4620 கோடி மோசடி.. ஹிஜாவு ஃபைனான்ஸ் கலைச்செல்வியின் ஜாமீன் மனு தள்ளுபடி.. கோர்டில் பரபர வாதம்
சென்னை: 4620 கோடி ரூபாய் முதலீடு மோசடி வழக்கில் ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நபரான கலைச்செல்வியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம், 15 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் 4620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து, இதுவரை 14 பேரைக் கைது செய்துள்ளது.

இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 15 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிர்வாகத்தின் முக்கிய நிர்வாகியின் மனைவியும் ஹிஜாவு நிறுவனத்தின் துணை நிறுவன இயக்குனர் கலைச்செல்வி நிதி நிறுவ மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, சுமார் 89 ஆயிரம் முதலீட்டாளர்களிடம், சுமார் 4620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளதாக கூறினார்.
16,500 நபர்கள் இதுவரை புகார்கள் அளித்துள்ளதாகவும், 40 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால் வெளிநாடு தப்பி செல்லவும் சாட்சிகள் மற்றும் ஆவணங்களை கலைக்க வாய்ப்புள்ளது. மேலும் மீட்க வேண்டிய தொகை அதிகம் எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் வாதிட்டார்.
அப்போது, முதலீட்டாளர் ஜெயலட்சுமி என்பவர் தரப்பில் வழக்கறிஞர் டி.செல்வம் ஆஜராகி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி இளந்திரையன், கலைசெல்வியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications