“பெற்றோர் மீது எந்த தப்பும் இல்லை”.. குழந்தை தவறி விழுந்தது எப்படி? அக்கம்பக்கத்தினர் சொல்வது என்ன?
சென்னை: சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 7 மாத குழந்தை விழுந்தது விபத்து தான், குழந்தையின் பெற்றோர் மீது எந்த தவறும் இல்லை என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஆவடி திருமுல்லைவாயில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் இரண்டாவது மாடி பால்கனியில் இருந்து 7 மாத குழந்தை ஒன்று இன்று தவறி சன் சைடில் விழுந்துள்ளது. பால் கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை சன் சைடு தகர ஷீட்டில் சரிந்தபடி கீழே வந்தது. இதைப் பார்த்து எதிரே உள்ள குடியிருப்பில் இருந்தவர்கள் பார்த்து கூச்சல் போட்டனர்.

பின்னர், சத்தம் கேட்டு அங்கு கூடிய இளைஞர்கள் குழந்தையை பாகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். ஒரு கட்டத்தில் குழந்தை மேற்கூரையில் சறுக்கி, நுனிக்கு வந்தது. அதைப் பார்த்ததும் அப்பகுதி மக்கள் அச்சத்தில் கூச்சல் போட்டனர். குழந்தை நடப்பது என்ன என்பதையே உணராமல் அழத் தொடங்கியது.
அதேசமயம், ஜன்னல் வழியாக ஏறி குழந்தையை மீட்கும் பணியில் இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டனர். முதலில் குழந்தை தவறி கீழே விழுந்தால் காயம் படாத வகையில் பெரிய ஜமுக்காளத்தை கொண்டு வந்து குழந்தையை பிடிக்க முயன்றனர். கீழ் வீட்டின் ஜன்னல் வழியாக மேலே ஏறிய இளைஞர், குழந்தையை ஒற்றைக் கையில் லாவகமாக பிடித்து தூக்கி காப்பாற்றினர்.
குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்த பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். நெஞ்சைப் பதற வைத்த இந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் பரவியது. குழந்தையை அஜாக்கிரதையாக விளையாட விட்ட பெற்றோரை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்தனர்.
வெங்கடேஷ் - ரம்யா தம்பதியினரின் 7 மாத குழந்தையான கிரண்மயி தான் இன்று தவறி விழுந்து காப்பாற்றப்பட்ட குழந்தை என தெரியவந்துள்ளது. இன்று காலை ரம்யா பால்கனி அருகே குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். பால்கனி அருகே சென்ற போது தாயின் கையிலிருந்து குழந்தை திடீரென தவறி விழுந்துள்ளது. மீட்கப்பட்ட குழந்தை நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், குழந்தை தவறி விழுந்த அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த அக்கம்பக்கத்தினர் இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ளனர். பெண்மணி ஒருவர் பேசுகையில், “இன்று நடந்தது பெற்றோரின் கவனக்குறைவால் என்று தயவுசெய்து நினைக்க வேண்டும். அந்த குழந்தையை அதன் பெற்றோர் பொத்திப் பொத்தி வளர்த்து வருகின்றனர். இது எங்களுக்கு நன்றாகத் தெரியும். இது விபத்து.
குழந்தை தவறுதலாக விழுந்துவிட்டது. எல்லோரும் சேர்ந்து தைரியமாக காப்பாற்றி உள்ளனர். ஹரி என்பவர் குழந்தையை காப்பாற்றி உள்ளார். அவருக்கு மிகவும் நன்றி. குழந்தை விழுந்தது பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications