அபார்ட்மெண்ட்டில் துள்ளி விழுந்த குழந்தை "நலம்".. ஆனா தாய் இன்னும் “ஷாக்”கில் இருந்து மீளவில்லையாம்!
சென்னை: சென்னை ஆவடி திருமுல்லைவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மீட்கப்பட்ட குழந்தை நலமாக உள்ளது. குழந்தை தவறி விழுந்த அதிர்ச்சியில் இருந்து, அதன் தாய் இன்னும் மீளவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்த ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 4வது மாடியில், வெங்கடேஷ் - ரம்யா தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களது 7 மாத குழந்தை, அடுக்குமாடி குடியிருப்பின் 2வது மாடி பால்கனி தகர ஷீட்டில் தவறி விழுந்தது. 4வது மாடி பால்கனியில் நின்றபடி குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தாயின் பிடியில் இருந்து துள்ளி குழந்தை கீழே விழுந்ததாக தெரிகிறது.

தவறி விழுந்த அந்த குழந்தை, 2வது மாடியில் சன் சைடில் உள்ள தகர ஷீட்டில் விழுந்து அந்த ஷீட்டை பற்றிக் கொண்டு கதறி அழுதது. கண் இமைக்கும் நேரத்தில் குழந்தை தன் பிடியில் இருந்து விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய், “காப்பாத்துங்க” என சத்தம் போட்டுள்ளார்.
இதைப் பார்த்த அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள், துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு திரண்ட குடியிருப்பு வாசிகள், குழந்தை கீழே விழுவதைத் தவிர்க்கும் வகையில், பெரிய பெட்ஷீட்டை விரித்து பிடித்தபடி காத்திருந்தனர். இந்நிலையில், சிலர் குழந்தை இருந்த தளத்தின் கீழே இருந்த வீட்டின் பால்கனி வழியாக மேலே ஏறிச் சென்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதும் தான் அந்த குடியிருப்பு வாசிகள் நிம்மதி அடைந்தனர். உயிரைப் பணயம் வைத்து குடியிருப்பு வாசிகள் குழந்தையை மீட்கும் காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தக்க நேரத்தில் சமயோசிதமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்ட குடியிருப்பு வாசிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
“பெற்றோர் மீது எந்த தப்பும் இல்லை”.. குழந்தை தவறி விழுந்தது எப்படி? அக்கம்பக்கத்தினர் சொல்வது என்ன?
குழந்தையின் கை மற்றும் கால் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குழந்தையை உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து ஸ்கேன் எடுக்கப்பட்டு, எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், குழந்தை, பால்கனியில் இருந்து தவறி விழுந்த அதிர்ச்சியில் இருந்து, குழந்தையின் தாய் ரம்யா இன்னும் மீளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, பெற்றோரின் கவனக்குறைவால் குழந்தை விழுந்ததாக பலரும் விமர்சித்த நிலையில், குழந்தையை அதன் பெற்றோர் பொத்திப் பொத்தி வளர்த்தனர் என்றும், எதிர்பாராவிதமாக இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது, குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்றும் குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications