ஜெயலலிதா மறைந்தவுடன் "அமைதியான பார்வையாளர்" ஓபிஎஸ் முதல்வரானது தற்செயலான நிகழ்வல்ல! பகீர் அறிக்கை
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு சிறிதும் காலம் தாழ்த்தாமல் தமிழக முதல்வர் பதவிக்கு தன்னை பொருத்திக் கொள்ள தயார் நிலையிலிருந்தது தற்செயலான நிகழ்வு அல்ல என ஆறுமுகசாமி ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் மர்மங்கள் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டுமானால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தார். இந்த ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையானது அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை
இதையடுத்து இன்றைய தினம் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கலானது. இதில் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றே குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், சிகிச்சை முறைகள் குறித்தெல்லாம் மருத்துவர்களிடம் சாட்சியம் பெற்றது ஆணையம்.

அலட்சியம்
இதில் ஒவ்வொரு விஷயத்திலும் அலட்சிய போக்கு இருந்ததாகவே தெரிகிறது. அது போல் மரண தேதி விவகாரத்திலும் முரண்பாடு உள்ளது. மறைந்த முதல்வரின் அண்ணன் மகன் தீபக்கின் சாட்சியத்தின்படி மறைந்த முதல்வரின் மரண நேரத்தை மிகவும் துல்லியமாக நிர்ணயிக்க முடியும். ஜெயலலிதாவின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பூங்குன்றன் ஆகிய இருவரின் தகவலின்படி ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்.

இறந்தது எப்போது
அன்றைய தினம் மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள்ளாக இறந்திருக்கிறார். மறைந்த நேரத்தை கருத்தில் கொண்டு ஜெயலலிதா இறந்த முதலாமாண்டு நினைவை தீபக் டிசம்பர் 4 ஆம் தேதியே அனுசரித்தார். இந்த ஆணையத்தின் பார்வையில் மறைந்த முதல்வர் 4.12. 2016 அன்று பிற்பகல் 3.50 மணிக்கு காலமானார்.

நெருங்கிய வட்டாரம்
ஓபிஎஸ் மறைந்த முதல்வரது நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர். அவரது வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்திருந்தார். மறைந்த முதல்வரின் மறைவுக்கு பிறகு சிறிதும் காலம் தாழ்த்தாமல் தமிழக முதல்வர் பதவிக்கு தன்னை பொருத்திக் கொள்ள தயார் நிலையிலிருந்து மறைந்த முதல்வரின் வாரிசாக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது தற்செயலான நிகழ்வல்ல அல்லது நிகழ்வாகத் தோன்றவில்லை.

மர்ம சூழ்ச்சி
அதிகார மையத்தின் மர்மமான சூழ்ச்சிகளால் புதிதாக கிடைத்த பதவி அவருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஏமாற்றத்தினால் கோபமடைந்த ஓபிஎஸ் அரசியல் லாபத்தை அடையும் நோக்கில் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தர்மயுத்தம் தொடங்கினார். ஒரு அமைதியான பார்வையாளராக இருந்த ஓபிஎஸ், அப்பல்லோ மருத்துவமனையில் என்ன நடந்தது , குறிப்பாக சிகிச்சை முறையில் என்ன நடந்தது என்பதை அவர் முழுமையாக அறிந்திருந்தார்.

தர்மயுத்தம்
தனது பதவியை இழந்த பின்னர் அவர் தர்மயுத்தத்தை நாடி சிபிஐ விசாரணையை கோரினார். எனினும் விதிப்படி துணை முதல்வர் பதவிக்கு அவர் தன்னை பொரத்தி கொள்ள வேண்டியிருந்தது. இதுவும் வல்லவனின் தந்திரமாக இருக்கலாம். அவர் விரும்பியதில் ஒரு பகுதி மட்டுமே அவருக்கு கிடைத்திருப்பினும் மாற்றத்தின் மாறாத தன்மையாக ஒரு புதிய பரிமாணத்தில் செய்தித்தாளில் வெளியான மறைந்த முதல்வரது மறைவில் மறைந்துள்ள மர்மம் பற்றிய பொதுமக்களின் அறிக்கைகள், வதந்திகள், மற்றும் சந்தேகங்களைக் கொண்ட செய்தியின் அடிப்படையிலேயே இந்த ஆணையம் அமைக்கப்பட்டது என குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications