அண்ணாந்து பார்க்கும் ஆவடி.. கோயம்பேடு டூ பட்டாபிராம் மெட்ரோ.. தீவிரமடைந்த பணிகள்.. அசத்தல்!
சென்னை: ஆவடி வழியாக செல்லும் மெட்ரோவிற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ₹2,442 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாகத் தொடங்க மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 21.76 கி.மீ தூரத்திற்கான இந்த புதிய மெட்ரோ வழித்தடம் கோயம்பேடு தொடங்கி பட்டாபிராம் வரை நீளும். இது கோயம்பேடு, ஆவடி, மற்றும் பட்டாபிராம் போன்ற முக்கிய பகுதிகளை இணைக்கும். சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நகரின் மேற்குப் புற வளர்ச்சிக்கு இத்திட்டம் பெரும் உந்துசக்தியாக அமையும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே நகரப் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேலும் இரண்டு புதிய வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிக்க ஆலோசனை ஒப்பந்தங்களை வெளியிட்டுள்ளது. இதில் கலங்கரை விளக்கம் முதல் உயர் நீதிமன்ற மெட்ரோ வரையிலான வழித்தடம் 4-ன் நீட்டிப்பும், தாம்பரம்-கிண்டி-வேளச்சேரி இடையேயான புதிய வழித்தடமும் அடங்கும்.
சென்னை மெட்ரோவின் அறிவிப்புப்படி, வழித்தடம் 4-ன் நீட்டிப்பு சுமார் 7 கிலோமீட்டர் தூரம் இருக்கும். இது மெரினா கடற்கரை மற்றும் தலைமைச் செயலகத்திற்கு மெட்ரோ இணைப்பை வழங்குவதன் மூலம் தினசரி பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும். இதன்மூலம் நகரப் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு முக்கிய திட்டமான தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான வழித்தடம் சுமார் 21 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற புறநகர்ப் பகுதிகளை சென்னை மெட்ரோ ரயில் வழித்தடம் 1-ல் உள்ள கிண்டி மெட்ரோ நிலையத்துடன் இணைக்கும். இந்த புதிய வழித்தடம் பல போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் வசதியுடன் வடிவமைக்கப்படும்.
இந்த இரு திட்டங்களுக்கும் விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்கான ஆலோசனை ஒப்பந்தம் M/s Systra MVA Consulting India Pvt நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. வழித்தடம் 4-ன் நீட்டிப்பு திட்ட அறிக்கை தயாரிப்பிற்காக ₹38.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான திட்ட அறிக்கைக்காக ₹96.19 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விரிவான திட்ட அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 120 நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. எம்.ஏ. சித்திக், இ.ஆ.ப., முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. டி. அர்ச்சுனன் மற்றும் Systra MVA Consulting India Pvt நிறுவனத்தின் உயர் துணைத் தலைவர் திரு. பர்வீன் குமார் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் திரு. டி. லிவிங்ஸ்டோன் எலியாசர், திருமதி. ரேகா பிரகாஷ், டாக்டர். டி. ஜெபசெல்வின் கிளாட்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், பணியாளர்களும் உடனிருந்தனர். இந்த திட்ட அறிக்கைகள், வழித்தட பாதை அமையும் இடங்கள், பயணிகளின் எண்ணிக்கை, பல போக்குவரத்து முறைகளுடனான ஒருங்கிணைப்பு, மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை விரிவாக மதிப்பீடு செய்யும்.
இந்த ஆய்வுகள், எதிர்கால திட்டச் செயலாக்கத்திற்கும், தகவலறிந்த முடிவெடுப்பதற்கும் ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், நிலையான நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த திட்டங்கள் உதவும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications