கற்பனை உலகில் வாழக்கூடாது.. ஆணவம் உண்மையை மறைக்கும்.. கொதித்து பேசிய செங்கோட்டையன்!
ஈரோடு: கோபிசெட்டி பாளையத்தில் தவெக சார்பில் அம்பேத்கர் உருவ படத்திற்கு அக்கட்சியின் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன் கூறுகையில், ஆணவம் உண்மையை மறைக்கும் கற்பனை உலகில் வாழக்கூடாது. இளைஞர்களின் எழுச்சி நாயகன், தமிழகத்தை ஆளப்போகும் விஜய், விரைவில் சுற்றுப்பயணம் செய்வார் என்று கூறினார்.
தமிழக வெற்றிக் கழக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது உருவபடத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இளைஞர்களின் எழுச்சி நாயகன் விஜய்
தமிழகம் முழுவம் மாவட்ட அலுவலகங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாமேதை அம்பேத்கரின் நினைவு நாள் இன்று ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நினைவுநாளில் அவரது புகழை போற்றும் வகையில் அவரது புகைப்படத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.
இது தலைமை கழகத்தின் ஆணைப்படி நடக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆணவம் என்பது உண்மையை மறைக்கும். கற்பனை உலகில் வாழ்ந்துகொண்டு இருக்கக் கூடாது. இளைஞர்களின் எழுச்சி நாயகனாக, எதிர்காலத் தமிழகத்தை ஆளப்போகின்ற தலைவர் விஜய் அவர்கள் இன்று சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
சசிகலா குறித்த கேள்வி
ஆகவே இளைஞர்களின் எழுச்சி நாயகன் மட்டுமில்லை, எதிர்கால தமிழகத்தை ஆளும் சக்தியாக தமிழக மக்களால் உருவாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது சசிகலா நீங்கள் எடுத்த முடிவு அவசரப்பட்டு எடுத்த முடிவு என கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு செங்கோட்டையன் பதில் எதுவும் அளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
நேற்று செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து சசிகலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், "ஒருவர் மேல் இருக்கின்ற கோபத்தினால் அவசரப்பட்டு முடிவு எடுக்க கூடாது.. அவர் எடுத்த முடிவு அவசப்பட்ட எடுத்த முடிவாக என்னுடைய கருத்தாக இதை சொல்கிறேன்" என்று கூறியிருந்தார்.
ஆணவம் அழிவைத் தரும்
தவெகவில் இணைந்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் அடுத்து அதிமுக ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி பேசி வருவதை விமர்சிக்கும் விதமாக, கற்பனை உலகில் வாழக்கூடாது, ஆணவம் அழிவைத் தரும் என மீண்டும் காட்டமாக பேசியிருக்கிறார் செங்கோட்டையன்.
அம்பேத்கர் நினைவு அஞ்சலி
தொடர்ந்து செங்கோட்டையன் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- "தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் கல்வி, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்க்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சட்ட மேதை, அண்ணல் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்படுகிறது.
கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் அண்ணல் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தினேன். இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. சத்தியபாமா, மாவட்ட கழக செயலாளர் திரு. பிரதீப்குமார் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications