Ayudha Pooja 2025: வெள்ளிக்கிழமை விடுமுறை தகவல் தவறானது - தமிழ்நாடு அரசு ஷாக் தகவல்
சென்னை: ஆயத பூஜை, விஜய தசமி, காந்தி ஜெயந்தி, சனி, ஞாயிறு என்று தொடர் விடுமுறைகளால் மக்கள் அதிகளவு வெளியூர் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இடையில் வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்த நிலையில், தமிழ்நாடு அரசு வருகிற வெள்ளிக்கிழமை (3.10.25) விடுமுறை வழங்கியதாக நேற்று தகவல் வெளியானது. இது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை. வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற தகவல் தவறானது என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் (TN Fact Check) பிரிவு தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (1.10.25) ஆயுத பூஜை, நாளை (2.10.25) விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 4 மற்றும் 5 ஆகிய தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களாகும். தொடர் விடுப்புக்காக ஏராளமான மக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். இதற்காக சிறப்புப் பேருந்து மற்றும் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர் விடுமுறை
சென்னையை பொறுத்தவரை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்களும் மற்றும் கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் வெளியூர் பயணம் செய்துள்ளனர். இதற்காக ஆங்காங்கே போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். "1,2 மற்றும் 4,5 ஆகிய தேதிகள் விடுமுறை உள்ளது. இதனால் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். இடையில் 3 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மட்டும் வேலை நாளாக உள்ளது. இதனால் அன்றைய தினம் விடுமுறையாக அறிவித்தால் மக்களுக்கு உதவியாக இருக்கும். அதற்கு பதிலாக மற்றொரு நாளை பணி நாளாக வைத்துக் கொள்ளலாம். "என்று கூறியிருந்தனர்.
அறிவிப்பு
இந்நிலையில் தமிழ்நாடு அரசு, அக்டோபர் 3 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை தினமாக அறிவித்ததாக நேற்று தகவல் வெளியானது. இதன்மூலம் சுமார் 5 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். மக்கள் மீண்டும் ஊர் திரும்புவதற்கும் கூடுதல் பேருந்து, ரயில்கள் இயக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.
மக்கள் லாங் வீக் எண்ட கிடைத்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை தொடர்பாக இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் (TN Fact Check) தங்களின் சமூகவலைதள பக்கத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தவறானது
அதில், "வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பான செய்தியை பகிர்ந்து, அக்டோபர் 3 ஆம் தேதி அரசு பொதுவிடுமுறை அல்ல. இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது." என்று கூறியுள்ளனர். இந்த தகவல் அரசு ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை விடுமுறை வெளியிடுவது தொடர்பாக மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications