நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக கோஷம்.. நீதிமன்றங்கள் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜூலை 28) அனைத்து நீதிமன்ற வளாகங்களின் வாயில்கள் முன்பும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சாதி மற்றும் மத பாகுபாட்டுடன் நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் புகார் அனுப்பி இருந்தார். இதையடுத்து அவர் மீது நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.

"எனது தீர்ப்புகள் சாதிய ரீதியில் உள்ளதாக விமர்சிக்கிறீர்களா? இன்னும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா" என வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் திடீரென நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்காக வாஞ்சிநாதன் இன்று (ஜூலை 28) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வாஞ்சிநாதன் மீது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எடுத்துள்ள அவமதிப்பு நடவடிக்கைக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் பலரும், வழக்கறிஞர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஒரு நீதிபதியின் செயல்பாட்டின் மீது ஐயப்பாடு ஏற்படும்போது, அதனை பொறுத்து தகவல் தெரிவிக்க உள்ள ஒரு வழிமுறையினை கடைபிடித்து செயல்படுத்தியதற்காக, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வாஞ்சிநாதன் எந்த வகையிலும், பொதுவெளியில் பகிரப்படாத நிலையில் என் மீது இந்த அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறார். நீதியின் மாண்பினை கடைபிடிக்க, தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கு தானே நீதிபதியாக இருந்து விசாரணை செய்வது என்பது நியாயமான வழிமுறையாக இருக்காது.
ஒரு நீதிபதியின் நீதி பரிபாலனம் மீது சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அதனைப் பொறுத்து சட்டத்தில் கொடுக்கப்பட்ட வழிமுறைப்படி ஒரு அமைப்பு செயல்படுவதை தடுப்பது என்பது நீதித்துறையின் சரியான அணுகுமுறை இல்லை.
அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி பரிபாலனம் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் நீதித்துறை நடந்து கொள்ள வேண்டும் என்பதால் இது போன்ற குற்றச்சாட்டுகளை புறந்தள்ளி, தங்களது செயல்பாடுகளின் மூலமாக தங்களது நேர்மையான நீதி பரிபாலனத்தை நிலைநாட்டிட வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் சங்கங்களின் கூட்டு குழு கேட்டுக்கொள்கிறது.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை கைவிட வலியுறுத்தி வருகின்ற திங்கட்கிழமை (28.7.2025) அன்று காலை 11 மணி அளவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களின் வாயில் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, இன்று காலை தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் செயல்பாடுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதனால், நீதிமன்ற வளாகங்களில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications