சனாதன தர்மத்தின் சகோதரத்துவம், இரக்கத்தை பரப்பியவர் அய்யா வைகுண்டர்- மீண்டும் சர்ச்சையில் ஆளுநர் ரவி
சென்னை: நமது நாட்டின் முக்கிய பலமான சனாதன தர்மத்தின் முக்கிய மதிப்புகளான உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் செய்தியை அய்யா வைகுண்டர் பரப்பினார் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் பேசியிருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஆளுநர் ரவியின் பேச்சு தொடர்பாக ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: ஆளுநர் அவர்கள் திருநெல்வேலியில் அய்யா வைகுண்டர் அவர்களின் 193-ஆவது அவதார தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சியில் உற்சாகமிக்க ஏராளமான பக்தர்களுடன் கலந்து கொண்டார். அய்யா அவர்கள் முதன்முதலில் தோன்றிய அவதார பதி உள்ளிட்ட அய்யா பதிகள் மற்றும் அய்யா வழியை பின்பற்றுவோருள் முதன்மை மிக்க சாமித்தோப்பு பதி தலைவர்கள் இந்த நிகழ்வை ஆசீர்வதித்தனர். அய்யா வைகுண்டர் அவர்களின் போதனைகள் அடங்கிய அகிலத்திரட்டு அம்மானை என்ற நூல் பக்தர்களுக்காகவும் மக்களுக்காகவும் வெளியிடப்பட்டது. நமது நாட்டின் முக்கிய பலமான சனாதன தர்மத்தின் முக்கிய மதிப்புகளான உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தின் செய்தியை அய்யா அவர்கள் பரப்பினார். பாரதத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் சில சுயநலவாதிகள் வெறுப்பையும் பொய்யையும் பரப்பி வரும் நேரத்தில், அய்யா வைகுண்டர் அவர்கள் அருளிய போதனைகள் முன்னெப்போதையும் விட மிகவும் பொருத்தமானவை. இவ்வாறு ஆளுநர் ரவி கூறியதாக ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

முந்தைய சர்ச்சை என்ன?
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, இதேபோல அய்யா வைகுண்டர் சனாதன தரத்தை ஆதரித்தவர் என பேசினார் ஆளுநர் ரவி. இதற்கு கண்டனம் தெரிவித்த அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி, அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவது போல் வரலாற்றை திரித்து ஆளுநர் பேசியுள்ளார். ஆரிய கோட்பாட்டிற்கு அணி சேர்ப்பது போல் ஆளுநர் பேசியுள்ளது வருந்தத்தக்கது. அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் புரிந்து பேச வேண்டும். உருவ வழிபாடு, மொழி, பேதம், ஆண், பெண் பேதம், சாதிகள் இல்லை என பல கோட்பாடுகளை கூறியவர் அய்யா வைகுண்டர். அவர் சனாதனத்தை ஆதரித்தவர் என கூறியதை ஏற்கவே முடியாது. அய்யா வைகுண்டரை தனதாக்கிக் கொண்டு பட்டா போடுவதற்காக அவர்கள் பேசுவதை கண்டிக்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல ஆலோசனைகள் கூறுவதை விட்டுவிட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதுதான் ஆளுநர் ரவியின் வேலையா? அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்திற்கு எதிராக போர்க் குரல் கொடுத்தார். சமத்துவம் சகோதரத்துவத்தை வலியுறுத்தினார் என விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications