலையும் சொல்லாத உதயநிதி கைகளைக் கூப்பி வணக்கம் சொல்லியவாறே அங்கிருந்து கிளம்பிவிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அமைச்சர் உதயநிதியிடம் வைத்த கோரிக்கை குறித்து விளக்கினர்.

கோடநாடு வழக்கு
அவர்கள் கூறுகையில், "மிக பெரிய சுனாமி எடப்பாடி தான். கோடநாடு வழக்கில் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி எடப்பாடியை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். எடப்பாடி எங்களை எல்லாம் பிரித்து வேடிக்கை பார்க்கிறார். கட்சியை உடைக்கிறார். இவர் என்ன எம்ஜிஆரா.. இல்லை ஜெயலலிதாவா.. இவரால் தனியாக சென்றெல்லாம் வாக்குகளைப் பெற முடியாது..

ஓபிஎஸ் தான் தலைமை
ஜெயலலிதா இருக்கும் வரை ஓபிஎஸ் சிங்கம் போல இருந்தார். இப்போது அவரை வேண்டுமென்றே கட்சியில் இருந்து வெளியே அனுப்பியுள்ளனர். ஓபிஎஸ் என்ன தவறு செய்தார். அவர் தவறு செய்திருந்தால் நாட்டு மக்களிடம் வெளிப்படையாகச் சொல்லலாமே.. அதை விட்டுவிட்டு அநியாயமாகக் கட்சியை உடைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். எங்களுக்கு நீதி வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் பிடித்து ஜெயிலில் போடுங்கள். எங்கள் சிங்கம் ஓபிஎஸ் மீண்டும் தலைமையேற்க வேண்டும்.

பரபரப்பு
வேறு யாரும் எங்களுக்குத் தேவையில்லை. அரசியல் ரீதியாக எதிர்த் தரப்பில் இருந்தாலும் தாயார் மறைவுக்கு ஓபிஎஸிடம் முதல்வர் நேரில் வந்து இரங்கல் தெரிவித்தார். அவரிடமும் இதே கோரிக்கையை முன்வைத்தோம்" என்றனர். அதிமுகவில் எடப்பாடிக்கும் ஓபிஎஸுக்கும் இடையே மோதல் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஒரு தரப்பு மற்றொரு தரப்பைச் சாடி கடுமையாக அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்தச் சூழலில், அமைச்சர் உதயநிதியை முற்றுகையிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications