விஜயகாந்த் இறுதி ஊர்வலம்.. அப்படியே ஸ்தம்பித்த சென்னை சாலைகள்.. லைவ் மேப் பாருங்கள்
சென்னை: கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் இப்போது நடந்து வரும் நிலையில், பல முக்கிய சாலைகளில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் விஜயகாந்த்.. ரஜினி, கமல் என்று இரு நட்சத்திரங்கள் தமிழ் திரை உலகை ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அப்போது அவர்களைத் தாண்டி தனக்கான இடத்தை பிடித்தவர் விஜயகாந்த்

விஜயகாந்த் சினிமாவை தாண்டி அரசியலிலும் இறங்கி அதிர வைத்தவர். கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் நட்சத்திரங்கள் இருக்கும் போதே மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்க அரசியலில் நுழைந்தவர்.
விஜயகாந்த்: கட்சி ஆரம்பிக்கும் முன்பே, அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதனால் அப்போதே அவர்கள் உள்ளாட்சித் தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருந்தனர். குறிப்பாக 2011இல் அவர் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தையும் அவர் பெற்றார். அப்போது தமிழக அரசியலில் தவிர்க்கவே முடியாத இடத்தில் அவர் இருந்தார்.
"அண்ணன் விஜயகாந்த் எனக்கு செய்த உதவி.." நெகிழ்ச்சியாக பேசிய நடிகர் விஜய்.. டிரெண்டாகும் பழைய வீடியோ
இப்படி தமிழக அரசியலில் முக்கிய இடத்தில் இருந்த விஜயகாந்த்திற்குக் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. அதனால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைக் குறைத்துக் கொண்டார். கடந்த மாதம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இம்மாத தொடக்கத்தில் டிஸ்சார்ஜ் ஆனார். தொடர்ந்து அவர் தேமுதிக கட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
மறைவு: இருப்பினும், அதில் அவர் ரோலிங் சேரில் தான் அவரை அழைத்து வந்தனர். எப்போதும் கம்பீரமாகவே அவரை பார்த்த அவரது தொண்டர்களுக்கு அவரது தோற்றம் கலங்க வைப்பதாக இருந்தது. இதற்கிடையே அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். நிமோனியா பாதிப்பால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு இப்போது இப்போது பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், பலரும் நேரிலும் அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக முதலில் அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், அங்கே மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. அங்கே கோயம்பேடு பஸ் ஸ்டான்ட், கோயம்பேடு மெட்ரோ, தனியார் வணிக வளாகம் என இருப்பதால் அங்கு கடும் இட நெருக்கடி ஏற்பட்டது. இதனால் இன்று அதிகாலை அவரது உடல் தீவுத்திடலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இறுதி ஊர்லம்: பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் விஜயகாந்த் உடலுக்கு இன்று அதிகாலை முதலே அஞ்சலி செலுத்தினர். அதிகாலை தொடங்கி மக்கள் கூட்டம் குறையாமல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. பொறுமையாகக் காத்திருந்து பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்னும் சற்று நேரத்தில் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதற்கிடையே விஜயகாந்த் உடலை இப்போது தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. விஜயகாந்த் உடல் இப்போது நகரின் முக்கிய சாலைகள் வழியே எடுத்துச் செல்லப்படும் நிலையில், சாலையின் இரு பக்கம் பொதுமக்கள் அணி வகுத்து நின்றனர். மக்கள் பலரும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்: அவரது உடல் தீவுத்திடலில் இருந்து ஈவேரா சாலை வழியாக கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கே மற்ற வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கும் அதைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் கடுமையான டிராபிக் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் செல்லும் வழிநெடுக பொதுமக்கள் கூடியிருக்கும் நிலையில், போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கிறது. இது விஜயகாந்த் மீது அவரது ரசிகர்களும், பொதுமக்களும் எந்தளவுக்கு அன்பு வைத்துள்ளனர் என்பதையே காட்டுவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications