அள்ள அள்ள தங்கம்.. போல்ட், நட்டு இல்லையா.. ஆடிப்போன அதிகாரிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் ஷாக் சம்பவம்
சென்னை: மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து தங்கத்தை போல்ட், நட்டாக மாற்றி கடத்த முயன்ற சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தங்கம் எனத் தெரியாமல் இருப்பதற்காக போல்ட், நட்டு மீது பெயிண்ட் அடித்து நூதன கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் லட்சங்களைத் தொடும் அளவு தங்கம் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தங்க கடத்தலைத் தடுக்க தொடர்ந்து சுங்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் இச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

உள்நாட்டில் வரி விதிக்கப்பட்ட தங்கத்தின் விலை அதிகமாக இருக்கும் என்பதால் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்கின்றனர். இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கடும் கண்காணிப்பு, சோதனைகள் இருந்தாலும் தங்கத்தைக் கடத்துவதற்காக புது புது ஐடியாக்களுடன் களத்தில் இறங்குகின்றனர் இந்த கடத்தல் கும்பலினர்.
அந்த வகையில், மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து தங்கத்தை போல்ட், நட்டாக மாற்றி நூதன முறையில் கடத்த முயன்ற சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தங்கம் எனத் தெரியாமல் இருப்பதற்காக போல்ட், நட்டு மீது பெயிண்ட் அடித்து கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்துள்ளது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்த விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த 30 வயதான நபரின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது உடைமைகளை சோதனை செய்ததில் தங்கத்தினாலான 99 போல்ட், நட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அந்த போல்ட், நட்டுகள் தங்கம் என்பது தெரியாமல் இருக்கும் வகையில் அதன் மீது சில்வர் நிற பெயிண்டையும் அடித்துள்ளனர்.
இதையடுத்து, அந்த நபரிடமிருந்து ரூ. 85 லட்சம் மதிப்பிலான சுமார் 900 கிராம் எடைகொண்ட 99 தங்க போல்ட், நட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சுங்க இலாகா அதிகாரிகள் அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications