சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் இல்லத்திற்குச் சென்ற திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், அவரது பச்சிளம் குழந்தைக்கு சீர் கொண்டு வந்து வழங்கியது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.. மேளதாள வாத்தியங்கள் முழங்க வந்த அவரை, சீமான் தனது வீட்டின் வெளியே வந்து நேரில் வரவேற்று அன்போடு அழைத்துச் சென்றார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 7 வயதில் ஒரு மகன் உள்ளார்..

சீமான் - கயல்விழி
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சீமான் - கயல்விழி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.. 60 வயதில் இரண்டாவது முறையாக தந்தையான சீமானுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் என பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
இந்த மகிழ்ச்சியான சூழலில், திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன், சீமானின் வீட்டிற்கு நேரில் சென்று தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.. குழந்தைக்கு தாய்மாமன் சீர் கொண்டு வருவதை போல, மிக பிரம்மாண்டமாக இந்த நிகழ்வை அவர் முன்னெடுத்துள்ளார்..
சீமானுக்கு குவியும் வாழ்த்து
தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, பல தாம்பூல தட்டுகளில் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பல்வேறு மங்கல பொருட்களை சுமந்து கொண்டு அனிதா ராதாகிருஷ்ணன் சீமானின் இல்லத்திற்கு வருகை தந்தார்.. மேளதாளங்கள் முழங்க அனிதா ராதாகிருஷ்ணன் வருவதை அறிந்த சீமான், மிகுந்த மரியாதையுடனும் நெகிழ்ச்சியுடனும் வீட்டின் வாசல் வரை நேரில் சென்று அவரை வரவேற்றார்.
வீட்டின் வாசலில் வைத்து அனிதா ராதாகிருஷ்ணனை கைகுலுக்கி வரவேற்ற சீமான், அவரை மிகவும் அன்போடு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.. அரசியல் ரீதியாக இருவேறு துருவங்களாக இருந்தாலும், தனிப்பட்ட முறையிலும், கலாச்சார ரீதியாகவும் இரு தலைவர்களும் வெளிப்படுத்திய இந்த நட்புணர்வு அங்கு கூடியிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது..
தாய்மாமன் சீர் அனிதா ராதாகிருஷ்ணன்
தொடர்ந்து, சீமானின் பச்சிளம் குழந்தைக்கு அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்த கையாலேயே தங்க செயினை அணிவித்து மகிழ்ந்தார்.. அரசியல் களத்தில் எப்போதும் காரசாரமான விவாதங்களில் ஈடுபடும் தலைவர்கள், இத்தகைய சுப நிகழ்வுகளில் அன்பை பரிமாறி கொள்வது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகியுள்ளது.. அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த வருகையும், அவர் கொண்டு வந்த சீர் வரிசைகளும் தற்போது அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது..
வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்ட கட்சிகளின் தலைவர்கள், குடும்ப நிகழ்வுகளில் இவ்வளவு நெருக்கம் காட்டியது, தமிழக அரசியலில் ஆரோக்கியமான ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.. சீமானின் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வு, அவரது ஆதரவாளர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெகிழ்ச்சி சம்பவம்
தொடர்ந்து பலரும் சமூக வலைதளங்களில் சீமானின் குடும்பத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.. அதே நேரத்தில், இந்த நிகழ்வை அரசியல் விமர்சகர்கள் ஆச்சரியத்துடன் கவனித்து வருகின்றனர்.
எவ்வளவுதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மனித நேயமும், நட்பும் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.. இதையொட்டி சீமானின் இல்லத்தில் உறவினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என பலரும் திரண்டு வந்து குழந்தையை வாழ்த்தி சென்ற வண்ணம் உள்ளனர்.. தமிழக அரசியல் களத்தில் இந்த நிகழ்வு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!












Click it and Unblock the Notifications