சிவகார்த்திகேயன் படத்திற்கு சிக்கல்! "பராசக்தி" திருடப்பட்ட கதை! ஹைகோர்ட்டில் உதவி இயக்குநர் வழக்கு
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த "பராசக்தி" என்ற படத்தின் கதை திருடப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவி இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்த பராசக்தி என்ற படம் வரும் ஜனவரி 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படம் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் பராசக்தி படம் திருடப்பட்ட கதை என சென்னை ஹைகோர்ட்டில் இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப் போரை மையமாக வைத்தே "செம்மொழி" என்ற பெயரில் கதை எழுதியிருந்தேன். இதை 2010ஆம் ஆண்டு தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் நான் பதிவு செய்திருந்தேன்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெண் சிங்கம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய போது செம்மொழி படத்தின் கதையை கருணாநிதியிடம் கூறினேன். மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொல்லியிருப்பதால், கதையை எழுதும்படி கூறி எனக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் நான் பதிவு செய்திருந்த கதையை பல தயாரிப்பாளர்களிடம் கொடுத்திருந்தேன். தயாரிப்பாளர் சேலம் தனசேகரன் எனது கதையை நடிகர் சூர்யாவிடம் கொடுக்க, அவர் அதை இயக்குநர் சுதா கொங்கராவிடம் கொடுத்து விட்டார்.
பின்னர் புறநானூறு என்ற பெயரில் சூர்யா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் எனது செம்மொழி கதை, கைவிடப்பட்ட அந்த படம் தற்போது பராசக்தி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனது கதையை திருடி பராசக்தி என்ற படத்தை எடுத்துள்ளார்.
இது குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் பராசக்தி படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
செம்மொழி கதையையும் பராசக்தி கதையையும் ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கும்படி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் இரு கதைகளும் ஒன்றுதானா? இல்லையா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என கூறி ஜனவரி 2ஆம் தேதிக்குள் ராஜேந்திரனின் மனுவுக்கு பதிலளிக்கும்படி பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கராவுக்கும் தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரரின் புகார் மீது அனைத்து தரப்பினரையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனால் இந்த படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த படத்திற்கு தணிக்கை பிரச்சினை உள்ளது. இந்த படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கக் கோரியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் , மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த தணிக்கை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த கதை திருட்டு வழக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் எந்த மாதிரியான உத்தரவை நீதிபதி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. செம்மொழி கதையையும் படித்துவிட்டு பராசக்தி படத்தையும் நீதிபதி பார்த்துவிட்டு பின்னர் இரு கதைகளும் ஒன்றுதானா, இல்லையா என்ற முடிவுக்கு வருவார் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications